நேரடியாக முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

கட்டுரை: சட்டத்துறையில் பார்வையற்ற மாணவர்கள்: சம வாய்ப்பா? தனித்தீவா? தொடர்ச்சி: - கவிஞர் ஹரிஹரன் வீரப்பன்

graphic: கறுப்பு வழக்கறிஞர் அங்கி மற்றும் வெள்ளை அங்கியணிந்த ஒரு நடுத்தர வயது இந்திய ஆண், மேஜையில் அமர்ந்து பிரெய்லி எழுத்துகள் பொறிக்கப்பட்ட சட்ட ஆவணங்களை வாசிக்கிறார். அவரது வலது கை ஆவணத்தின் மீது படிந்திருக்க, இடது பக்கம் ஒரு மடிக்கணினி திறந்த நிலையில் உள்ளது. அவர் முன்னாலுள்ள மைக்ரோஃபோனைப் பார்த்து மிகுந்த கவனத்துடன் ஏதோ பேசுகிறார். அவரது முகத்தில் ஒரு வழக்கறிஞருக்குரிய கூர்மையும், நம்பிக்கையும் தெரிகிறது. அவருக்குப் பின்னால், பார்வையாளர்கள் அமரும் வரிசையில் மக்கள் கூட்டமும், சிறிது தூரத்தில் நீதிபதிகள் அமர்ந்திருக்கும் மேடையும் மங்கலாகத் தெரிகின்றன. மேடையில் இந்தியாவின் தேசியச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.
சட்டப் படிப்பைத் தெரிவு செய்யும் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் குறித்துக் கட்டுரையின் முதல் பகுதியில் சிந்தித்தோம். ஆனால், பிரச்சனைகள் சட்டக் கல்வி பெறுவதோடு முடிந்துவிடுகிறதா என்ன?

தொழிற்களத்தில் புறக்கணிப்புகளும் டிஜிட்டல் அணுகல்தன்மைச் சவால்களும்

ஒரு பார்வையற்றவருக்குப் படித்து முடித்துவிட்டு வேலை கிடைப்பது என்பது ஒரு பிரம்மாண்டமான அணையைத் தாண்டி, பெருக்கெடுத்து ஓடும் அகன்ற ஆற்றின் கரையை அடையும் போராட்டத்தைப் போன்றதாகும். இத்தனை சவால்களையும் கடந்து வழக்கறிஞராகி, மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும் என நினைப்பவர்களுக்கு தொழிற்களத்தில் அடுத்த பேரிடி காத்திருக்கிறது:

1. ஜூனியர் வழக்கறிஞர் பணியும் சமூகத்தின் இரட்டை நிலைப்பாடும்

ஒரு பார்வையற்ற மாணவர் தன் லட்சியத்தோடு ஒரு வழக்கறிஞர் அலுவலகத்திற்குச் சென்று ஜூனியராகப் பணியாற்ற வாய்ப்பு கேட்கும்போது அங்குள்ள சூழல் முற்றிலுமாக மாறுகிறது. அதே சமூகத்தைச் சேர்ந்த, பார்வை உள்ள மற்றொரு சாதாரண மாணவன் வேலைக்கு வந்தால் உடனே அவனைப் பரிவுடன் ஏற்றுக்கொண்டு வேலை வழங்கும் அதே சமூகம், ஒரு பார்வையற்றவன் என்று வரும்போது மட்டும் முகத்தைத் திருப்பிக் கொள்கிறது. "நீங்கள் எவ்வாறு வழக்கின் கோப்புகளைப் படிப்பீர்கள்? நீதிமன்றத்திற்குள் எப்படிச் சென்று வருவீர்கள்? உங்களுக்குச் சட்டம் தெரியுமா? உதவியாளர்களை வைத்துதானே தேர்ச்சி பெற்றீர்கள்?" எனக் கேட்டு இதயத்தில் நெருஞ்சி முள்ளை வைத்து தைப்பது போல் கேள்விகளைத் தொடுக்கிறார்கள்.

2. நாசுக்கான நிராகரிப்பு

நேருக்கு நேர் வேலை தர மறுப்பதை விடுத்து, "படிப்பை முடித்துவிட்டு ஏதோ ஒரு அரசுப் பணிக்கு முயற்சி செய்" என்றோ அல்லது "வழக்குகளைப் படித்துவிட்டுப் பொறுமையாக வா" என்றோ கூறி எந்தவித அறக்கூச்சமும் இன்றி நாசுக்காக நம்மை வழி அனுப்பி வைத்துவிடுகின்றனர்.

3. ஈ-ஃபைலிங் (E-Filing) வசதியின்மையும் புறக்கணிப்புகளும்

டெல்லி போன்ற இடங்களில் நீதிமன்ற ஆவணங்கள் மின்னணு முறையில் (E-Filing) மாற்றப்பட்டு பார்வையற்றோர் எளிதாக வாசிக்கும் வசதி உள்ளது. ஆனால் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் இத்தகைய மின் ஆவணச் சூழலை இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தாததால், பார்வையற்றவர்கள் நீதிமன்றப் பணிகளில் கடுமையான சிரமங்களுக்கும் புறக்கணிப்புகளுக்கும் ஆளாகின்றனர்.

4. அரசு தரப்பில் மென்பொருள் வசதியின்மை

பார்வையற்றோர் ஆவணங்களை வாசிப்பதற்கு Tech Freedom, InstaReader போன்ற பல்வேறு தனியார் செயலிகள் மற்றும் அமைப்புகள் இருந்தாலும், அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக பார்வையற்றோருக்கான வாசிப்புச் செயலியோ பிரத்யேக ஆவண வசதியோ எதுவுமே உருவாக்கப்படவில்லை என்பது பெரும் குறையாக உள்ளது. ஒரு பார்வையற்றவரால் ஸ்கிரீன் ரீடர் (Screen Reader) தொழில்நுட்பத்தின் மூலம் மிகச் சரியாக 100 பக்கங்களை ஒரு மணி நேரத்தில் படிக்கும் திறனைப் பெற முடியும் என்பதும், ஆவணங்களை மிக விரைவாகத் தட்டச்சு செய்ய முடியும் என்பதும், பழக்கத்தின் அடிப்படையில் நீதிமன்றங்களுக்குச் சென்று வர முடியும் என்பதும் இவர்களுக்குப் புரிவதில்லை. இங்கு அணுகல்தன்மை வசதியை ஏற்படுத்தாதது அரசின் குற்றமா அல்லது பார்வையற்ற மாற்றுத்திறனாளியின் குற்றமா?

வேலைவாய்ப்பு மற்றும் நீதித்துறை உரிமை

தனியார் நிறுவனங்கள் கூடப் பார்வையற்றோரைச் சேர்த்துக்கொண்டு வாய்ப்புகளை வழங்குகின்றன. அமெரிக்காவில் 2014-2015 ஆம் ஆண்டிலேயே மிச்சிகன் மாநில உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்ற நீதிபதி ரிச்சர்ட் பெர்ன்ஸ்டீன் (Justice Richard H. Bernstein) போன்ற பார்வையற்ற சட்ட நிபுணர்கள் நீதித்துறையில் மாபெரும் சாதனை படைத்துள்ள உலகச் சான்றுகள் பல உள்ளன.
2014-இலேயே அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில் பார்வையற்றோர் நீதிபதி பதவி வகிப்பதற்குத் தேவையான நவீன தொழில்நுட்ப மற்றும் அணுகல்தன்மை வசதிகள் சாத்தியமாக்கப்பட்டிருக்கும்போது, இந்தியா போன்ற மதச்சார்பற்ற மக்களாட்சி நாடுகளில் ஏன் அத்தகைய வசதிகள் இன்னும் விரைவாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுகிறது. எனினும், இந்தியாவிலும் தற்பொழுது இந்த நிலை மாறத் தொடங்கியுள்ளது:

1. சிவில் நீதிபதி தேர்வு உரிமை (2024-2025 உச்ச நீதிமன்றத் தீர்ப்பு)

பார்வையற்றவர்கள் உரிமையியல் நீதிபதி (Civil Judge) தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த நிலையை மாற்றி, ரேகா சர்மா எதிர் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் (Rekha Sharma Case) வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியது. இத்தீர்ப்பின் விளைவாக, அண்மையில் கேரளாவின் முதல் முழு பார்வையற்ற பெண் சிவில் நீதிபதியாகத் தான்யா நாதன் சி. (Thanya Nathan C.) நியமிக்கப்பட்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

2. தமிழ்நாடு அரசின் புதிய அரசாணை (2026)

தமிழ்நாடு அரசு மாநில நீதித்துறைப் பணி விதிகளில் திருத்தம் கொண்டு வந்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் மாவட்ட நீதிபதி (District Judge) மற்றும் உரிமையியல் நீதிபதி / சிவில் நீதிபதி (Civil Judge) ஆகிய இரு நிலைகளிலும் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி வேட்பாளர்களுக்கு எனத் தனியாகத் தகுதி மதிப்பெண்கள் (Separate Qualifying Marks) நிர்ணயிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. எனினும், நடைமுறையில் இது முழு பார்வையற்றவர்களுக்கும் முழுமையாகச் சென்றடைவதை உறுதி செய்வதும், 4% இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படுவதும் மிக முக்கியமாகும்.

3. உதவிப் பேராசிரியர் வாய்ப்புகள்

சட்டக் கல்லூரிகளில் எல்.எல்.எம் (LL.M.) முடித்துவிட்டு உதவிப் பேராசிரியராகும் வாய்ப்புகள் இருந்தாலும், 4% இடஒதுக்கீட்டு முறை சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். மத்திய அரசின் மூலமாக வெளிநாடுகளுக்குச் சென்று இலவசமாகப் படிப்பதற்கான அரசாணைகளும் உதவிகளும் உள்ளன. ஆனால், இதைப் பற்றிய போதிய விழிப்புணர்வு அல்லது தகவல்கள் எந்தவொரு தளத்திலும் பேசப்படுவதில்லை.

விழிப்புணர்வும் அரசியல் சமூகத்திற்கான வேண்டுகோளும்

"விழித்திருப்பவனுக்குச் சட்டம் உதவும்" என்ற சட்டக் கோட்பாட்டின்படி, குறைபாட்டின் அடிப்படையில் எவரையும் நிராகரிக்காமல் சம வாய்ப்பினை வழங்க வேண்டும். இங்குள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் நேரங்களில் வாக்கு வங்கியையும் ஓட்டு ஆதாயத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு, தாழ்த்தப்பட்ட சாதியினரின் உரிமைகளுக்காகவும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் மேடைகளில் உரக்கப் பேசுகின்றன. ஆனால், அதே அளவிற்கான குரலையும் அக்கறையையும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்திற்கோ, அணுகல்தன்மை வசதிகளுக்கோ எந்தவொரு அரசியல் கட்சியும் முன்னெடுப்பதில்லை.
தாழ்த்தப்பட்ட மக்களையும் பெண்களையும் சாதிய மற்றும் சமூக அடக்குமுறைகளிலிருந்து மீட்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் அவர்களின் சமத்துவ உரிமையை உறுதி செய்வதும் அரசின் கடமையாகும். அனைத்துக் கட்சிகளும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகளுக்காகவும் குரல் எழுப்பும் நாளில் மட்டுமே இங்கு உண்மையான சமூக மாற்றம் சாத்தியமாகும்!
அதேவேளையில், பார்வையற்ற மாணவர்களுக்கும் எனது அன்பான வேண்டுகோள் ஒன்று உள்ளது: இன்றைய காலகட்டத்தில் தொலைபேசியின் பயன்பாடு பார்வையற்றவர்களைப் படிப்பிலிருந்து விலக்கி வைத்துவிடும் அபாயம் உள்ளது. சில கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தேர்வு எழுத வரும் உதவியாளர்கள் தொலைபேசி மூலமாகப் பார்த்து எழுதும் தவறான பழக்கம் அதிகரித்துள்ளது.
சட்டக் கல்லூரிகளில் இத்தகைய செயல்கள் அனுமதிக்கப்படுவதில்லை; இதே நேர்மையான நடைமுறையை அனைத்துக் கல்லூரிகளும் பின்பற்ற வேண்டும். உதவியாளர்கள் மூலமாகக் குறுக்கு வழியில் தேர்ச்சி பெற்றுவிட்டால், பிற்காலத்தில் உங்களை நீங்களே ஏமாற்றிக்கொண்டு வாய்ப்புகளை இழப்பீர்கள்.
ஒரு சாதாரண மாணவன் தவறு செய்தால் அது சமூகத்தின் கண்ணில் மறைந்துவிடும். ஆனால், ஒரு மாற்றுத்திறனாளி தவறு செய்யும்போது, "இவர்கள் எல்லோருமே இப்படித்தான்" என்ற சமூகத்தின் எதிர்மறை எண்ணம் உருவாகிவிடும். எனவே, நூலக வசதிகளும் பிற வசதிகளும் கிடைக்கும்போது அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு மன உறுதியோடு போராட வாருங்கள்! களம் என்பது நமக்குத்தானாக அமையாது; நம்மை நாமே தயார்படுத்திக்கொண்டு, காலத்தின் வழியில் கனவை நோக்கிப் பயணிப்போம்!
கற்பனையில் அல்ல... கனவுகளின் காதலனாக,
----------
சட்டக் கல்லூரி ஒன்றில் ஐந்தாம் ஆண்டு பயின்றுவரும் கட்டுரையாளர், ஒரு பார்வை மாற்றுத்திறனாளி.
***தொடர்புக்கு: hariveerappan4@gmail.com

கருத்துகள் (0):

Post a Comment

தளத்தின் மேலே செல்ல