நேரடியாக முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

சிந்தனை: பிக் பாஸ்: அதிகாரத்தின் கர்ஜனையும் அறத்தின் சாட்டையடியும்! கார்த்திக். வெ

தொலைக்காட்சியின் ஒரு முனையில் எழும் நிஜமான மோதல்கள் பல நேரங்களில் ஒரு சமூகத்தின் பல நூற்றாண்டு கால வரலாற்று ஆவணங்களின் சுருக்கப் பிரதியாக மாறிவிடுகின்றன.

 

பிக் பாஸ் மேடையில் ஜேசன் மற்றும் முனியம்மா இடையே நடைபெற்ற மோதலும், அதன் தொடர்ச்சியாக வார இறுதியில் நிகழ்ந்த நிகழ்வுகளும் வெறும் தனிநபர் மோதலின் எஞ்சிய எச்சங்கள் அல்ல; அவை இந்தச் சமூகம் ஆண்-பெண் உறவுமுறைக்குச் சூட்டியுள்ள அதிகாரப் படிநிலையின் பச்சையான வெளிப்பாடுகள்.

 

ஜேசனின் குரலில் இருந்தது தன் பலத்தின் மீது சமூகம் தனக்கு வழங்கிய பாதுகாப்பின் மீதான திமிர்; முனியம்மாவின் குரலில் இருந்தது அத்தனை வன்முறைகளுக்கு நடுவே தனித்து விடப்பட்ட ஒரு பெண்ணின் ஒடுக்கப்பட்ட வரலாற்றின் தவிப்பு. இந்த இரண்டு வரிகளுக்கு இடையேயான இடைவெளியில்தான் இந்த நாகரிகச் சமூகத்தின் ஒட்டுமொத்த அயோக்கியத்தனமும், பாலின ஒடுக்குமுறையின் கட்டமைப்பும் மறைந்துள்ளது.

graphic உச்ச கட்ட கோபத்தில் முனியம்மாவுக்கு எதிராக நாக்கைத் துருத்தும் ஜேசன்
"I am a man" என்ற வாக்கியம் எப்போதுமே ஒரு சலுகை பெற்ற மனிதனின் ஆயுதம். ஆங்கிலம் அறியாத முனியம்மாவிடம் தன் பலத்தை நிரூபிப்பது போல, எத்தகைய சூழலிலும் தன் பலத்தை, தனது ஆணாதிக்க உரிமையை எந்தவிதத் தடையுமின்றி வெளிப்படுத்தலாம் என்ற சமூக உத்தரவாதம்தான் ஒரு ஆணைக் குரல் உயர்த்த வைக்கிறது. அங்கே வாதத்தின் தரம் முக்கியமல்ல; மாறாக, தான் யார் என்ற பாலின அடையாளத்தைக் கொண்டு அடுத்தவனை அடக்கிவிட முடியும் என்ற மேலாதிக்க உளவியல் ஆழமாக வேரூன்றியுள்ளது. தன் கோபத்தை நியாயப்படுத்த ஆணினம் பயன்படுத்தும் மிக எளிமையான கேடயம் அந்த அடையாளம். ஆனால், ஆங்கிலம் அறியாத முனியம்மா அந்த வாக்கியத்தின் அர்த்தம் என்னவென்று விசாரித்து, அது "நான் ஆண்" என்று குறிப்பதை அறிந்ததும் தன் எளிய, மென்மையான குரலில் "I am a girl" என்று பதிலளித்த அந்தத் தருணம் எந்தச் சோகத்தின் வெளிப்பாடு? அது பல நூற்றாண்டுகளாகப் பெண்கள் தங்களின் நியாயத்தை உரக்கச் சொன்னால் கூட நம்ப மறுக்கும், மாறாக அவர்களின் மீது குற்றம் சுமத்தும் இந்தச் சமூகத்தின் வன்முறைக்கு எதிராக அவர்கள் கற்கும் நிர்ப்பந்திக்கப்பட்ட மென்மை.

 

பெண்கள் எப்போதுமே தங்களின் பாதுகாப்பிற்காகத் தங்களின் குரலின் வீச்சைக் குறைத்துக் கொள்ளவும், தங்களை எளியவர்களாகக் காட்டிக் கொள்ளவும் பழக்கப்படுத்தப்பட்டுள்ளனர். முனியம்மாவின் அந்த மெல்லிய குரல் பலவீனத்தின் வெளிப்பாடு அல்ல; மாறாக, பல நூற்றாண்டுகளாகத் தன் குரல்வளை நெரிக்கப்பட்ட ஒரு பிரபஞ்சப் பெண்ணின் வரலாற்று வலி வெளிப்படுத்தும் மௌனத்தின் எச்சம்.

graphic சோக முகத்துடன் முனியம்மா
இந்த மோதலில் மிகவும் ஆபத்தான மற்றும் சிந்திக்க வைக்கக்கூடிய அம்சம், அந்த வீட்டில் இருந்த பெரும்பான்மையினர் ஜேசனின் பக்கம் நின்று அவனுடைய கோபத்தைச் சமாதானப்படுத்த முயன்றார்களே தவிர, ஒடுக்கப்பட்ட முனியம்மாவை யாரும் கண்டுகொள்ளவுமில்லை, அவளதுநியாயத்தை விசாரிக்கவுமில்லை.

 

இதுதான் இந்தச் சமூகத்தின் அடிப்படை உளவியல்; ஒரு ஆண் கோபப்பட்டால் அவனுக்குச் சாமரம் வீசவும், அவனது ஆக்ரோஷத்திற்குப் பாதுகாப்பு வலயம் அமைக்கவும் இந்தச் சமூகம் உடனடியாகத் திரண்டுவிடும். ஆனால், ஒரு பெண் வஞ்சிக்கப்படும்போதோ அல்லது தன் பலவீனமான நிலையிலிருந்து குரல் எழுப்பும்போதோ அவளைத் தனிமைப்படுத்தி வேடிக்கை பார்க்கும் ஆணாதிக்கத் தன்மையை இந்த நிகழ்வு அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

 

வாதத்தில் யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை விட, யார் சத்தமாகக் கத்துகிறார்கள், யாருக்குப் பின்னால் சமூகம் நிற்கிறது என்பதே இங்கு அதிகாரத்தின் அளவுகோலாக மாறுகிறது.

 

இந்தச் சமூகத்தின் ஒட்டுமொத்த அதிகாரத் திமிருக்கும் முற்றுப்புள்ளி வைப்பது போல வார இறுதியில் களமிறங்கிய இந்த வாரத் தொகுப்பாளரான ரம்யா கிருஷ்ணன் எடுத்த நிலைப்பாடு மிக முக்கியமான வரலாற்றுத் திருப்புமுனை. ஜேசனை "the man Jason" என்று குறிப்பிட்டு அவனது போக்கைத் தட்டிக்கேட்கத் தொடங்கியபோது, தன் வழக்கமான ஆணாதிக்கத் திமிரோடு ஜேசன் அதை மறித்து வாதிட முயன்றான்.

graphic ரம்யாகிருஷ்ணன் ஆக்ரோசப்படும் காட்சி

அந்தத் தருணத்தில், அவன் எப்படி முனியம்மாவிடம் தன் ஆணாதிக்கத்தைக் காட்டினானோ, அதே பாணியில் அவனது வாயை அடைக்க ரம்யா கிருஷ்ணன் அதே "I am a man" என்ற வாக்கியத்தை மும்முறை உரக்கக் கத்தி அவனுக்குத் திருப்பித் தந்தார். இது வெறுமனே ஒரு தொகுப்பாளரின் அதட்டல் அல்ல; மாறாக, தகுந்த சூழலும் அதிகாரமும் கையில் கிடைக்கும்போதுதான் இந்தச் சமூகம் ஆணாதிக்கத்தின் கர்ஜனைக்குச் சாட்டையடி கொடுக்க முடியும் என்பதன் நேரடிப் பிரதி.

 

இந்த உரையாடலைச் சாதாரண சண்டையாகக் கடந்து செல்வது என்பது நம் மீதான அறியாமையின் வெளிப்பாடு. இது ஒரு மனிதனின் ஆக்ரோஷத்திற்கும் மற்றொருவரின் பயத்திற்கும் இடையேயான போர் அல்ல; மாறாக, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஆணின் பலம் நியாயப்படுத்தப்படுவதையும், பெண்ணின் குரல் மென்மையாக்கப்பட்டு அடக்கப்படுவதையும் கண்முன்னே நிறுத்தும் உளவியல் யதார்த்தம். "I am a man" என்ற கர்ஜனை அதிகாரத்தின் அத்துமீறலையும், "I am a girl" என்ற மெல்லிய தவிப்பு அந்த அதிகாரத்தால் ஒடுக்கப்பட்ட ஒட்டுமொத்தப் பெண்களின் ஆன்மாவின் அறக் குரலாகவும் மாறுகிறது. இந்த வாரத் தொகுப்பாளரான ரம்யா கிருஷ்ணனின் எதிர்முழக்கம் அந்த ஆதிக்கத்திற்கு எதிராகச் சரியான தருணத்தில் எழும் அறத்தின் சாட்டையடியாக ஒலிக்கிறது. இந்தச் சமூக ஏற்றத்தாழ்வுச் சிக்கல்களை நாம் அடையாளம் கண்டு கேள்விக்குள்ளாக்குவதன் மூலமே, பாலினச் சமத்துவமான ஒரு ஆரோக்கியமான சமூகத்தை நோக்கி நம்மால் பயணிக்க முடியும்.

 

குறிப்பு: மேற்கண்ட பார்வை அந்த இரண்டு தனிப்பட்ட நபர்களைப் பற்றிய கருத்தோ, விமர்சனமோ அல்ல; அது இரண்டு சமூகக் கதாபாத்திரங்களின் உளவியலை ஆராயும் முயற்சி.

 

பிக் பாஸ் புரோமோக்களின் இணைப்பு:

https://youtu.be/r6MqyR1JKpk?si=NrK4og8MgVQynYYx 

 

கட்டுரையாளர் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி. முனைவர் பட்ட ஆய்வாளர்

அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) நந்தனம் சென்னை

மின்னஞ்சல்: karthick.v.scholar@gmail.com


கருத்துகள் (1):

Anonymous
இது பல்வேறு கோணங்களில் சிந்திக்க செய்கிறது மிகவும் அருமை

Post a Comment

தளத்தின் மேலே செல்ல