தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க:
உங்ககிட்ட ஒண்ணு சொல்லல. என்.ஐ.வி.எச்.ல ஐ.எல்.எஸ். வகுப்பைத் தவிர வேற எந்த வகுப்பும் நடக்கல. நாங்க 13 பேரு மட்டும்தான் அங்க இருந்த மொத்த ஸ்டூடண்ட். காலேஜ் நடந்துகிட்டு இருந்தது. இப்ப எதுக்குடா இதுன்னு கேக்குறீங்களா?
ஒருநாள் பிளேஸ்மென்ட் செக்ஷன்ல வேலை பார்த்துட்டு இருந்த கேத்தரின் மேடத்தோட வள்ளி மேடம் ரொம்ப நேரமா இங்கிலீஷ்ல பேசிக்கிட்டு இருந்தாங்க. கொஞ்சம் புரிஞ்ச மாதிரியும் இருந்துச்சு, புரியாத மாதிரியும் இருந்துச்சு. அப்புறம் ரெண்டு பேரும் தமிழ்லயும் கொஞ்சம் பேசிக்கிட்டாங்க, அதுக்குப் பிறகுதான் புரிஞ்சது.
என்.ஐ.வி.எச்.ல நிறைய பப்பாளி மரம் இருந்தது. அங்க பப்பாளி பழம் நிறைய காய்ச்சிருக்கு. அதைப் பறிச்சு, பீஸ் போட்டு, பிளேட்ல வச்சு, அங்க இருந்த எல்லா ஸ்டாஃப்புக்கும் எடுத்துட்டுப் போய் கொடுத்துட்டு இருந்ததை அவங்க பார்த்திருக்காங்க. நமக்குக் கொடுக்கலையேன்னு அவங்க வருத்தப்படல.
இன்னொரு விஷயம், அந்தப் பப்பாளி பழம் பெர்மனென்ட் ஸ்டாஃப்புக்குத்தான், காண்ட்ராக்ட் ஸ்டாஃப்புக்கு எல்லாம் இல்ல. வள்ளி மேடம், “என் ஸ்டூடண்ட்ஸ் 13 பேருதான் இருக்காங்க, அவங்களுக்கு ஒரு பீஸ் கொடுத்தா என்ன?”ன்னு ரொம்ப வருத்தப்பட்டாங்க. கேத்தரின் மேடமும் காண்ட்ராக்ட் ஸ்டாஃப்தான். வள்ளி மேடத்தால எதையும் நேரடியாகக் கேட்க முடியாது, கேட்கிற அதிகாரமும் அவங்களுக்குக் கிடையாது; அது அவங்களுக்கே தெரியும். அவங்களோட வருத்தத்தைப் பகிர்ந்துக்கிட்டாங்க, அவ்வளவுதான்.
ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தைக் கொண்டாடத் தயாரானோம். அதுல இங்கிலீஷ்ல ஒரு உறுதிமொழி சொல்லணும். “யாரு தயாரா இருக்கீங்க?”ன்னு வள்ளி மேடம் கேட்கும்போது, யாருமே தயாராக இல்லை, ஏன்னா அது இங்கிலீஷ்ல இருந்ததுனால. வேற வழியே இல்லாம பையஸ் அதைப் பண்றேன்னு சொன்னாரு. பெரிய பிரைல் சீட்ல, ஸ்கெட்ச்ல பெரிய பெரிய எழுத்தா அந்த உறுதிமொழியை இங்கிலீஷ்ல எழுதி மனப்பாடம் பண்ணிக்கிட்டே இருந்தாரு. என்கிட்ட வந்து, “அசோக், நான் சொல்றேன், சரியா இருக்கான்னு சொல்லுடா”ன்னு சொல்லுவாரு. சுதந்திர தினத்தில் பையஸ் சூப்பரா உறுதிமொழி சொல்ல, சந்தோஷமாகக் கொண்டாடி முடிச்சோம்.
அடுத்த நாள் காலையிலேயே பையஸ், “டேய், எனக்குப் பார்வை மங்கலா தெரியுதுடா”ன்னு ரொம்ப டல்லா சொன்னாரு. “அண்ணா, இதுக்கெல்லாம் கவலைப்படாதீங்க, காலையிலேயே ஒரு மாதிரியா இருக்கும், சரியாயிடும்”னு சொன்னேன். ஆனா, அவர் கிளாசுக்கு வந்த பிறகும் அவருக்குச் சரியாகல. வள்ளி மேடம் பையசைப் பார்த்த உடனே என்னாச்சுன்னு கேட்டாங்க. பையஸ் அழ ஆரம்பிச்சுட்டாரு. முதல்முறையா எங்க கிளாஸ் ரூம் சோகமாய் இருந்தது. பையஸ் எப்போதுமே ஜாலியா இருப்பாரு, எல்லாரையுமே கிண்டல் பண்ணிக்கிட்டே இருப்பாரு. அவர் அழுவதை யாராலும் தாங்கிக்க முடியல.
அன்னைக்குதான் சிலம்பரசனின் பிறந்தநாள். அவங்கம்மா, அண்ணன், அண்ணி மூணு பேரும் கேக் வாங்கிட்டு பாண்டிச்சேரியிலிருந்து வந்திருந்தாங்க. அவங்களே காசிமணி சார்கிட்ட பர்மிஷன் வாங்கி, எங்க கிளாஸ் ரூம்லயே பிறந்தநாள் கேக் வெட்டுனாங்க. ஆனா பையஸ் எதுலயுமே கலந்துக்காம தனியா உட்கார்ந்திருந்தாரு.
கொண்டாட்டம் முடிஞ்ச பிறகு, வள்ளி மேடம் காசிமணி சார்கிட்ட போய் பையஸ் அழுறதைச் சொன்னாங்க. பையசைக் கூப்பிட்டு உடனே பேசினாங்க. ரொம்ப நேரம் ஆயிடுச்சுன்னு நான் காசிமணி சார் ரூமுக்குப் போனேன். நான் பக்கத்துல நின்னும் யாருன்னு பையஸ் அண்ணாவுக்குத் தெரியல. நான் திரும்ப கிளாசுக்கு வந்து உட்கார்ந்தபோது, என்னால கண்ணீரை அடக்க முடியல. வள்ளி மேடம், “ஏன் நீங்க அழுறீங்க?”ன்னு கேட்டாங்க.
பையசை, பக்கத்துல இருக்கிற அரவிந்த் கண் ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டுப் போனாங்க. அங்க ஆபரேஷன் பண்ணணும்னு சொன்னாங்களாம். பையஸ் ஊருக்குக் கிளம்புறதா முடிவு பண்ணிட்டாரு. அடுத்த நாள் ஊருக்குப் போகத் தயாரானாரு. “திரும்பி வர மாட்டேன்”னு வேற சொல்லிட்டாரு.
எனக்குப் பையஸ் கூட எல்லாரும் சேர்ந்து போட்டோ எடுக்கணும்னு ஆசை. காசிமணி சார்கிட்ட கேமரா இருக்குன்னு தெரியும், அதனால அவர்கிட்ட போய்க் கேட்டேன். ஆனா, அவரோ, “கோர்ஸை பாதியோடு விட்டுட்டுப் போறானா, இடியட்”னு திட்டுனாரு, கேமரா கொடுக்கல.
சாயந்திரம் பையசை, பி.எட். படிக்கிற முத்துன்னு ஒரு பையன் பஸ் ஏத்திவிடக் கூப்பிட்டாரு. ஹாஸ்டல் வாசலுக்கு வெளியில், “அசோக், நான் போயிட்டு வரேன்”னு பையஸ் அண்ணா சொல்ல, நான் அவரைக் கட்டிப்பிடிச்சு, “அண்ணா”ன்னு கதறி, சத்தம் போட்டு அழுதுட்டேன். அவரும் அழ, பாலகுமாரும் அழுதாரு. நான் திரும்ப பெட்ல வந்து படுத்துட்டு அழுதுகிட்டே இருந்தேன். எனக்குச் சம்பந்தமே இல்லாத, சில மாதங்கள் மட்டுமே பழகுன ஒருத்தருக்காக நான் அழுதேன், கதறிக் கதறி அழுதேன். கண்ணு தெரியாம போற அந்த வலி என்னன்னு அனுபவிச்சவன் நான். என் முன்னாடி அதே சூழல்ல ஒருத்தர் இருக்கிறார் என்பதை என்னால நினைச்சுக்கூடப் பார்க்க முடியல.
நான் ஜாதித் திமிர் அதிகமா கொண்டவன்னு உங்ககிட்ட சொல்லியிருந்தேன். அதைப் படிச்ச நீங்க செம கடுப்பாகி இருப்பீங்க. உங்களுக்கு ஸ்கூல், காலேஜ், ஹாஸ்டல்னு பலதரப்பட்டவங்களோட பழகுற வாய்ப்பு இருந்திருக்கும், எனக்கு அப்படி எந்த வாய்ப்பும் இல்லையே! அப்போ அந்தத் திமிரோட வாழ்ந்தது என் தப்பு இல்லையே. அந்த வாய்ப்பை முதல்முறையா எனக்கு என்.ஐ.வி.எச்.தான் கொடுத்தது. இங்க நான் யார்கிட்டயும் ஜாதி பார்க்கல, மதம் பார்க்கல. எல்லாரையுமே என்னைப் போல பார்த்தேன். எல்லாருமே ஒரே ஜாதி, பார்வையற்ற ஜாதின்னு நினைச்சேன். அதனாலதான் பையஸ் அண்ணாவுக்காக என்னால அழ முடிஞ்சுதுன்னு நினைக்கிறேன். வாழ்க்கை நமக்குக் கத்துக்கொடுக்கிற பாடம் ரொம்ப மகத்துவமானது.
அதுக்குப் பிறகு கிளாஸ் ரூம் சந்தோஷமாவே இல்ல. நாங்க எல்லாரும் பாரிஸுக்கு ஒரு நாள் டூர் போகத் தயாரானோம். பையஸ், “ஒரு வாரம் கழிச்சு நான் திரும்ப என்.ஐ.வி.எச்சுக்கு வாரேன்”னு சொன்னாரு. போன சந்தோஷம் திரும்ப வந்த மாதிரி இருந்தது. பாரிஸுக்குப் போகத் தயாராக இருந்த நாங்க, பையசுக்காக வெயிட் பண்ணினோம். வள்ளி மேடம் காசிமணி சார்கிட்ட போய், “நாளைக்கு டூர் போகலாம் சார், அந்தப் பையனும் வந்துரட்டும்”னு ரெக்வெஸ்ட் பண்ணாங்க. காசிமணி சார் ஓகே சொல்லிட்டாரு.
டூருக்குப் புறப்படவிருந்த நாங்க எல்லாரும் போகல. அதுக்காக வருத்தப்படல, பையஸ் திரும்ப வராருன்னு சந்தோஷப்பட்டோம். ஆனா, காசிமணி சாருக்கு அடுத்த நிலையில இருந்தவரு எங்க கிளாசுக்கு வந்து, “வள்ளி மேடத்தை உங்க இஷ்டத்துக்கு எல்லாத்தையும் மாத்திடுவீங்களா?”ன்னு ஒரு மாதிரி பேசிட்டாரு. எனக்குப் பயங்கர கோபம் வந்துடுச்சு, ஆனா எதுவும் சொல்லல. வள்ளி மேடம் ரொம்ப வருத்தப்பட்டாங்க. “அது எப்படிப்பா, அவர் வரலைனாலும் பரவாயில்லை, வாரேன்னு சொன்ன பிறகு அவரை விட்டுவிட்டு எப்படி நாம மட்டும் போறது?”ன்னு சொன்னாங்க. அதுதான் வள்ளி மேடம்.
அப்புறம் என்ன, பையஸ் வந்துட்டாரு. ஆனா, அந்தப் பழைய உற்சாகம் அவர்கிட்ட இல்லை. அடுத்த நாள் எல்லாரும் சந்தோஷமா டூருக்குப் போனோம். 13 பேர் இருந்ததுனால வள்ளி மேடம், “இன்னொரு ஸ்டாஃப் யாராச்சும் வரச் சொல்லுங்க”ன்னு கேட்க, அங்க சாதாரண நிலையில காண்ட்ராக்ட் ஸ்டாஃபா வேலை செய்ற ஒரு லேடியை வரச் சொன்னாங்க. 15 பேரா புறப்பட்டோம்.
பாரிஸுக்குப் போய் அங்க ஒரு கடையில் ஷாப்பிங் பண்ணினோம். அங்க நிறைய கடைகள் இருந்தது. அதுல ஒரு கடை ஓனர் சேட்டு எங்க எல்லாருக்கும் நூறு ரூபாய் தந்தாருன்னு சொல்லி, எல்லார்கிட்டயும் அந்த லேடி நூறு ரூபாய் கொடுத்தாங்க. அதை வேண்டாம்னு சொன்னது மூணு பேரு: ஒண்ணு நான், இன்னொண்ணு பையஸ், பாலகுமார். அப்போ ஒரு தங்கை, “அண்ணா, உங்களுக்கு வேண்டாம்னா அதை வாங்கி என்கிட்ட கொடுங்க”ன்னு சொல்ல, “அவங்ககிட்டயே கொடுத்துடுங்க”ன்னு சொல்லிட்டேன்.
இதுல வேடிக்கை என்னன்னா, அந்த லேடி பணம் வாங்குனது எங்க மேடத்துக்குத் தெரியாது. வள்ளி மேடத்துக்கும் சேர்த்து நூறு ரூபாய், அந்த லேடிக்கு நூறு ரூபாய்னு வாங்கி இருக்காங்க. வள்ளி மேடத்துக்குத் தெரிஞ்ச உடனே எதுவுமே சொல்ல முடியல. “அதை நீங்களே வச்சுக்கங்க”ன்னு சொல்லிட்டாங்க.
ஒரு ஃபிளாஷ்பேக் சொல்றேன். ஒருநாள் நாங்க அங்க இருக்கிற ஒரு சர்ச்சுக்கு வள்ளி மேடத்தோட போனோம். அப்போ அங்க வந்தவங்க எங்க மேடத்தைக் கூப்பிட்டுப் பணம் கொடுத்து, “எல்லாப் பசங்களுக்கும் கொடுங்க”ன்னு சொன்னாங்க. ஆனா வள்ளி மேடம் அதை வாங்கல, வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அதுக்குப் பிறகு, “நான் வேண்டாம்னு சொல்லிட்டேன், பசங்க வேற ஏதாவது நினைச்சுக்கப் போறாங்க. பசங்க நேரடியா வாங்குவதும் வாங்காததும் அவங்க விருப்பம், ஆனா அதை நான் வாங்கிக் கொடுக்கிறது தப்பு”ன்னு சொன்னாங்க. அப்படிப்பட்ட வள்ளி மேடம் பெயரைச் சொல்லியே அந்த லேடி நூறு ரூபாய் வாங்குனதை இப்ப நினைச்சாலும் சிரிப்பு வருது.
அடுத்து குக்கிங் கிளாஸ் ஆரம்பிச்சது. ஒரு வாரம் ஏதாவது வெரைட்டியா சாப்பாடு ரெடி பண்ணி, கப்புல வச்சு, பெரிய பெரிய பிளேட்ல எடுத்துட்டுப் போய் அங்க வொர்க் பண்ற எல்லா ஸ்டாஃப்புக்கும் கொடுக்கணும். சொன்னா சிரிப்பீங்களான்னு தெரியல, உழைச்சு உழைச்சு ரொம்ப டயர்டாகி உட்கார்ந்து இருக்கிற சிலர் ரெண்டு கப்பு, மூணு கப்பா எடுத்துப்பாங்க.
இன்னும் ஒண்ணு சொல்லவா? முக்கியமான ரெண்டு பேருக்கு மதிய சாப்பாடு நாங்க கொடுக்கிறதுதான். நீங்க ஏதும் தப்பா யோசிக்காதீங்க, பசங்க எல்லாம் சேர்ந்து சமைக்கிறது அதனாலதான். ஆனா, அங்கே இருந்த ஒருத்தர் மட்டும் நாங்க எடுத்துட்டுப் போற எதையுமே தொட மாட்டாரு. அது ஏன்னு நான் ரகசியமா விசாரிச்சுத் தெரிஞ்சுகிட்டேன். பார்வையற்றவங்களுக்காக நிறைய நல்ல விஷயங்களைக் கொண்டு வந்தது அவர்தானாம். ஆனா, சில அரசியல் சூழ்ச்சியால மேலே இருந்தவரைக் கீழே இறக்கிட்டாங்களாம். சரி சரி, நான் பாட்டுக்கும் ஏதாவது உண்மையை எழுதி விவகாரம் ஆயிடப்போகுது, நமக்கு எதுக்கு வம்பு? நானே ரொம்பப் பயந்தவன்.
சரி, அடுத்த விஷயத்துக்கு வர்றேன். ஐ.எல்.எஸ். கோர்ஸ் முடியறதுக்கான நாளும் நெருங்குச்சு. இந்த மூணு மாசம் நான் வாழ்ந்த வாழ்க்கை, நான் சந்தித்த மனிதர்கள், நான் கத்துக்கிட்ட பாடம் ரொம்ப ரொம்பப் பெருசு. அர்த்தமே இல்லாம வாழ்ந்த எனக்கு, என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக்கணும்னு நான் பெற்ற அனுபவங்கள் கத்துத் தந்துச்சு. மத்தவங்களோட வலியை முழுசா உணர ஆரம்பிச்சேன். பார்வையற்ற சமூகத்தோட அவலத்தை நேரடியாகப் பார்த்த பிறகும் நான் ஒதுங்கிப் போனா, அப்புறம் எனக்கு என்ன மரியாதை இருக்கு? இங்க நான் நிறைய செய்யணும், நிறைய மாற்றணும்னு நினைச்சேன்.
பார்வையற்ற சமூகத்துக்கான ஒரு இயக்கத்தை உருவாக்கணும்னு நான் எந்த நாளில் முடிவு பண்ணினேன், அந்தத் தேதி என்னன்னு சொல்றேன்: ஆகஸ்ட் 31, வெள்ளிக்கிழமை, 2018. என்.ஐ.வி.எச்.ல இருந்துகிட்டே அதை எப்படிடா கரெக்டா சொல்றேன்னு கேக்குறீங்களா? நான்தான் சொன்னேனே, முக்கியமான விஷயங்களை நான் தேதியோட ரெக்கார்ட் பண்ணி வச்சிருக்கேன்னு.
சரி, நான் உருவாக்கணும்னு நினைச்ச இயக்கத்துக்கு நான் வச்ச பேரு என்னன்னு தெரியுமா? எந்தப் பார்வை என்கிட்ட இல்லைன்னு இந்த உலகம் சொல்லுதோ, அந்தப் பேர்லயே உருவாக்கணும்னு நினைச்சேன். எனக்கு அப்போ பார்வையற்ற சமூகத்தைப் பத்தி எதுவுமே தெரியாது. ஆனாலும், என்னைக்காச்சும் ஒருநாள் நிச்சயமா ஒரு இயக்கத்தை உருவாக்குவேன்னு நம்பினேன். உங்களால நம்ப முடியுதா!
சரி, அடுத்த விஷயத்துக்கு வர்றேன். நாங்க எல்லாரும் சேர்ந்து எங்க மேடத்தோட ஒரு குரூப் போட்டோ எடுக்கணும்னு முடிவு பண்ணினோம். அது மட்டும் இல்ல, எங்க குரூப் சார்பா வள்ளி மேடத்துக்கு ஏதாவது கிஃப்ட் வாங்கிக் கொடுக்கணும்னும் நினைச்சேன். நாம போனாலும் நம்ம பேரைச் சொல்ற மாதிரி ஏதாவது ஒண்ணை என்.ஐ.வி.எச்.ல விதைச்சிட்டுப் போகணும்னு முடிவு பண்ணினேன். எல்லார்கிட்டயும் பேசினேன், ஒரு பட்ஜெட் போட்டேன். எல்லாரும் பணம் கொடுத்தாங்க. எங்க மேடத்துக்கிட்ட குரூப் போட்டோ எடுக்கிறதைப் பத்திச் சொன்னோம்.
அடுத்த நாள் குரூப் போட்டோ எடுக்கத் தயாரானோம். புறப்படுற நேரத்துல சசியும் சவுதாவும் வரலைன்னு சொன்னாங்க. எவ்வளவோ பேசிப் பார்த்தோம், அவங்க வரலைன்னு சொல்ல, “அவங்க வரலைன்னா பரவாயில்லை, நாம எல்லாரும் போகலாம்”னு நான் சொல்லியும் வள்ளி மேடம் அதுக்கு ஒத்துக்கல. “எல்லாரும் சேர்ந்து போனா போகலாம், இல்லன்னா வேண்டாம்”னு சொல்லிட்டாங்க. ஒருவழியா சசியையும் சவுதாவையும் சம்மதிக்க வச்சு, எல்லாரும் சேர்ந்து, நான் நினைச்ச மாதிரியே ஒரு ஸ்டுடியோவுல போய் குரூப் போட்டோ எடுத்தோம். 14 போட்டோ கேட்டோம். அங்கே இருந்த சாந்தி பேக்கரிக்கு அழைச்சிட்டுப் போய், “உங்க எல்லாருக்கும் என்னென்ன வேணுமோ வாங்கிக்கோங்க”ன்னு வள்ளி மேடம் சொன்னாங்க. அன்னைக்கு ட்ரீட் வள்ளி மேடத்தோடது.
செப்டம்பர் 3-க்குக் கிளாஸ் முடியுது, அதனால டீச்சர்ஸ் டேவைக் கொண்டாடுற மாதிரி கேக் வாங்கி, கிளாஸ்ல வச்சு வெட்டப் பிளான் பண்ணினோம். வள்ளி மேடம், “காசிமணி சார், ஹரிகிருஷ்ணன் சாரையும் கூட்டிட்டு வாங்க”ன்னு சொன்னாங்க. காசிமணி சார் கேக் கட் பண்ணி, டீச்சர்ஸ் டேவைக் கொண்டாடினோம்.
அடுத்த நாள் சனிக்கிழமை. சென்னையில் வேலை பார்த்துட்டு இருந்த என் தம்பி பாலுவை வரச் சொன்னேன், அவன்கிட்ட பைக் இருந்தது. ரெண்டு பேரும் மேனுவல் ராஜ் அண்ணாவைப் பார்க்கப் போனோம். நான் சென்னைக்கு வந்ததிலிருந்து அண்ணனைப் பார்க்கணும்னு நினைச்சும் பார்க்க முடியல. போறதுக்குள்ளயாவது அண்ணனைப் பார்த்துட்டுத்தான் போகணும்னு நினைச்சேன். ஒருவழியா அண்ணனை நேரில் போய்ச் சந்திச்சேன்.
நான் என்.ஐ.வி.எச்சுக்கு வர்றதுக்கு முன்னாடி அண்ணா ஒண்ணு சொன்னாங்க: “மகனே, நீ என்.ஐ.வி.எச்சுக்கு வந்துட்டேன்னா உனக்கு நிறையப் பழக்கம் வந்துரும், நிறையப் பொண்ணுங்ககிட்ட பேச ஆரம்பிச்சிருவ, இவ்வளவு நல்ல பையனா எல்லாம் இருக்க மாட்ட”ன்னு கிண்டல் பண்ணாங்க. அண்ணனை நேர்ல பார்த்தபோது, “நான் எப்படி வந்தேனோ அப்படித்தானே திரும்பிப் போறேன்”னு சொன்னேன். அண்ணன் எனக்கு ஒரு மொபைல் டிராக்கர் கொடுத்தாங்க, அது அண்ணன் கொடுத்ததுனால நான் வாங்கிக்கிட்டேன். அண்ணனைப் பார்த்துட்டு வரும்போது, பாலு பார்த்துச் செலக்ட் பண்ணின கிஃப்ட்டை வாங்கிட்டு வந்தேன்.
ஞாயிற்றுக்கிழமை பசங்க மட்டும் மெரினாவுக்குப் போனோம். கலைஞர் நினைவிடத்துக்குப் போய் மண்டியிட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினோம். கலைஞர் டிவியில் எங்க எல்லாரையும் நிக்க வச்சுப் பேட்டி எடுத்தாங்க. அதுல நான், அஜித், பாலகுமார் பேட்டி கொடுத்தோம். சதீஷ், “நான் கொஞ்சம் பேசறேன்”னு சொல்லிட்டு, திடீர்னு, “கலைஞர் ஐயா வாழ்க, மு.க.ஸ்டாலின் ஐயா வாழ்க”ன்னு எங்களையும் சேர்த்துக் கோஷம் போட வச்சுட்டாரு. அப்புறம் என்ன, ஒரு தே.மு.தி.க.காரனையே தி.மு.க.வுக்குக் கோஷம் போட வச்சுட்டியே, போயான்னு திட்டிக்கிட்டே வந்தேன்.
எங்க பேரைச் சொல்ற மாதிரி என்.ஐ.வி.எச்.ல நாங்க என்ன செஞ்சோம்னு சொல்றேன். ரொம்ப முக்கியமான ஒண்ணு வாங்கினோம். என்ன தெரியுமா? எங்க சார்பா என்.ஐ.வி.எச்.ல ஒரு மரக்கன்று நடலாம்னு முடிவு பண்ணினோம். வள்ளி மேடம், “இதுவரைக்கும் யாரும் இப்படி ஒரு விஷயத்தைப் பண்ணதில்லை, சூப்பர்”னு சொன்னாங்க. நான், பையஸ் அண்ணா, இன்னும் ரெண்டு மூணு பேரு போய் ஒரு மாமரக்கன்று வாங்கிட்டு வந்தோம். காசிமணி சாரைக் கூப்பிட்டு, எல்லாரும் சேர்ந்து மாமரக்கன்றை நட்டு வச்சோம். இதுவரைக்கும் இப்படி ஒரு விஷயத்தை யாரும் செஞ்சதில்லைன்னு காசிமணி சாரும் சொல்லிப் பாராட்டினாரு. இது எல்லாமே நான் மட்டும் செஞ்சது இல்ல, நாங்க எல்லாரும் சேர்ந்து செஞ்சது. இது எல்லாத்துக்கும் செலவான பணத்தை எல்லாரும் சமமாகக் கொடுத்தாங்க.
நான் என் கூட இருந்த எல்லாருக்கும் ஏதாவது கிஃப்ட் வாங்கிக் கொடுக்கணும்னு நினைச்சேன். ஆனா, என்கிட்ட காசு இல்ல. பையஸ் அண்ணா எனக்கு ஒரு ஃபைல் வாங்கி கிஃப்ட் கொடுத்தாரு. நான் வித்தியாசமா ஒண்ணு யோசிச்சேன். என் ஊர்ப் பசங்கள்ல முக்கியமான ஒரு தம்பி, ரூபராஜ், குமாரோட தம்பி. ரூபாவும் சென்னையிலதான் வேலை பார்த்துட்டு இருந்தான். அவனை ஒரு வாரத்துக்கு முன்னாடியே, ஞாயிற்றுக்கிழமை என்.ஐ.வி.எச்சுக்கு வரச் சொன்னேன், அவனும் வந்தான்.
எதுக்கு வரச் சொன்னேன் தெரியுமா? என் கூட இருந்த எல்லாருக்கும், வள்ளி மேடத்துக்கும் என்னுடைய எழுத்தின் வழியே நிறையச் சொல்லணும்னு நினைச்சேன். நான் சொல்லச் சொல்ல, ஒவ்வொருத்தருக்காகவும் ரூபா எழுதினான். ஒவ்வொருத்தரைப் பத்தியும் நான் என்ன நினைச்சேன், அவங்ககிட்ட எனக்கு என்ன சொல்லணும்னு இருந்துச்சு, இது எல்லாத்தையும் கவிதை வடிவுல நான் சொன்னதெல்லாம் ரூபாவால எழுத்தாச்சு. கடைசியா சவுதாவுக்கு எழுதும்போது ரொம்ப நேரம் ஆயிடுச்சு, அதனால அந்தத் தங்கையைப் பத்தி அதிகமா எழுத முடியல.
கடைசி நாள், செப்டம்பர் 3-ஆம் நாள், நான் கிளாசுக்குப் போனேன். எல்லாரும் சேர்ந்து வள்ளி மேடத்துக்கு கிஃப்ட் கொடுத்தோம். அவங்க கோபப்பட்டாங்க, “ஏன் இவ்வளவு செலவு பண்ணி இதெல்லாம் வாங்கினீங்க?”ன்னு கேட்டாங்க. அதுக்குப் பிறகு, நாங்க எடுத்த குரூப் போட்டோவை 13 பேர் கையிலயும் கொடுத்தாங்க. அந்தப் போட்டோவுக்கான காசை ஒவ்வொருத்தரும் தனித்தனியாகக் கொடுக்கிறதாத்தான் சொல்லி இருந்தோம். ஆனா வள்ளி மேடம், “அது எல்லாத்துக்கும் நானே கொடுத்துட்டேன், வேண்டாம்”னு சொல்லிட்டாங்க.
கடைசியா, நான் எல்லாருக்காகவும் எழுதியிருந்ததை வள்ளி மேடத்துக்கிட்ட கொடுத்தேன். அதுல வள்ளி மேடத்துக்கு நான் எழுதினதை அவங்க படிச்சிட்டு, கொஞ்ச நேரம் எதுவுமே சொல்லல. “ரொம்பக் கவிநயத்தோட இருக்கு, ரொம்ப நன்றி”ன்னு சொன்னாங்க. ஆனா, மேடம் கண்கலங்கினதா பையஸ் சொன்னாரு. வள்ளி மேடத்துக்கு நான் என்ன எழுதினேன்கிறது ஞாபகம் இல்ல. ஆனா, என் மனசுல இருந்து பெரிய மரியாதையோடையும் பக்தியோடையும் எழுதிக் கொடுத்திருந்தேன். அன்னைக்கு நான் மேடத்துக்கு எழுதினதை சவுதாதான் எல்லாருக்கும் முன்னாடி படிச்சாங்க. மத்த எல்லாருக்கும் நான் எழுதினதை வள்ளி மேடம் எல்லாருக்கும் முன்னாடி படிச்சுக் காட்டிட்டு, அவங்ககிட்ட கொடுத்தாங்க. பாலகுமாருக்கு எழுதினதைக் கேட்டுட்டு அவர் அழுதாரு. பையஸும் அழுதாரு.
இந்த இடத்துல ஒரு முக்கியமான விஷயத்தை உங்களுக்குச் சொல்லணும். ஐ.எல்.எஸ். கிளாஸ்ல பரீட்சை எல்லாம் நடந்துச்சு. அதுக்குப் பிறகு எல்லார்கிட்டயும் சில கேள்விகள் கேட்டு, அதை வள்ளி மேடம் எழுதி வச்சாங்க; அது ஒரு நடைமுறை. அதுல ரெண்டு முக்கியமான கேள்வி எல்லார்கிட்டயும் கேட்கப்பட்டுச்சு. முதல் கேள்வி: “உங்களுக்குக் கண்ணு தெரிஞ்சிருந்தா நீங்க என்ன ஆகணும்னு நினைச்சீங்க?” நான் சொன்ன பதில்: ஐ.பி.எஸ். இரண்டாவது கேள்வி: “சரி, இப்ப என்ன ஆகணும்னு நினைக்கிறீங்க?” இந்தக் கேள்விக்கு நான் சொன்ன பதில்: “ரைட்டர் ஆகணும், விசுவலி சேலஞ்ச்டு பீப்புளுக்குச் சர்வீஸ் பண்ணணும்.”
கடைசி நாள், கடைசி நேரம், என்.ஐ.வி.எச். பிரிய மனமில்லாம அழுதேன். என்.ஐ.வி.எச். எனக்கு ஒரு கோவில். அந்தக் கோவில்ல நான் பார்த்த கடவுள் வள்ளி மேடம். நான் உங்ககிட்ட சொன்னேனே, என் கடவுள்களை ஒண்ணு ஒண்ணா உங்களுக்கு அறிமுகப்படுத்துவேன்னு. வள்ளி மேடம் என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த இரண்டாவது குரு. நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தும் என்னோட அடுத்த கடவுள் வள்ளி மேடம்தான். நீங்க என்ன யோசித்தாலும் அது எனக்குக் கவலை இல்லை. இங்கு பலருக்கு எல்லாமே ஈசியாகக் கிடைக்கிறதாலேயே அதோட மதிப்பும் மரியாதையும் யாருக்கும் தெரிவதே இல்லை. எனக்கு அப்படி இல்லை, கிடைக்கிற ஒவ்வொரு விஷயத்தோட மதிப்பும் மரியாதையும் எனக்குத் தெரியும்.
சாகணும்னு நினைச்ச நான் சீக்கிரம் செத்துரக்கூடாது, நான் வாழ வேண்டியதும் செய்ய வேண்டியதும் நிறைய இருக்குன்னு முடிவு பண்ணிட்டு, பெரும் நம்பிக்கையோட என்.ஐ.வி.எச்சிலிருந்து வெளியில் வந்தேன். நான் முதல்ல என்னை நிலைநிறுத்திக்க வேண்டியது இருந்துச்சு. அதனால தீவிரமாப் படிக்க ஆரம்பிச்சேன். அடுத்து வேற ஏதாவது கத்துக்கணும்னு டிசம்பர் மாசம் என்.ஏ.பி.க்குப் போனேன். அங்கேயும் சில சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்துச்சு. அதெல்லாம் சொல்லணும்னா இன்னும் ரெண்டு வாரம் அதிகமாப் போகும், பரவாயில்லையா?
சரி சரி, சொல்லல. அங்கிருந்து நான் ஒரு மாசத்துலயே திரும்பி வந்துட்டேன். 2019 ஜனவரி 21-ஆம் தேதி எட்டாம் வகுப்புத் தேர்வு எழுதச் சென்னைக்குப் போனேன். திருவல்லிக்கேணியிலதான் (ட்ரிப்ளிகேன்) எனக்கு எக்ஸாம் சென்டர். திருவான்மியூரில் எங்க மணி இருந்தான். நான் அவன் வீட்ல தங்கி எக்ஸாமுக்குப் போனேன். “என்ன பஸ் மட்டும் ஏத்தி விடு”ன்னு சொல்லியும் அவன் கேட்காம, எனக்கு ஒவ்வொரு நாளும் காலையிலேயும் கார் புக் பண்ணி விடுவான். நான் திரும்பி வர்றதுக்குக் கார் வேண்டாம்னு சொல்லிட்டு, சதீஷை வரச் சொல்லி, என்னை பஸ் ஏத்தி விடச் சொல்லுவேன். திருவான்மியூரில் வந்து இறங்கிடுவேன், மணி வந்து என்னைக் கூட்டிட்டுப் போவான்.
வெற்றிகரமா எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றேன். “16 வயதினிலே” படத்துல, “ஆத்தா, நான் பத்தாம் கிளாஸ் பாஸ் பண்ணிட்டேன்”னு சொல்ற மாதிரி, “நான் எட்டாம் கிளாஸ் பாஸ் பண்ணிட்டேன்”னு கத்திச் சொன்னேன்.
அடுத்து என்ன? 2020, இந்த வருஷத்தை மறக்க முடியுமா? ஒரு அவமானம், பார்வையற்ற சமூகத்தில் நான் யாருன்னு என்னை அறிமுகப்படுத்திச்சு. அதுக்குப் பின்னாடி நடந்த அரசியல், வியாபாரம், இப்படிப் பல உண்மைகள் இருக்கு. இதுவரைக்கும் சொல்லாததை உங்ககிட்ட சொல்றேன். என்னோட பத்தாம் வகுப்பு எக்ஸாமை நினைச்சாலே எனக்குப் பயம் வரும். காரணம் என்னன்னு அடுத்த பகுதியில் சொல்றேன்.
***தொடர்புக்கு: ashokbala1387@gmail.com
பேச: 9626261773
கருத்துகள் (0):
Post a Comment