நேரடியாக முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

அரசாணை: மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணமில்லாப் பேருந்து பயணம்: தமிழக அரசின் விரிவுபடுத்தப்பட்ட புதிய அரசாணை – முழுமையான வழிகாட்டி: – பொன். குமரவேல்

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மூலம் வெளியிட்டுள்ள அரசாணை (நிலை) எண். 18 (நாள்: 27.10.2026), மாற்றுத்திறனாளிகளின் பொதுப் போக்குவரத்துப் பயணத்தில் ஒரு மிக முக்கியமான மைல்கல்லாகும். கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு மற்றும் அன்றாடப் பணிகளுக்காகப் பயணிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்குப் பேருந்து பயணத்தை மேலும் எளிதாக்கும் வகையில் இத்திட்டம் தற்போது கணிசமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

graphic தமிழக அரசின் வெற்றிப் பயணத் திட்டத்தைக் குறிக்கும் சித்தரிப்புப் படம்
 பொதுமக்கள், பயணிகள் மற்றும் மாற்றுத்திறனாளித் தோழர்கள் அனைவரும் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் இந்த அரசாணையின் முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

 

1. பின்னணியும் திட்ட விரிவாக்கமும்

 

இதுவரை 2016-ஆம் ஆண்டு சட்டப்படியான 21 வகையான மாற்றுத்திறன்களில் 40% மற்றும் அதற்கு மேல் பாதிப்புள்ள நபர்கள் மற்றும் அவர்களது துணையாளர் ஒருவர், அரசு போக்குவரத்துக் கழகங்களின் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் (White Board) மட்டுமே இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கப்பட்டு வந்தனர். மேலும், மலைப்பகுதிகளிலும் குறிப்பிட்ட தூர எல்லைக்குள் விடியல் பயணத் திட்டம் நடைமுறையில் இருந்தது.

 

2026 ஆகஸ்ட் 31 அன்று சட்டமன்றத்தில் அளிக்கப்பட்ட அறிவிப்பின்படி, தற்போது மாநகர மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இயக்கப்படும் பல்வேறு வகையான பேருந்துகளுக்கும் இந்த 100% கட்டணமில்லாப் பயணச் சலுகை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

 

2. எந்தெந்த பேருந்துகளில் சலுகை பொருந்தும்?

 

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் கீழ்க்காணும் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் கட்டணமின்றி பயணிக்கலாம்:

 

 * மாநகர / நகர சாதாரண பேருந்துகள்

 

 * தாழ்தளப் பேருந்துகள் (Low Floor Buses)

 

 * நகர விரைவுப் பேருந்துகள் (Express Buses)

 

 * வரையறுக்கப்பட்ட நிறுத்தப் பேருந்துகள் (LSS - Limited Stop Service)

 

 * டீலக்ஸ் பேருந்துகள் (Deluxe Buses)

 

 * புறநகர் சாதாரண கட்டண பேருந்துகள் (Mofussil Buses)

 

 * மலைப்பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண கட்டணப் பேருந்துகள்

 

(குறிப்பு: குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேருந்துகளில் அதாவது AC பேருந்துகளில் மட்டும் இச்சலுகை பொருந்தாது.)

 

3. பயணச் சலுகைக்கான தகுதிகள்

 

 * 40% மற்றும் அதற்கு மேற்பட்ட பாதிப்பு: 2016-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள 21 வகையான மாற்றுத்திறன்களில், 40% மற்றும் அதற்கு மேல் பாதிப்புத் தன்மை கொண்ட (Benchmark Disability) அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் இச்சலுகை முழுமையாகப் பொருந்தும்.

 

 * துணையாளருக்கான அனுமதி: உடல் இயக்கக் குறைபாடு,  பிற குறைபாடுகள் காரணமாகத் தனியாகப் பயணிக்க இயலாத மாற்றுத்திறனாளிகளுடன் பாதுகாப்புக்காக வரும் ஒரு துணையாளருக்கும் (Escort) இக்கட்டணமில்லாப் பயணச் சலுகை முழுமையாகப் பொருந்தும்.

 

4. பயணிகள் கவனிக்க வேண்டிய முக்கிய நிபந்தனைகள்

 

 * UDID அட்டை கட்டாயம்: பேருந்தில் பயணிக்கும் போது தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட 16 இலக்க எண் கொண்ட தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையை (UDID Card) மாற்றுத்திறனாளிகள் கண்டிப்பாக உடன் வைத்திருக்க வேண்டும். நடத்துநர் கேட்கும்போது இந்த அட்டையைக் காண்பித்து மட்டுமே 100% கட்டணமில்லாப் பயணத்தைப் பெற முடியும்.

 

 * பழைய பயண அட்டைகள் செல்லாது: இதற்கு முன்னதாக 2026-2027 ஆம் நிதியாண்டில் பெறப்பட்ட பழைய கட்டணமில்லாப் பேருந்து சலுகை அட்டைகள் இனி நடைமுறையில் செல்லுபடியாகாது. இனி UDID அட்டை மட்டுமே முதன்மை ஆவணமாக ஏற்கப்படும்.

 

 * இலவசப் பயணச்சீட்டு (Zero Ticket): மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது துணையாளர்கள் மேற்கொள்ளும் பயணங்களை அரசு முறைப்படி கணக்கீடு செய்வதற்காக, நடத்துநரிடம் இருந்து அதற்கான இலவசப் பயணச்சீட்டினைப் (ரூபாய் 0/- Ticket) பெற்றுக்கொள்ள வேண்டும்.

 

 * 75% சலுகை தொடரும்: ஏற்கெனவே மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பிற 75 விழுக்காடு பயணக் கட்டணச் சலுகைகள் வழக்கம் போல் எந்த மாற்றமுமின்றி தொடர்ந்து செயல்படும்.

 

5. நிதி ஒதுக்கீடு மற்றும் நடைமுறைப்படுத்துதல்

 

 * இத்திட்ட விரிவாக்கத்திற்காக மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் மொத்தம் ரூ. 114 கோடி கோரியிருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்தும் வகையில் முதற்கட்டமாக ரூ. 7,90,00,000/- (ரூபாய் ஏழு கோடியே தொண்ணூறு இலட்சம்) நிதியை அரசு உடனடியாக ஒப்பளிப்பு செய்துள்ளது.

 

 * இந்த அரசாணை வெளியிடப்பட்ட நாளான 2026 அக்டோபர் 27 முதலே இப்புதிய சலுகை நடைமுறைக்கு வந்துள்ளது.

 

5. சில ஐயங்கள்

 

*தனியே பயணிக்க இயலாத மாற்றுத்திறனாளிகள் உடன் அழைத்துச் செல்வோருக்கும் விலையில்லாப் பயணச்சலுகை செல்லுபடியாகும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தனியாகச் செல்ல இயலாத மாற்றுத்திறனாளிகள் யார் என குறிப்புகள் எதுவும் இல்லை. ஒருவேளை, அரசாணை குறித்த சுற்றறிக்கை ஏதேனும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வெளியிடப்படலாம்.

 

*பழைய பயணக் கட்டண அட்டை இனி செல்லாது எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், பழைய விலையிய்லாக் கட்டண அட்டையின் மூலம், நீண்ட தொலைவு செல்லும் பேருந்துகளில்கூட தங்கள் மாவட்டத்துக்குள் இருக்கிற குறுகிய தொலைவு உடைய இடங்களுக்கு ஒரு பார்வையற்றவரால் பயணிக்க இயலும். உதாரணத்திற்கு, அரந்தாங்கியிலிருந்து கோவை செல்லும் தொலைதூரப் பேருந்துகளில் மாவட்ட அளவிலான விலையில்லாப் பயண அட்டை வைத்துள்ள ஒரு பார்வையற்றவரால் எளிதில் அரந்தாங்கியிலிருந்து புதுக்கோட்டைக்கு பயணக் கட்டணம் ஏதுமின்றிப் பயணிக்க முடியும். இனி அதற்கான வாய்ப்புகள் என்னவென்பது தமிழகப் போக்குவரத்துத் துறைக்கு அரசால் அனுப்பப்படும் சுற்றறிக்கையின் மூலமே தெரியவரலாம்.

 

*மேலும், பார்வையற்றவர்களைப் பொருத்தவரை, எந்தப் பேருந்து வெற்றிப் பயணப் பேருந்து, எந்தப் பேருந்துகள் திட்ட வரம்புக்குள் வராது என்பதையெல்லாம் கேட்டு அறிவதில் பல இடர்பாடுகளும் ஏமாற்றங்களும் நிகழும் என்கிற எதார்த்தத்தையும் எதிர்கொண்டே ஆகவேண்டும்.

 

சுருக்கமாகச் சொன்னால், சென்னை, மதுரை போன்ற பெருநகரங்களில் ஒரு பார்வையற்றவருக்கு இந்த விலையில்லாப் வெற்றிப்பயணத் திட்ட விரிவாக்கம் வழங்கும் அனுகூலமும், புதுக்கோட்டை போன்ற உள்ளடங்கிய மாவட்டங்களில் வசிக்கும் பார்வையற்றவர்களுக்கான சாதகங்களும் ஒரே மாதிரியாக இருக்கப்போவதில்லை என்பதே உண்மை.

 

எவ்வாறாயினும், , அரசுப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எவ்விதத் தடையுமின்றி சமத்துவத்தோடும் சுதந்திரமாகவும் பயணிப்பதை இந்த அரசாணை உறுதி செய்கிறது. தகுதியுள்ள பயனாளிகள் அனைவரும் தங்களது 16 இலக்க UDID அட்டையை எடுத்துச் சென்று இச்சலுகையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

அரசாணையைப் படிக்க மற்றும் பதிவிறக்க

 

***தொடர்புக்கு: kumaravel.p95@gmail.com


கருத்துகள் (0):

Post a Comment

தளத்தின் மேலே செல்ல