நேரடியாக முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

பேட்டி: என் பிள்ளை எனக்குக் கிடைச்ச பொக்கிஷம்

கேட்போரை மனம் உருகவைக்கும் மாயக்குரலோன் சிறுவன் சர்வேஸ்வரன், விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 11-ல், இறுதிப் போட்டியில் பங்கேற்கிறார். எதிர்வரும் நவம்பர் 15, ஞாயிறன்று நேரலையில் நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டியில் குழந்தை சர்வேஸ்வரன் வெற்றிபெற வேண்டும் என அவருக்குத் தொடுகைமின்னிதழ் தன்னுடையவாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

graphic: "விஜய் தொலைக்காட்சியின் 'சூப்பர் சிங்கர் ஜூனியர்' நிகழ்ச்சியில் சிறுவன் சர்வேஸ்வரன் மைக் அருகில் நின்று மகிழ்ச்சியுடன் பாடும் காட்சி."
 சிறுவன் சர்வேஸ்வரன் இத்தகைய உலகளாவிய புகழை அடைவதற்கு முன்பாக, அவருடைய திறமையை அங்கீகரிக்கவும், அவருடைய அம்மா திருமதி. சித்ரா அவர்களின் விடாமுயற்சியை இந்த உலகுக்கு எடுத்துச் சொல்லவும், தொடுகை மின்னிதழ் வலையொளித் தளத்தில் இருவரையும் பேட்டி கண்டோம்.

 

தன் திறமையால் உலகப் புகழ்பெற்றிருக்கிற சர்வேஸ்வரன் மற்றும் அவர் அம்மா பங்கேற்ற அந்தக் காணொளி, 30000 பார்வைகளைக் கடந்து, ஒவ்வொரு நாளும் புதிய புதிய வாசகர்களைச் சென்றடைந்துகொண்டே இரு்க்கிறது. தொடுகை மின்னிதழ் வலையொளித் தளத்தில் வெளியான காணொளிகளில் அதிக பார்வைகளைப் பெற்ற காணொளி என்ற பெருமையையும் பெற்றுள்ளது. எனவே, அந்தப் பேட்டியினை எழுத்து வடிவில் ஆவணப்படுத்துவது அவசியம் எனக் கருதுகிறது தொடுகை மின்னிதழ்.

***

தொகுப்பாளர்: தொடுகை வாசகர்களுக்கு வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆழ்வினை அரங்கத்தில் இன்று ஒரு புதிய திறமையாளருடன் வந்திருக்கிறோம். நீங்கள் எதிர்பார்க்கும் இளைஞரோ, மூத்தவரோ அல்ல அவர். ஒரு குழந்தை. குழந்தை சர்வேஷ்.

 

அவருடைய பாடல்களை நீங்கள் கேட்டிருக்கலாம். “இப்படியெல்லாம் ஒரு குழந்தை பாடுகிறதா?” என்று வியந்து கேட்ட பாடல்கள் அவை. அவருடைய அம்மா சித்ரா நம்முடன் இருக்கிறார். அவரிடம் பேசுவோம். வணக்கம்மா.

 

சித்ரா: வணக்கம் சார்.

 

கே: தம்பி பேரு சர்வேஷ். உங்க பேரு?

 

ப: என் பேரு சித்ரா, சார்.

 

கே: உங்க குடும்பப் பின்னணியைப் பற்றிச் சொல்லுங்க.

 

ப: எங்க ஊர் ராப்பூசல் கிராமம், சார். நாங்க இலுப்பூர்ல இருக்கோம். எனக்கு ஒரே பையன்தான். அவனுக்கு சிறு வயதிலிருந்தே பார்வை இல்லை.

graphic: "மேடையில் தன் தாயுடன் நின்றுகொண்டு, 'சூப்பர் சிங்கர் ஜூனியர்' நிகழ்ச்சிக்கான 'டிக்கெட் டூ ஃபினாலே' (Ticket to Finale) பட்டத்தைப் பெருமையுடன் கையில் வைத்திருக்கும் சிறுவன் சர்வேஸ்வரன்."
 கே: ஒரே பையன்தானா உங்களுக்கு?

 

ப: ஆமாம் சார், ஒரே பையன்தான்.

 

கே: இப்ப என்ன வயசாகுது?

 

ப: அவனுக்கு ஏழு வயசாகுது, சார்.

 

கே: அவருக்கு என்னென்ன உடல் குறைபாடுகள் இருக்கு?

 

ப: பார்வை மட்டும் இல்லை, சார். மத்தபடி எல்லாமே நல்லா, ஆக்டிவ்வா இருப்பான்.

கே: எதனால பார்வை போச்சு?

 

ப: எங்களுக்கு பதின்மூன்று வருஷம் கழிச்சு பிறந்த பையன் சார். ஆறு மாசத்திலேயே குழந்தை பிறந்துட்டான்.

 

அவன் எடை ரொம்பக் குறைவாக இருந்தது. அரை கிலோதான் இருந்தான். அந்த நிலையில் குழந்தையைக் காப்பாற்றுவது ரொம்பக் கடினம்னு சொன்னாங்க. ஆணா, பெண்ணான்னே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருந்தான். வளர்ச்சியும் குறைவாக இருந்தது.

 

குழந்தையைக் காப்பாற்ற முடியாத சூழ்நிலையில், “பரவாயில்லை, என் குழந்தை எப்படி இருந்தாலும் நான் பார்த்துக்குறேன்”னு சொல்லித்தான் திருச்சியில் சிகிச்சை பார்த்தோம். அந்தப் பையன் எனக்குக் கிடைத்த பொக்கிஷம் சார்.

 

கே: எத்தனை மாசம் தம்பி ஆஸ்பத்திரியில் இருந்தான்?

 

ப: நாலு மாசம் இருந்தான் சார். நாலு மாசம் அரசு மருத்துவமனையில இருந்தான்.

 

கே: அப்பா என்ன வேலை பார்க்குறாரு?

graphic: "சர்வேஸ்வரனை அவர் அப்பா தூக்கி வைத்துக் கொண்டு, இருவரும் மகிழ்ச்சியுடன் ஒருவரையொருவர் பாசமாகப் பார்த்துக் கொள்ளும் காட்சி."
 ப: கூலி வேலைதான் சார். கார்பெண்டர் வேலைக்குப் போயிட்டு இருக்காங்க. எப்பவாவது சொந்த வேலை வரும். இல்லன்னா தினக்கூலி வேலைதான்.

 

இத வச்சுத்தான் குடும்பத்தைப் பார்த்துட்டு இருக்கோம். என் பையன் இப்படி இருக்கான்னு நான் ஒருநாளும் வருத்தப்பட்டதில்லை. அவன் எங்களுக்கு கிடைச்ச பெரிய பொக்கிஷம்.

 

கே: பதின்மூன்று வருஷத்துக்குப் பிறகு பிறந்த குழந்தை. குறைமாதத்தில் பிறந்திருக்கிறான். பார்வை இருக்காது என்று மருத்துவர்கள் சொன்னாங்களா, இல்லை நீங்க கண்டுபிடிச்சீங்களா?

 

ப: மருத்துவர்கள்தான் சொன்னாங்க, சார். முழுமையாகப் பரிசோதனை செய்தபோது பார்வை தொடர்பான வளர்ச்சியில் பிரச்சினை இருப்பது தெரியவந்தது.

 

கண் வளர்ச்சி இருந்தாலும், பார்வை வருவதற்கான நரம்பு வளர்ச்சியில் குறைபாடு இருந்தது. பார்வை வர வாய்ப்பு இல்லைன்னு சொன்னாங்க. ஒரு ஆபரேஷன் பண்ணலாம், ஆனால் அதனால் பார்வை வருமா வராதா என்று உறுதியாகச் சொல்ல முடியாதுன்னும் சொன்னாங்க.

 

கே: ஆபரேஷன் பண்ணீங்களா?

 

ப: பண்ணியாச்சு சார். ஆனா சரியாகல.

 

கே: எத்தனை வயசுல பண்ணீங்க?

 

ப: ஒரு வயசாகும்போது ஆபரேஷன் பண்ணினோம்.

 

கே: பதின்மூன்று வருஷம் காத்திருந்து பிறந்த குழந்தை. அவனைக் காப்பாற்றவே போராடியிருக்கீங்க. பார்வை இல்லைன்னு தெரிஞ்சப்போ உங்க மனநிலை எப்படி இருந்தது?

 

ப: ரொம்ப மனசு உடைஞ்சு போயிட்டேன் சார். இவ்வளவு வருஷம் கழிச்சு பிறந்த குழந்தை. எடை குறைவாக இருந்தாலும் போராடிக் காப்பாத்தி கொண்டு வந்தோம். ஆனா, கண் பார்வை இல்லைன்னு தெரிஞ்சதும் ரொம்ப மன உளைச்சலுக்கு ஆளாயிட்டேன். அப்புறம்தான், “நம்ம குழந்தை என்ன இருந்தாலும் நம்ம குழந்தைதான்”ன்னு மனசைத் தேற்றிக்கிட்டேன்.

 

கே: அதுதான் தாய்மையின் தனிச்சிறப்பு. இதுக்கு முன்னாடி பார்வையற்றவர்களை எப்பவாவது சந்திச்சிருக்கீங்களா?

 

ப: பார்த்திருக்கேன் சார். மருத்துவமனையிலேயே ஒரு குடும்பத்தைப் பார்த்திருக்கேன். கணவனும் மனைவியும் பார்வையற்றவர்கள். அப்போ அவங்களைப் பார்த்து எனக்கு இரக்கமாக இருந்தது. ஆனா, அந்த நிலை நமக்கே வரும்போது அதன் வலி என்னன்னு புரிஞ்சது.

 

கே: ஒரு சாதாரண குழந்தை முகம் பார்க்கும், சிரிக்கும், தவழும். சர்வேஷ் வளர வளர எப்படி இருந்தான்? மற்ற குழந்தைகளுக்கும் அவனுக்கும் என்ன வித்தியாசம் இருந்தது?

 

ப: மற்ற குழந்தைகள் செய்யும் விஷயங்களை அவன் உடனே செய்ய ஆரம்பிக்கல. படுக்கப் போட்டிருந்தா கைகளை உதறி விளையாடுவான். தவழ ஆரம்பித்ததும் எங்கயாவது போய் இடிச்சுக்குவான். பேச ஆரம்பித்த காலத்தில்கூட, “அம்மா”ன்னு உடனே கூப்பிடத் தெரியாது. என்னோட குரலை வைத்துத்தான் என்னைக் கண்டுபிடிப்பான்.

 

ஒவ்வொரு விஷயத்துக்கும் நான் ஏங்கினேன் சார். பையனுக்குப் பார்வை இல்லையே, எப்படி நடப்பான், எப்படி ஒவ்வொன்றையும் கற்றுக்கொள்வான் என்ற கவலை நிறைய இருந்தது. ஆனா, கொஞ்சம் கொஞ்சமாக மற்ற குழந்தைகளைப் போல எல்லாவற்றையும் கற்றுக்க ஆரம்பிச்சான். அவனுடைய ஒவ்வொரு முன்னேற்றத்தையும் பார்க்கும்போது எனக்கு அளவில்லாத சந்தோஷம்.

 

கே: நீங்கள் எதிர்பார்க்காத அளவுக்கு பையன் முன்னேறிக்கிட்டே வந்தான்?

 

ப: கண்டிப்பா சார்.

 

எங்களோட சில உறவினர்கள்கூட, “வேண்டாம், ஏன் இப்படி பையனை வச்சு கஷ்டப்படுற?”ன்னு கேட்டிருக்காங்க. சிலர் ரொம்பக் கொடுமையான வார்த்தைகளையும் சொன்னாங்க. ஆனா, என் குழந்தை எப்படி இருந்தாலும் என்னோட குழந்தை. என் மடியில உயிர் போனாலும் என் மடியிலதான் போகணும். நான் அவனை ஒருபோதும் விடமாட்டேன் என்று உறுதியாக இருந்தேன். என் உறவுகளுக்கு முன்னாடி இன்று என் குழந்தையை வளர்த்து நிக்கிறேன்.

 

கே: இதை அவருடைய அப்பா எப்படி எடுத்துக்கிட்டார்? உங்களுக்கு உறுதுணையாக இருக்காரா?

 

ப: குழந்தையை முதலில் பார்த்தது அவர்தான், சார். நான் குழந்தையை ஒரு பத்து நாள் கழிச்சுதான் பார்க்க முடிஞ்சது. குழந்தை ஐசியூவில் இருந்தான். அவர் குழந்தையைப் பார்த்திருந்தாலும், என்னிடம் உடனே சொல்லவில்லை. குழந்தையின் உடல்நிலை மற்றும் தோற்றத்தைப் பார்த்து அவரும் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார்.

 

பிறகு என்னை ஒரு சிஸ்டர் கூட்டிக்கொண்டு போய், “இதுதான் உன் குழந்தை”ன்னு காட்டினாங்க. பார்த்த உடனே எனக்கு மறுபடியும் மயக்கம் வந்துடுச்சு. அவரும் மனசு ரொம்பப் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனாலும், காலப்போக்கில் எனக்கு ரொம்ப ஒத்துழைப்பாக இருந்தார். என்னோட கஷ்டங்களில் பாதியை அவர்தான் எடுத்துக்குறார். உழைப்பிலிருந்து உதவி செய்வது வரை எல்லாவற்றிலும் எனக்கு முழு ஆதரவாக இருக்கிறார்.

 

கே: ஒரு பார்வையற்ற குழந்தை இருக்கிறது என்று தெரிந்த பிறகு, விசேஷங்களுக்குப் போகும்போது மற்றவர்களின் பார்வை எப்படி இருந்தது?

 

ப: நிறைய வித்தியாசமான அனுபவங்கள் இருந்தது சார். குழந்தை பிறந்த பிறகு நிறைய பேருடைய பார்வைகளைச் சந்திச்சிருக்கேன். தம்பியைப் பார்க்கிற விதமே சிலருக்கு ஒரு மாதிரி இருக்கும். கேட்கக்கூடிய சில வார்த்தைகள் ரொம்ப உருத்தலாக இருக்கும். நிறைய இடங்களில் மனரீதியாக ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கேன். அதனாலேயே சில சமயங்களில் அவங்ககிட்ட இருந்து ஒதுங்கி வந்திருக்கேன்.

 

கே: சர்வேஷின் பாடும் திறமையை எப்படி கண்டுபிடிச்சீங்க? எப்ப கண்டுபிடிச்சீங்க?

graphic: "விஜய் தொலைக்காட்சியின் 'சூப்பர் சிங்கர் ஜூனியர்' மேடையில், மைக் அருகில் நின்றுகொண்டிருக்கும் சர்வேஸ்வரன்  தோளில் பயிற்றுநர் அபினயா  பாசத்துடன் தனது கைகளைப் போட்டுக் கொண்டு நிற்கும் காட்சி."
ப: எனக்கு பாடல்னா ரொம்பப் பிடிக்கும் சார். எப்பவுமே பாடல்கள் கேட்டுட்டே இருப்பேன். சர்வேஷுக்கும் பக்கத்திலேயே பாட்டு கேக்க வச்சுட்டு நான் வேலை பார்த்துட்டு இருப்பேன். அவனும் கேட்டுக்கிட்டே விளையாடுவான்.

 

கே: மொபைல்ல கேட்பானா?

 

ப: இல்லை சார், ரேடியோல கேட்பான். வீட்டில் ரேடியோ எப்பவுமே ஓடிக்கிட்டே இருக்கும். அவனுக்கு மூன்றரை வயசு இருக்கும். சும்மா ஒரு ராகம் மாதிரி பாடினான். இந்தச் சின்ன வயசுல பாட்டு இப்படி வருமா என்று முதலில் கவனிக்கல.

 

ஆனா, அடுத்த தடவை அவன் ராகமாகவே பாடினான். அப்போதான், தம்பி உண்மையிலேயே பாட்டுப் பாடுறான்னு எனக்கே ஆச்சரியமாயிடுச்சு. அப்போ டி. ராஜேந்தர் பாட்டு ஒன்றைப் பாடினான்.

 

கே: என்ன பாட்டு?

 

ப: “என் தங்கைக் கல்யாணி” படத்துல வரும் “பூவாங்கி வந்த நேரம்...” பாடல். அந்தப் பாடலோட ஆரம்ப இசையையே அவன் பாடினான்.

 

கே: “என்னோட என்னோட மீனாட்சி...” அந்தப் பாடலா?

 

ப: ஆமாம் சார், அந்தப் பாடல்தான். அப்பவே எங்களுக்கு ஒரு மாதிரி ஆச்சரியமாயிடுச்சு. அதுக்குப் பிறகு “சங்கீத ஜாதி முல்லை” மாதிரியான பாடல்களையும் பாட ஆரம்பிச்சான்.

 

கே: “காதல் ஓவியம்” படத்துல வர்ற “சங்கீத ஜாதி முல்லை” பாடலா?

 

ப: ஆமாம். அந்தப் பாடலில் பார்வையைப் பற்றிய ஒரு வரி வரும்போது, அவன் இரண்டு காதுகளையும் பொத்திக்கிட்டு கத்த ஆரம்பிச்சிடுவான்.

graphic: "மேடையில் கருப்பு கண்ணாடி அணிந்து மைக்கை கையில் வைத்திருக்கும் சர்வேஸ்வரனின்  அருகில், பின்னணியில் பாடகி கே.எஸ். சித்ரா அவர்கள் பாசத்துடன் புன்னகைத்து நிற்கும் காட்சி."
அவன் எப்படி உணர்ந்தான், என்ன உணர்ந்தான்னு எனக்குத் தெரியல. அந்தப் பாடலைக் கேட்டாலே அழுவான். மறுபடியும் அந்தப் பாடலைப் போட்டுப் பார்த்தேன். அந்த வரி வந்ததும் அழுதுடுவான்.

 

அந்தப் பாடலை இவன் வாயாலேயே பாட வைக்கணும்னு நினைச்சேன். அடுத்தடுத்து கேட்க வச்சு, பிறகு அந்தப் பாடலையும் பாட வைத்தேன்.

 

கே: அது ரொம்பக் கடினமான பாட்டு இல்லையா?

 

ப: கடினமான பாடலெல்லாம் அவனுக்கு அசால்ட்டா பாடுவான் சார். ஜதிகள் நிறைந்த “சங்கீத ஜாதி முல்லை”தான் அவன் ஆரம்பத்தில் பாடிய முக்கியமான பாடல்களில் ஒன்று.

 

கே: இவன் பாடுவதற்காக நீங்க நிறைய முயற்சி எடுக்கிறீங்கன்னு கேள்விப்பட்டேன். என்னென்ன செய்றீங்க?

ப: அவனுக்கு என்னென்ன தேவையோ, எல்லாத்தையும் வீட்டிலேயே ஏற்பாடு பண்ணி வச்சிருக்கேன்.

 

மைக் இருக்கு. ஒரு பாட்டு ரெடி பண்ணணும்னா வீடியோ எடுக்க ஒரு போன், கரோக்கி போட இன்னொரு போன் வச்சிருப்பேன். எல்லாத்தையும் செட் பண்ணி மைக் கொடுத்தா, அவனே கேட்டு பாடுவான். நான் அவனுக்குப் பயிற்சி கொடுக்கறதில்லை. கேட்டதை வைத்தே பாடிடுவான்.

 

கே: சர்வேஷ், நல்லா இருக்கீங்களா?

 

ப: நல்லா இருக்கேன் சார்.

 

கே: எங்களுக்காக ஒரு பாட்டு பாடுங்களேன், குட்டியா.

 

ப:
(
சர்வேஷ் பாடுகிறார்.)

 

கே: அருமை, அருமை! வெரி குட். சாப்டீங்களா?

 

ப: சாப்ட்டேன்.

 

கே: அருமையா பாடுறீங்களே! கமகம், அணுக்கம் எல்லாம் வருதே.

 

கே: எப்போதிலிருந்து பயிற்சிகளை ஆரம்பிச்சீங்க?

 

ப: முதலில் கரோக்கி இல்லாமல்தான் பாடினான். பிறகு யூடியூப் சேனலில் அவன் பாடியதைப் பார்த்துட்டு, ஒரு மேம் இப்ப ஒரு மாசமாக தம்பிக்கு மியூசிக் கிளாஸ் எடுக்கிறாங்க. கர்நாடிக் இசை கற்றுக்கொடுக்கிறாங்க.

 

கே: இப்ப பார்வையற்றோர் பள்ளியில் சேர்ந்து படிக்கிறாரா?

 

ப: படிச்சிட்டு இருக்கான் சார். மூன்றாம் வகுப்பு படிக்கிறான். புதுக்கோட்டை பார்வையற்றோர் பள்ளியில் சேர்த்து படிக்க வச்சிருக்கோம். பள்ளி விட்டு வீட்டுக்கு வர்றப்போ, பாட்டு சொல்லிக் கொடுத்து அவனுக்குப் பயிற்சி அளிச்சிட்டு இருக்கேன்.

 

கே: வேற என்னென்ன விஷயங்களில் சிறப்புக் கவனம் கொடுக்க வேண்டியிருக்கு?

 

ப: மற்ற குழந்தைகளைப் போல அவனாகவே டிரஸ் மாற்றிக்கணும், தலை சீவிக்கணும், குளிக்கணும், சாப்பாட்டை அவனே எடுத்துச் சாப்பிடணும். இதெல்லாம் அவன் கற்றுக்கணும்னு ரொம்ப எதிர்பார்க்கிறேன் சார்.

 

கே: விடுதியில் இருக்கிறதால, அந்தப் பழக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வந்துரும். இப்ப சர்வேஷ் நல்லா பாடுறாரு. கிராமத் திருவிழாவில்கூட பாடினதா ஒரு வீடியோ பார்த்தேன்.

 

ப: ஆமாம் சார். நம்ம ஊரு இரும்பூதி கிராமத்தில் கோவில்ல பாடினான். கலைராஜ் என்ற பையனோட சேர்ந்து மேடையில் ஏறிப் பாடினான்.

 

கே: அடுத்து அவனை எப்படி கொண்டு போகணும்னு ஆசைப்படுறீங்க?

 

ப: பார்வை இல்லாத பையன் என்ற எண்ணமே இல்லாத அளவுக்கு என் பையனை நான் கொண்டு போகணும் சார். என்னை ஒரு மாதிரி பார்த்தவங்களுக்கு முன்னாடி, என் பையனை ஒரு லெவலுக்கு கொண்டு போய் நிறுத்துவேன்.

 

படிப்பிலையும் சரி, இசையிலையும் சரி, அவன் நல்லா முன்னேறணும். அதுதான் என்னோட ஆசை.

 

கே: அவருக்கு இசையில இயல்பான ஞானம் இருக்கு. துல்லியமான அணுக்கங்கள், கமகங்களோட பாடுறாரு. நீங்க உறுதுணையாக இருந்து இசைத்துறையில அவரை வளர்த்துக் கொண்டு வாங்க.

 

இந்தக் காணொளியைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள், இந்தக் குழந்தையை எப்படி வழிநடத்தலாம் என்ற ஆலோசனைகளை அவருடைய தாய்க்கு வழங்கலாம். சிறப்புப் பயிற்சி அளிக்க விரும்புபவர்களும் உதவலாம்.

 

அழைப்பை ஏற்று வந்ததற்கு ரொம்ப மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

 

ப: நன்றிகள் சார்.

 

கே: சர்வேஷ்!

 

ப: சார்!

 

கே: நல்லா பாடுனீங்க. அம்மா சொல்பேச்சு கேட்டு நல்லா படிச்சு, நல்லா பாடி, மிகப்பெரிய ஆளா வரணும். சரியா?

 

ப: ஓகே சார்.

 

கே: வாழ்த்துகள். நன்றி.

 

ப: நன்றி சார்.

 

பேட்டியைக் கேட்க

***

நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டியில் சிறுவன் சர்வேஸ்வரன் வெற்றிபெற வேண்டும் என நீங்கள் விரும்பினால், ஜியோ ஹாட் ஸ்டார் செயலியில் சென்று, அங்கே சூப்பர் சிங்கர் ஜூனியர் 11 எனத் தேடி, அதில் சர்வேஸ்வரன் புகைப்படத்தைத் தெரிவு செய்து, உங்கள் வாக்கினைச் செலுத்துங்கள்.

 அல்லது, 7669148204 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் செய்யுங்கள்.

மிஸ்டு கால் எண்: 76 69 14 82 04

www.thodugai.in

கருத்துகள் (0):

Post a Comment

தளத்தின் மேலே செல்ல