
சிறு வயது முதலே பலருக்கும் கணிதம் என்றாலே ஒருவித அச்சமும் தயக்கமும் ஏற்படுவது உண்டு. குறிப்பாகப் பார்வைத்திறன் குறைபாடு உடையவர்களில் பலர் கணிதத்தின் மீது ஒருவித ஒவ்வாமையுடன் இருப்பதைப் பார்க்கிறேன். ஆனால், கணிதம் உண்மையில் அவ்வளவு கடினமான பாடமல்ல. கணிதத்தின் அடிப்படையாக இருப்பவை பத்து எண்கள் மட்டுமே. அவை 0 முதல் 9 வரையிலான எண்கள். இந்தப் பத்து எண்களின் வெவ்வேறு சேர்க்கைகளில்தான் நாம் பயன்படுத்தும் அத்தனை எண்களும் உருவாகின்றன.
கற்றுக்கொடுப்பவர்களும் கற்றுக்கொள்பவர்களும் சிறிது ஆர்வத்துடன் கணிதத்தின் நுணுக்கங்களையும் சுவாரஸ்யங்களையும் புரிந்துகொண்டால், கணிதத்தை மிக எளிதாகக் கையாள முடியும்.
இன்றைய சூழலில் போட்டித் தேர்வுகளே பலருடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கியமான வாயில்களாக மாறிவிட்டன. குறிப்பாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டிஎன்பிஎஸ்சி தொகுதி IV தேர்வில் கணிதத்துக்கு மட்டும் 25 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
நீங்கள் கணிதத்தில் புலியாக இருக்கலாம். எவ்வளவு பெரிய கணக்கையும் கூட்டி, கழித்து, பெருக்கி, வகுத்து விடையைக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், அதற்கான நேரமும் அவகாசமும் வேண்டுமே, நண்பர்களே! தேர்வு அறையில் அமர்ந்துகொண்டு ஒவ்வொரு கணக்கையும் நீண்ட நேரம் செலவழித்துச் செய்துகொண்டிருக்க முடியாதல்லவா?
குறிப்பாக, கொடுக்கப்பட்டுள்ள நான்கு விடைகளில் பொருத்தமில்லாதவற்றை நீக்கிவிட்டு, சரியான விடையை விரைவாகத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.
அப்படியானால் என்ன செய்வது?
இதற்கான ஒரே வழி, கணிதத்தில் பயன்படும் சில எளிய குறுக்குவழிகளைத் தெரிந்துவைத்துக்கொள்வதுதான். குறைந்த நேரத்தில் கணக்குகளைச் செய்து முடிக்க உதவும் சில சுவாரஸ்யமான குறுக்குவழிகளை இனி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
5-இல் முடியும் எண்களின் வர்க்கத்தைக் காணும் எளிய வழி
ஒரு எண்ணை அதே எண்ணால் பெருக்கும்போது கிடைக்கும் விடையே அந்த எண்ணின் வர்க்கம் எனப்படும்.
எடுத்துக்காட்டாக:
3-இன் வர்க்கம்: 3 × 3 = 9.
இப்போது, ஒன்றாம் இடத்தில் 5 என்ற எண்ணைக் கொண்டிருக்கும் எண்களின் வர்க்கத்தை மிக எளிதாகக் கண்டறிய ஒரு குறுக்குவழியைப் பார்ப்போம்.
1. 15-இன் வர்க்கம் எப்படிக் காண்பது?
15 × 15 = ?
முதல் படி: 15 என்ற எண்ணின் இறுதியில் இருக்கும் 5-ஐ, அதே 5-ஆல் பெருக்க வேண்டும்.
5 × 5 = 25.
கிடைத்த 25-ஐ விடையின் வலதுபுறத்தில் எழுதிக்கொள்ள வேண்டும்.
இரண்டாம் படி: மீதமுள்ள பத்தாம் இட எண்ணான 1-ஐ, அதற்கு அடுத்த எண்ணான 2-ஆல் பெருக்க வேண்டும்.
நிற்க! இங்கே நான் அடுத்த எண் என்று சொல்வது, எண் வரிசையை. அதாவது 1 அடுத்து 2.
1 × 2 = 2.
கிடைத்த 2-ஐ ஏற்கெனவே எழுதிய 25-க்கு இடதுபுறம் சேர்க்க வேண்டும்.
ஆகவே, 15 × 15 = 225.
2. 25-இன் வர்க்கம் காண்போமா?
25 × 25 = ?
முதல் படி: வழக்கம்போல 5 × 5 = 25 எனக் கணக்கிட்டு, விடையின் வலதுபுறத்தில் 25-ஐ எழுதிக்கொள்ள வேண்டும்.
இரண்டாம் படி: பத்தாம் இட எண்ணான 2-ஐ, அதற்கு அடுத்த எண்ணான 3-ஆல் பெருக்க வேண்டும்.
2 × 3 = 6.
கிடைத்த 6-ஐ 25-க்கு இடதுபுறம் சேர்க்க வேண்டும்.
ஆகவே, 25 × 25 = 625.
மாற்று வழிமுறை
ஒரு முறையைக் கற்றுக்கொண்டால் அதே முறையைத்தான் பின்பற்ற வேண்டும் என்கிற அர்த்தம் இல்லை. இது கணிதம், நிச்சயமான முடிவை நோக்கிய பயணம். உங்கள் பாதைகளை மாற்றி மாற்றிக்கூட அமைத்து முடிவுகளைச் சோதித்துப் புதிய பாதைகளைத் தெரிவு செய்யும் வாய்ப்புகள் உண்டு.
இதே 25 × 25 என்ற கணக்கை மற்றொரு முறையிலும் எளிதாகச் செய்யலாம்.
25 × 25 என்பதை 25 × (20 + 5) எனப் பிரித்துக்கொள்ளலாம்.
முதலில்,
25 × 20 = 500.
அடுத்து,
25 × 5 = 125.
இப்போது இரண்டையும் கூட்டினால்,
500 + 125 = 625.
இதுவும் சரியான விடையைத் தரும் எளிய வழிமுறையாகும்.
3. 65-இன் வர்க்கம் காண்போம்!
65 × 65 = ?
முதல் படி: 5 × 5 = 25.
எனவே, விடையின் வலதுபுறத்தில் 25-ஐ எழுதிக்கொள்ள வேண்டும்.
இரண்டாம் படி: பத்தாம் இட எண்ணான 6-ஐ, அதற்கு அடுத்த எண்ணான 7-ஆல் பெருக்க வேண்டும்.
6 × 7 = 42.
கிடைத்த 42-ஐ 25-க்கு இடதுபுறம் சேர்க்க வேண்டும்.
ஆகவே, 65 × 65 = 4225.
4. மூன்று இலக்க எண்களுக்கும் இதே முறை!
இந்தக் குறுக்குவழியை இரண்டு இலக்க எண்களுக்கு மட்டுமல்லாமல், 5-இல் முடியும் மூன்று இலக்க எண்களுக்கும் பயன்படுத்தலாம்.
எடுத்துக்காட்டாக, 115-இன் வர்க்கத்தைக் காண்போம்.
115 × 115 = ?
முதல் படி: 5 × 5 = 25.
எனவே, விடையின் வலதுபுறத்தில் 25-ஐ எழுதிக்கொள்ள வேண்டும்.
இரண்டாம் படி: இறுதியில் உள்ள 5-ஐ நீக்கிய பிறகு எஞ்சியிருக்கும் எண் 11. அதற்கு அடுத்த எண் 12.
11 × 12 = 132.
கிடைத்த 132-ஐ 25-க்கு இடதுபுறம் சேர்க்க வேண்டும்.
ஆகவே,
115 × 115 = 13225.
இதே முறையை 35, 45, 75, 85, 95, 105 போன்ற 5-இல் முடியும் மற்ற எண்களுக்கும் பயன்படுத்திப் பார்க்கலாம்.
உண்மையில், கணிதம் என்பது நம் மூளையை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளும் ஒரு வழி. செய்வதற்கு எதுவும் இல்லை என நீங்கள் எப்போது யோசித்தாலும், உடனே அமர்ந்து 1 முதல் 100 வரை உள்ள எண்களைப் பகுத்து, தொகுத்துப் பாருங்கள். உங்கள் மனதில் பல வழிகள் திறக்கும். அவற்றுள் ஒன்று இந்தக் குறுக்குவழியும்.
குறுக்கோ, நெடுக்கோ, மூளையைக் குறுகுறுப்பு அடையச் செய்வதே கணிதத்தின் வேலை.
சரி, போகிற போக்கில் உங்களுக்காக ஒரு சின்னக் கணிதப் புதிர்!
8 என்ற எண்ணை சரியாக எட்டு முறை பயன்படுத்தி, கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய கணிதச் செயல்களில் தேவையானவற்றைச் செய்து , விடையாக 1000 வரவழைக்க முடியுமா?
எப்படிச் செய்வீர்கள்?
சிறிது நேரம் யோசித்துப் பாருங்கள். விடையைக் கண்டுபிடித்தவர்கள் கருத்துப் பகுதியில் பகிர்ந்துகொள்ளலாம். விடை தெரியாதவர்கள் அடுத்த பகுதியில் வெளியாகவிருக்கும் விடைக்காகக் காத்திருக்கலாம்!
எண்ணுங்கள்! எண்ணங்கள் மேம்படும்.
தொடர்புக்கு: anbirkiniyaval@gmail.com
கருத்துகள் (5):
Post a Comment