நேரடியாக முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

கட்டுரை: நான் வாசித்த பிரெயில் இதழ்கள்: வெ. சுகுமாறன்

graphic மேசையின் மீது விரித்துவைக்கப்பட்டுள்ள பிரெயில் இதழை, பார்வையற்ற ஒருவர் இரு கைகளின் விரல் நுனிகளால் எழுத்துக்களைத் தடவிப் படித்துக் கொண்டிருக்கிறார். அவர் நீல நிறச் சட்டையும் கருப்புக் கண்ணாடியும் அணிந்துள்ளார். பின்னணியில் அலமாரியில் பல இதழ்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

1963-இல் தொடங்கியது என்னுடைய பிரெயில் பத்திரிகை வாசிப்பு. நான் அப்போது ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரம். எனக்கு ஆங்கிலம் சொல்லித் தந்த என்னுடைய மூத்தவரான (senior) கே. மாரியப்பன், நிறைய பத்திரிகைகளை ஆங்கிலத்தில் அமெரிக்காவிலிருந்தும் இங்கிலாந்திலிருந்தும் வாங்கிக் கொண்டிருந்தார். அவர் எனக்கு சொன்ன ஒரே ஒரு அறிவுரை: "பத்திரிகைகளை படி. எதுவும் புரியாது; ஆனால் தொடர்ந்து படி, தானாக புரியும்" என்றார். நான் அதை அப்படியே செய்தேன்.

 

ஆறாம் வகுப்பில் எனக்கு எதுவுமே புரியவில்லை. ஆனால் ஏழாம் வகுப்பில் ஓரளவு புரிய ஆரம்பித்தது. அப்போது நான் படிக்கத் தொடங்கிய  பத்திரிகைகள் யூத்  ஹேப்பினஸ் (Youth Happiness), டிஸ்கவரி (Discovery), ஜான் மில்டன் (John Milton), லைஃப் அண்ட் ஹெல்த் (Life and Health) — இவையெல்லாம் அமெரிக்காவிலிருந்து வந்த பத்திரிகைகள். இதில் 'லைஃப் அண்ட் ஹெல்த்' என்பது முழுக்க முழுக்க சுகாதாரம் பற்றியது. அதில்தான் "டிரிங்க் மோர் வாட்டர்" (Drink More Water) என்ற ஒரு கட்டுரை படித்தேன். அதிலிருந்துதான் நான் நிறைய தண்ணீர் குடிக்க ஆரம்பித்தேன்.

 

அந்தப் பத்திரிகைகளிலிருந்து நான் கற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, இங்கிலாந்திலிருந்தும் சில பத்திரிகைகளை மாரியப்பன் வாங்கிக் கொண்டிருந்தார்; அவற்றையும் எனக்குத் தந்தார். இன்டலிஜென்ஸ் டைஜஸ்ட் (Intelligence Digest) — இது முழுக்க முழுக்க அரசியல் பத்திரிகை. ஃபேமிலி டாக்டர் (Family Doctor) — இது முழுக்க முழுக்க சுகாதாரத்தைப் பற்றிய பத்திரிகை. ஹோரோ ஜகுண்டா (Horo Jucunda) — இது கதை, கவிதை என்று எல்லாம் கலந்து வரும். இப்படியாக சில பத்திரிகைகளை அவர் எனக்குத் தந்தார்; அவற்றையெல்லாம் நான் படித்தேன்.

 

அமெரிக்காவிலிருந்து வெளிவந்த 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' (Reader's Digest) பிரெயில் எடிஷன் நானே எழுதிக் கேட்டுப் பெற்றேன். பள்ளிப் பிராயம்  முடிந்தபின் பத்திரிகைகளை மட்டுமே படித்துக் கொண்டிருந்த ஒரு காலகட்டம் அது. 1980-களுக்குப் பிறகு, சர்வதேச அளவில்  'பிரெயில் இன்டர்நேஷனல்' (Braille International) என்ற பத்திரிகை பார்வையற்றோருக்கானதாக வெளிவந்துகொண்டிருந்தது. அது டெல்லியில் பிரெயிலாக்கப்பட்டு, எல்லா நாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வந்தது. அந்தப் பத்திரிகையையும் படித்திருக்கிறேன். அதுபோல அமெரிக்காவிலிருந்து வெளிவந்த குழந்தைகளுக்கான பிரெயில் பத்திரிகை சில்ட்ரன்ஸ் ஃப்ரண்ட் (Children’s Friend) மிக முக்கியமானது.

 

அதன் பிறகு நான் படித்த பத்திரிகைகளில் முக்கியமானது அமெரிக்காவிலிருந்து வந்த 'டயலாக்' (Dialogue). டயலாக் பத்திரிகையில் முழுக்க முழுக்கப் பார்வையற்றவர்கள் எழுதினார்கள். ‘பார்வையற்றவர்கள் வெளியே கிளம்பும்போது எப்படி உடை மாற்ற வேண்டும், எப்படி அதை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்’ என்றெல்லாம் கூட எழுதினார்கள். அப்படி பார்வையற்றவர்களின் வாழ்க்கையைப் பற்றிய விவரங்களைத் தந்து கொண்டிருந்த பத்திரிகை டயலாக்.

 

பிறகு 'பிரெயில் ஃபோரம்'

(Braille Forum)

என்ற ஒரு பத்திரிகை வாங்கினேன். பிரெயில் ஃபோரம் பார்வையற்றவர்களின் இயக்கங்களைப் பற்றியும், அல்லது எங்காவது ஏதாவது பார்வையற்றவர் சிரமப்பட்டிருந்தால் அதைப் பற்றியும் எழுதிக் கொண்டிருந்தது.

 

இதற்கிடையில் நான் ஒரு பிரெயில் பத்திரிகை பற்றிக் கேள்விப்பட்டு ஜப்பானுக்கு எழுதினேன். ஜப்பானிலிருந்து 'தி பிரெயில் நியூஸ்' (The Braille News) என்ற ஒரு பத்திரிகை வந்தது. சின்னப் பத்திரிகை, அதாவது அஞ்சாறு காகிதம்தான் இருக்கும். அந்த பிரெயில் நியூஸ் பத்திரிகையில்தான் அந்தச் செய்தியைப் பார்த்தேன்: மிகச் சின்ன நாடான ஜப்பானில் பார்வையற்றவர்களுக்காக மட்டும் 950 வானொலிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்ற வியப்பூட்டும் செய்தி அது.

 

பள்ளியில் படித்த காலத்தில் 'ஓக் லீஃப்' (Oak Leaf) என்ற ஒரு பத்திரிகைகூட வந்துகொண்டிருந்தது. அதுபோக கிறிஸ்தவப் பத்திரிகைகள் நிறைய வந்தன. அடல்ட் பைபிள் ஸ்டடீஸ் (Adult Bible Studies), டிராக்ட் மெசஞ்சர் (Tract Messenger), காஸ்பல் (Gospel) என்றெல்லாம் வந்தன.

 

நான் ஏழாவது படித்துக் கொண்டிருந்தபோது, 'அன் இன்ட்ரடக்ஷன் டு காஸ்பல்' (An Introduction to Gospel) என்ற ஒரு புத்தகம் எனக்கு அனுப்பப்பட்டது. அந்தப் புத்தகத்தில் இருந்த முதல் வாக்கியம், இன்றும் எனக்குள் ஒரு அரசியல் கேள்வியை உருவாக்கித் தந்து கொண்டிருக்கிறது. அந்தப் புத்தகத்தில் இருந்த முதல் வாக்கியம் இதுதான்:

 

"One who destroys freedom of a man is an enemy to God." (மனித சுதந்திரத்தை அழிப்பவன் கடவுளின் எதிரி).

 

அப்படியானால் இன்றைய அமெரிக்காவின் நிலை என்ன? இந்தக் கேள்வியை இப்போது நான் முன்வைப்பதற்கு அந்த 'அன் இன்ட்ரடக்ஷன் டு காஸ்பல்'தான் காரணமாக இருக்கிறது.

 

இப்படியாக பல பத்திரிகைகளை வெளிநாடுகளிலிருந்து வாங்கிக் கொண்டிருந்தேன். இங்கிலாந்திலிருந்து RNIB 'ரீட் ஆன்' (Read On) என்ற ஒரு பத்திரிகையை அனுப்பிக் கொண்டிருந்தது. அந்த ரீட் ஆனை அவர்களே நிறுத்திவிட்டார்கள். அமெரிக்காவிலும் பொருளாதாரச் சிக்கல் வந்தவுடன் பல பத்திரிகைகள் நின்றுபோனது. அதில் மெடில்டா ஜிக்லர்' (Matilda Ziegler) என்பது ஒரு குறிப்பிடத்தக்க பத்திரிகை.

 

1907-இல் தொடங்கி 2009 நவம்பர் வரை 102 ஆண்டுகள் ஒரு பிரெயில் பத்திரிகை வந்தது என்றால் அதன் வீச்சு எப்படிப்பட்டது என்பதை நாம் உணர முடியும். அப்படி ஒரு பத்திரிகை வந்துகொண்டிருந்தது; நல்ல நல்ல கட்டுரைகள் அதில் இடம்பெற்றிருந்தன. அந்தப் பத்திரிகையும் நின்றுபோனது. இப்படிப் பல பத்திரிகைகள் நின்றுவிட்டன. இப்போது என்ன பத்திரிகைகள் வருகின்றன என்று எதுவுமே தெரியவில்லை. சில பத்திரிகைகள் வருவதாகச் சொல்லுகிறார்கள்; 'தி புரோகிரஸ்' (The Progress) வந்துகொண்டிருக்கிறது என்கிறார்கள். அதற்கு நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்; ஆனால் சரியான பதில் எனக்குக் கிடைக்கவில்லை.

 

நான் சொன்னவையெல்லாம் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளின் கதை. இந்தியாவைப்  பொறுத்தவரை, அப்போது வந்துகொண்டிருந்த பத்திரிகைகளில் 'பார்வையற்றோருக்கான குரல்' என்ற ஒரு பத்திரிகையை தமிழ்நாடு NAB வெளியிட்டுக்கொண்டிருந்தது. பிறகு சிஎஃப்பிஐ (CFBI) வெளியிட்ட 'அம்புலிமாமா' தமிழிலும் ஆங்கிலத்திலும் வந்துகொண்டிருந்தது. அதுபோக 'பூவாளி' என்றெல்லாம் பத்திரிகைகளை அவர்களே தயாரித்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

 

இப்போதைக்கு நான் மூன்று பத்திரிகைகள் மட்டுமே வாங்கிக் கொண்டிருக்கிறேன்; அவ்வளவுதான் கிடைக்கின்றன. அதாவது:

 * NAB வெளியிட்டுக்கொண்டிருக்கிற 'தி டச்' (The Touch)

 * ஆல் இந்தியா கான்ஃபெடரேஷன் ஆஃப் தி பிளைண்ட் (AICB) வெளியிட்டுக்கொண்டிருக்கிற 'பிரெயில் டைஜஸ்ட்'

(Braille Digest)

 *மும்பையிலிருந்து  உபாசனா மகதி வெளியிட்டுக்கொண்டிருக்கிற 'ஒயிட் பிரிண்ட்'

(White Print)

இந்தப் பத்திரிகைகள் மட்டுமே இப்போது எனக்கு வந்துகொண்டிருக்கின்றன. இனிவரும் காலங்களில் ஏதேனும் பத்திரிகைகள் வருமா என்று தெரியவில்லை.

 

பிரெயில் பத்திரிகை என்பது பார்வையற்றவர்களுக்கான அத்தியாவசியத் தேவை. இதன் முக்கியத்துவத்தை நாம் எல்லோரும் உணர வேண்டும்; நாம் ஒவ்வொருவரும் அதற்காக ஏதேனும் செய்தாக வேண்டும். தமிழில் ஒரு பிரெயில் பத்திரிகை வருவதற்கான முயற்சியை நாம் எல்லோரும் சேர்ந்து செய்தாக வேண்டும். இதுவே என்னுடைய மிக ஆழமான விருப்பம். இது நிறைவேறுமா என்பது குறித்துக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

 

***வே.சுகுமாரன்

 

***எழுத்தாளரும் கவிஞருமான திரு. வே. சுகுமாரன் அவர்கள், பணிநிறைவு பெற்ற வரலாற்றுத்துறை பேராசிரியர். நெருப்பு நிஜங்கள், காத்திருப்பு கவிதைத் தொகுப்புகள், எங்கிருந்து வந்தாள் குறுநாவல், நியாயங்கள் காயப்படுவதா கட்டுரைத் தொகுப்பு, காட்டுவாத்துகள்  மூன்று சீனப்பெண்களின் கதை (மாவோவின் மறுபக்கமும்கூட ) என்ற ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு முதலான நூல்களை எழுதியுள்ளார்.

 

குறிப்பு: எங்கிருந்து வந்தாள் குறுநாவல், மதுரையிலு்ள்ள இந்தியப் பார்வையற்றோர் சங்கத்தால் (IAB) பிரெயிலில் வெளியிடப்பட்டுள்ளது.

 

தொடர்புக்கு: sukumaran97@gmail.com

 

அலைபேசி: 9443112831
www.thodugai.in
கட்டுரையாளரின் குரலைக் கேட்க:

கருத்துகள் (0):

Post a Comment

தளத்தின் மேலே செல்ல