![]() |
பரிவோடு உபசரித்த
காலம் போச்சு!
மேஜையில் வாழையிலை
விரித்துவைத்து
மரியாதை தந்த
இடைக்காலமும் போச்சு!
இன்று பந்தியின்
சிறப்பை அழித்துவிட்டு
நின்றுண்ணும் 'பஃபே' கலாச்சாரம் வந்தாச்சு!
பணக்காரப் பகட்டைக் காட்டுவதற்கே
பசியோடு வந்தவரை
நிற்க வைத்தாச்சு!
தெருவோரம் பசியின்
கொடுமையால்
தட்டேந்தி நிற்கும்
ஏழைகட்கும்,
பணத்தின் மிடுக்கில்
வந்தவரை எல்லாம்
தட்டேந்த வைக்கும்
செல்வந்தர்க்கும்
என்னதான்
வித்தியாசம் இங்கே?
கண்பார்வை அற்றவன்
நான்—
கையிலொரு தட்டேந்தி,
எந்தத் திசை
செல்வேனோ?
எவர்மீது மோதுவேனோ?
தட்டிலிருக்கும்
உணவு சிந்தாமல்
தடுமாறி நிற்பேனோ?
துணைக்கொருவர்
வந்தாலும்
துயரமிங்கு தீருமோ?
இடதுகையால்
உதவியாளர்க் கரம்பிடித்து,
வலதுகையால் கனத்த
பெருந்தட்டை ஏந்த முடியுமோ?
பெருமைக்கே பதினாறு
இருபதெனப் பதார்த்தங்கள்!
அத்தனை உணவின்
பாரத்தை
ஒற்றைக் கைதான்
தாங்குமோ?
கொஞ்சமாய் எடுத்து
உண்டு,
மீண்டுமொரு
முறைவந்து
நீண்டபெரும்
வரிசையில்
நிற்கத்தான் இயலுமோ?
கூடவே துணையழைக்க
வசதியில்லா மாற்றுத்திறனாளி,
யாரிடம் போய்த்தன்
பசியை முறையிடுவான்?
கால்கள் இல்லாதவன்
நான்—
ஊன்றுகோல் தாங்கி
நிற்பேனோ?
கையில் தட்டேந்தி
வரிசையில் நகர்வேனோ?
சுமை தாங்காக்
கால்களோடு
சுவைக்கத்தான்
முடியுமோ?
ஒற்றைக் கைமட்டுமே
உள்ளவன் நிலையென்ன?
தட்டினைப் பிடிப்பதோ?
உணவினை எடுப்பதோ?
விருந்தென்ற பெயரில்
இந்த அவலம் தேவையா?
வசதியான
வாழ்வைவிட்டு நரகத்தில் வீழ்வதா?
உணவைப் பரிமாற
மட்டுமே ஆள் உண்டு;
உதவத்தான் இங்கு
எவருமில்லை!
மாற்றுத் திறனாளிகள்
நாங்களெல்லாம்வந்தால் உபசரிக்க வழியுமில்லை!
ஆடம்பரப் போர்வையிலே
ஆதங்கத்தை
விதைத்துவிட்டு,
'நாகரிகம்' என்ற பெயரினிலே
நமக்கே நாமடிமையாய்
மாறினோமே!
சுய கஷ்டத்தை நாமே சுமந்துகொண்டு
'ஸ்டைல்' என்று சமத்துவத்தை மறந்துவிட்டோமே!
அமர்ந்துண்ட மரபு
போய், நின்றுண்ணும் நிலையாகி,
இனி அடுத்து என்ன
ஆகுமோ?
உண்பதன் மேன்மையை
மறந்துவிட்டு மனிதன்
எங்கேதான் போய்ச்
சேருவானோ?
பாய்போட்டு
அமரவைத்து
பரிவோடு உபசரித்த
பழங்காலப்
பண்பாடே...
என்றென்றும்
உசந்ததையா!
***இந்திராஸ்ரீ
கவிஞரும்
எழுத்தாளருமான திருமதி. இந்திராஸ்ரீ அவர்கள் பார்வையற்றவர். பார்வையற்றோர் அதிகம்
புழங்கும் பல டெலகிராம் குழுக்களில், கவிதைகள், சிறுகதைகள், பயணக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி
வருகிறார்.
தொடர்புக்கு: indrasree007@gmail.com
பேச: 9840863828

கருத்துகள்:
Post a Comment
உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்