This article originally appeared on thodugai.in.
தொடர்: விரட்டும் இருளும் விடியல் வேட்கையும்! (11) குறித்து வைத்துக்கொள்ளுங்கள் அந்த நாளை: S. அஷோக் பாலா
வெளியிடப்பட்ட தேதி:
வாசிக்கும் நேரம் கணக்கிடப்படுகிறது...
முந்தைய பகுதிகளைப் படிக்க:
இன்னும் சில விஷயங்களைப் பற்றி உங்களிடம் சொல்றேன். திருவிழாக்கள் எல்லாம் எப்பொழுதுமே சந்தோஷமானது. அது காட்சிகளோடு பிணைந்தது. திருவிழா நாளே அது கொண்டாட்டம்தான்.
2010 ஆம் ஆண்டு எங்க ஊர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அதுக்காக ஒரு பெரிய பேனர் அடிச்சோம். 20 அடி நீளம், எட்டடி அகலத்தோடு 20 பேரோட போட்டோ போட்டு, ஒரு பக்கம் மலேசியா முருகன், இன்னொரு பக்கம் அவருக்கு நிகரா பார்க்கப்படுகிற ஒருவரோட புகைப்படம், எங்க நற்பணி மன்றத்தோட பெயர்... அந்த காலகட்டத்துல அவ்வளவு பெரிய பேனரை யாரும் வச்சது இல்லை. நிறைய பேரு, "அவ்வளவு பெரிய பேனருக்கு ஆர்டர் கொடுக்காதீங்க, வைக்க முடியாது"ன்னு சொன்னாங்க. ஆனால், நான் வச்சு காட்டினேன். எனக்கு சந்தோஷம் அவ்வளவு பெரிய பேனர் நம்ம அடிச்சு வச்சுட்டோம்கிறது இல்லை; அந்த பேனர்ல என்னோட ஒரு கவிதை—'இதயம் பூ பூக்கட்டும், இதழ்கள் தேன் வார்க்கட்டும், அன்பை மட்டுமே உலகம் ஆளட்டும்' என்ற கவிதை இடம்பெற்று இருந்துச்சு. அந்த பேனரோட நடுவுல பெரிய எழுத்துல போட்டிருந்தோம். அதைப் பார்த்து பார்த்து சந்தோஷப்படுவேன். யாராவது அந்த கவிதை நல்லா இருக்குன்னு சொல்லிட்டா எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கும்.
அதே வருஷம் திருவாரூர் தேர் திருவிழா. ஒவ்வொரு வருஷமும் நான் போவேன். அந்த வருஷம் மழையில நனைஞ்சுகிட்டு திருவாரூர் பெரிய தேரை நான் இழுத்தேன்—பக்தியோட இல்லை, ஜாலியா!
2011 ஆம் வருஷம் ரொம்ப முக்கியமான வருஷமா என் வாழ்க்கையில் மாறியது. அரசியலைப் பொறுத்தளவு, கேப்டன் எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்தது எனக்கு பெரிய சந்தோஷத்தைக் கொடுத்தது. ஆனா, என்னோட வாழ்க்கையில எனக்கு பார்வை குறைய ஆரம்பிக்குதுங்கறதை நான் உணர்ந்தேன். ஆனாலும், யாரிடமும் அதை சொல்லலை.
ஒரு நாள் பைக்ல ஒரு பையனை பின்னாடி உட்கார வச்சுட்டு ஈ.சி.ஆர். ரோட்ல நான் ஓட்டிக்கிட்டு வந்தேன். எனக்கு பின்னாடி பஸ் வந்துகிட்டு இருந்தது. நான் பைக் ஓட்டும்போது ஸ்பீடா எல்லாம் ஓட்ட மாட்டேன்; என்னோட கண்ட்ரோல் எனக்குத் தெரியும். ஒரு நாய்க்குட்டி ரோட்டில் படுத்து இருந்தது எனக்குத் தெரியலை, ஏத்தி இறக்கிட்டேன். நல்லவேளை, அந்த நாய்க்குட்டி சாகாம கத்திக்கிட்டு ரோட்டுக்குள்ள ஓட, பின்னாடி வந்த பஸ் பிரேக் அடிச்சிடுச்சு. அந்த நாய்க்குட்டி சாகலைங்குறது மட்டும் தெரிஞ்சது; நான் பைக்கை நிறுத்தாம ஓட்டிக்கிட்டு வீட்டுக்கு வந்துட்டேன். பைக் பின்னாடி உட்கார்ந்திருந்த பையன் பயந்துட்டான். அப்பவே எனக்குத் தோணுச்சு, நாம இனிமே பைக் ஓட்டக் கூடாதுன்னு.
என்னோட பார்வை எந்த அளவுக்கு இருந்துச்சுன்னு எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியலை. நான்கு விரலையும் வச்சு கண்ணை மூடிக்கிட்டு, அந்த விரல்களோட சின்ன இடைவெளி வழியாகப் பார்த்தா எனக்கு காட்சிகள் நல்லா தெளிவா தெரிஞ்சது. சாதாரணமா பார்க்கும்போது காட்சிகளில் தெளிவு இல்லை.
திருவாரூரில் எனக்கு ஒரு பெஸ்ட் ஃப்ரெண்ட் இருக்கான். வெளிநாட்டுக்குப் போறேன்னு சொல்றதுக்காக என் வீட்டுக்கு வந்தான். அவனை பஸ் ஏத்தி விட பைக்ல உட்கார வைத்து நான் தான் கூட்டிட்டுப் போனேன். என் வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் போய் தான் பஸ் ஏறணும். அவனை பஸ் ஏத்திவிட்டு 'பாய்' சொல்லிட்டு ரொம்ப மெதுவா பைக்கை ஓட்டிக்கிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.
நான் கவலைப்படுறதுக்கெல்லாம் நேரம் இல்லாத அளவுக்கு என் தங்கம் என் கூடவே இருப்பான். நைட்ல மட்டும் தான் என் அக்கா வீட்டுக்குப் போயிடுவான். ஒரு நாள் நான் வாசல்ல உட்கார்ந்து இருந்தேன். எங்க அப்பா வந்தவர், "தம்பி, கண்ணைக் காட்டுடா"ன்னு சொன்னார். கண்ணைப் பார்த்துட்டு, "கருவிழி வெள்ளையா மாறிருக்குடா. பார்வை சரியா தெரியுதா தெரியலையா?"ன்னு கேட்டார். நான் அப்பதான் சொன்னேன், "முன்னாடி மாதிரி தெரியலை"ன்னு. "உடனே மதுரைக்குப் போய் பார்க்கணும்"னு சொல்லிட்டு, எங்க ஊர்ல நடராஜ் சித்தப்பான்னு ஒருத்தவங்க இருக்காங்க, அந்த சித்தப்பா தான் முதல் முதல்ல பத்து வயசுல என்னை மதுரைக்கு அழைச்சிட்டுப் போனது.
அவரோட மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்குத்தான் போனோம். உங்களுக்கு இன்னொரு விஷயத்தையும் சொல்றேன், எனக்கு பார்வை குறைஞ்சிடுச்சே தவிர முழுசா போகலை; தனியா நடந்து போயிட்டு வர அளவுக்கு எனக்குத் தெரிஞ்சது.
ஹாஸ்பிடல்ல எல்லா டெஸ்ட்டும் எடுத்துப் பார்த்தாங்க. அதுல ஒரு டாக்டர், "ஏய்யா உனக்கு அறிவு இருக்கா? தெரியுறதே ஒரு கண்ணுல கொஞ்சம் பார்வை, அதுவும் சரியா தெரியலைன்னு ரொம்ப அலட்சியமா சொல்ற. வருஷத்துக்கு ஒரு முறையாவது நீ செக்கப்புக்கு வந்திருக்கணும், அதுவும் வரலை" அப்படின்னு திட்டினார். கடைசியா, "நரம்பு பிரிஞ்சிருக்கு, ஆபரேஷன் பண்ணணும்"னு சொன்னாங்க.
நான் உண்மையிலேயே சந்தோஷப்பட்டேன். ஆபரேஷனுக்குப் பிறகு நம்மளுக்கு நிச்சயமா பழைய பார்வை, தெளிவான பார்வையா தெரியும்னு நம்புனேன். "பணம் ரெடி பண்ணிக்கிட்டு வர்றோம்"னு சொல்லிட்டு வீட்டுக்கு வந்துட்டோம். ஆபரேஷனுக்கான செலவுக்குக் கூட கடன் தான் வாங்கினோம்.
நான் ஆபரேஷனுக்காக ஹாஸ்பிடல் புறப்பட்ட அன்னைக்கு நைட், என் பசங்க எல்லாம் வந்து கை கொடுத்து, ஒரு போருக்கு என்னை வழியனுப்பி வைக்கிற மாதிரி அனுப்புனாங்க. என் அம்மா எல்லா சாமிகளையும் வேண்டி திருநீறு பூசி விட்டு அனுப்ப, எனக்குத் துணையா என் தம்பி (சித்தி பையன்) மாதவன் வந்தான்.
ஆபரேஷனுக்கு முன்னாடி என்கிட்ட சொன்னது, "நரம்பு வீக்கா இருக்கு; கேஸ் வச்சும் நரம்பை ஒட்டலாம், ஆயில் வச்சும் நரம்பை ஒட்டலாம். ஆனா அதை ஆபரேஷன் தியேட்டர்ல தான் டாக்டர் முடிவு பண்ணுவாரு"ன்னு சொன்னாங்க.
ஜூலை 27, 2011 அன்னைக்கு தான் என்னுடைய ஆபரேஷன். ஜூலை 27 ஆம் தேதியை ஞாபகம் வச்சுக்கோங்க.
"காலையிலேயே போய் சாப்பிட்டுட்டு வாங்க"ன்னு சொன்னாங்க. மதுரை வீதியில் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு என் தம்பியோட நடந்து போனேன். ரெண்டு பேரும் ஒரு ஹோட்டலில் போய் சாப்பிட்டு வந்தோம். என்னை ஆபரேஷன் தியேட்டருக்கு அழைச்சிட்டுப் போக ஒரு நர்ஸ் வந்தாங்க. நான் போட்டிருந்த கண்ணாடியைக் கழற்றி என் தம்பிகிட்ட கொடுத்துட்டு, அவங்க கையப் பிடிச்சுக்கிட்டு போனேன்.
இந்த இடத்தில் ஒரு இளையராஜா சாங் கேட்போமா? 'எங்கே செல்லும் இந்தப்பாதை... யாரோ யாரோ அறிவாரோ...' எனக்கு பயம் இல்லை.
ஆபரேஷன் தியேட்டர்ல கண்ணு ஓரத்துல, அந்த எலும்புல ஒரு ஊசி போட்டாங்க. ஐயையோ, உயிர் போற மாதிரி வலிச்சது! டாக்டர் ரொம்ப ஜாலியா, கூலா அந்த ஆபரேஷனை செஞ்சாரு. ரெண்டு நர்ஸ் கூட இருந்தாங்க. அதுல ஒரு நர்ஸ், "டாக்டர் இங்கதான்டி பேசுவாரு, வீட்டுக்குப் போனா பேசவே மாட்டாரு" அப்படின்னு பேசி சிரிச்சாங்க. நான் நினைச்சேன், 'அது எப்படி பேசுவாரு? டாக்டருக்குப் பொண்டாட்டி இருந்திருப்பாங்க, அதுதான்!' 'டாக்டர் சார், ஆபரேஷனை கரெக்ட்டா பண்ணுங்க, நீங்க அப்புறம் பேசிக்கலாம்' அப்படின்னு சொல்லணும்னு தோணுச்சு.
ஒருவழியா எனக்கு ஆபரேஷன் முடிஞ்சது. கேஸ் வச்சுதான் நரம்பை ஒட்டியிருப்பதா சொன்னாங்க. அடுத்த நாள் கண்ணுக்கு மருந்து போட கண்ணைத் திறக்கும்போது, எனக்கு இருளும் இல்லாத, வெளிச்சமும் இல்லாத ஒரு மாதிரி மஞ்சள் நிறம் போலதான் தெரிஞ்சுச்சு.
சில நாட்கள் மருத்துவமனையில் இருந்தோம். எனக்கு சிறு வெளிச்சம் கூட தெரியலை. "கண்ணுல ரத்தக் கசிவு இருக்கு, நரம்பும் ரொம்ப வீக்கா இருக்கு. அதற்கு மாத்திரை மருந்தும் தர்றோம், தொடர்ந்து போட்டுட்டு வாங்க, கொஞ்ச நாள்ல பார்வை தெரியும்"னு சொல்லி வீட்டுக்கு அனுப்புனாங்க. குப்புறத்தான் படுக்கணும், உட்கார்ந்து இருந்தாக்கூட தலைகுனிந்து தான் இருக்கணும்னு சொன்னாங்க.
என் ஊர்ல ஒரு பழக்கம், யாருக்கும் உடம்பு சரியில்லைன்னா, அவங்களுக்கு ஏதாவது ஆபரேஷன் பண்ணியிருந்தா வீட்டுக்கு எல்லோருமே வருவாங்க, வந்து விசாரிச்சுட்டுப் போவாங்க. அதுமட்டுமில்லாம வெளியூர்ல இருந்தெல்லாம் சொந்தங்களும் வந்து என்னைப் பார்த்துட்டுப் போவாங்க. நான் ஒரு காட்சிப் பொருள் மாதிரி இருப்பேன். நான் எல்லாரோடையும் ரொம்ப பாசமா பழகுறவன். உறவுகள் எல்லாருக்குமே என்னைப் பிடிக்கும், எனக்கும் என் உறவுகளைப் பிடிக்கும். வர்ற எல்லோரிடமும் என் அம்மா அஞ்சு நிமிஷம் அழுது புலம்பி பேசுவாங்க. என் அம்மாவோட ஃபேமஸான டயலாக், "அந்த ஆண்டவனுக்குக் கூட கண் இல்லையே!" அப்ப நான் நினைச்சுப்பேன், 'ஆண்டவனே இல்லையே!'
இப்படியே நாட்கள் நகர ஆரம்பிச்சது. சிறு வெளிச்சம் கூட எனக்குத் தெரியலை. எங்க வீட்ல பாத்ரூம் கூட தனியா கொல்லைப்பக்கம் தூரமா இருக்கும். என் அம்மா கையைப் பிடிச்சுக்கிட்டு போகும்போது 'எப்ப கண்ணு தெரியும்?'னு இருக்கும். பார்வை இல்லாம டாய்லெட் யூஸ் பறது எல்லாம் எனக்குக் கஷ்டமா இருந்துச்சு. நைட்ல திடீர்னு எந்திரிச்சு கண்ணைத் திறந்து பார்ப்பேன், பார்வை வந்திருச்சான்னு. காலையிலேயே சொட்டு மருந்து போடும்போது அம்மா கேட்பாங்க, "ஏதாவது தெரியுதா?"ன்னு.
15 நாள் முடிந்து செக்கப்புக்கு போனேன். "கண்ணுல இன்னும் ரத்தக் கசிவு நிக்கலை" அப்படின்னு சொல்லிட்டு திரும்பவும் மாத்திரை மருந்து கொடுத்து, ஒரு மாதம் கழித்து வரச் சொன்னாங்க.
ஒருத்தவங்களோட கையைப் பிடிச்சுக்கிட்டு நடப்பது, தன்னைச் சுற்றி எவ்வளவு சத்தம் கேட்டாலும் அது என்னன்னே தெரியாம பக்கத்துல இருக்கிறவங்ககிட்ட "என்ன நடக்குது?"ன்னு கேட்பது... இது எல்லாமே என் வாழ்க்கையில புதுசா இருந்துச்சு. அதைவிட முக்கியமா எனக்கு பயம் வரவும் ஆரம்பிச்சது.
என் ரூம்ல எனக்குன்னு தனி டிவி, DVD பிளேயர், ஸ்பீக்கர் எல்லாமே இருக்கும். நான் டிவி பார்க்கும்போது, டிவில கேபிள் சரியில்லாமல் சில நேரங்களில் புள்ளி அடிக்கும். டிவி பார்க்கவே கடுப்பா இருக்கும். அப்படிப்பட்ட நான், டிவியைப் போட்டுவிட்டு வெறும் சவுண்டை மட்டும் கேட்டுக்கிட்டு உட்கார்ந்திருப்பேன்.
என்கிட்ட ஒரு கேமரா பட்டன் மொபைல் இருந்தது. அதுல ரெக்கார்டு ஆப்ஷனும் உண்டு. எனக்கு ஏதாவது கவிதை தோணுச்சுன்னா நான் ரெக்கார்டு பண்ணி வச்சுப்பேன். என் தங்கக்குட்டிகிட்ட, "மாமா கையைப் பிடிச்சு அழைச்சுட்டு வா", "மாமா கையைப் பிடிச்சு இதைக் கொடு"—அப்படியெல்லாம் சொன்னா என் தங்கம் அதை செய்வான். அவனைத் தூக்கி வச்சுக்கிட்டு முத்தம் கொடுப்பேன். அவன் சிரிக்கும்போது, 'எப்படா பிள்ளையைப் பார்க்கிறது?'ன்னு இருக்கும்.
'தலைவலியும் வயிற்றுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்'னு சொல்லுவாங்க. அது உண்மை. முதல்முறையா முழு பார்வையில்லாமல் வாழ்றவங்களோட கஷ்டத்தை நான் உணர ஆரம்பிச்சேன்.
ஒவ்வொரு நாளும் விடியும்போது 'வெளிச்சமாவது தெரியுதா?'ன்னு பார்ப்பேன், ஒண்ணுமே தெரியாது. ஹாஸ்பிடல்ல சொன்ன மாதிரி ஒரு மாசம் முடிஞ்சிடுச்சு. நான் மீண்டும் செக்கப்புக்கு போனேன். மீண்டும் எல்லா செக்கப்பும் பண்ணி பார்த்துட்டு, "இனி பார்வை வராது" என்கிற மாதிரி சொன்னாங்க. முதல்முறையா வாழ்க்கையைப் பத்தின ஒரு பயம், மீள முடியாத பயம் வர ஆரம்பித்தது.
கடைசியா அந்த ஹாஸ்பிடல்ல இருக்கிற சீஃப் டாக்டர் செக் பண்ணினார். "திரும்ப ஒரு ஆபரேஷன் பண்ணிப் பார்ப்போம்"னு சொன்னாரு. நான் அடுத்த ஆபரேஷனுக்குத் தயாரானேன். திரும்பவும் வீட்டுக்கு வந்து அடுத்த ஆபரேஷனுக்காக பணம் ரெடி பண்ணினோம். இந்த முறை எல்லோருக்குமே ஒரு பெரிய பயம் வந்துருச்சு.
இந்த ஆபரேஷனுக்கு என் கூட தங்குறதுக்கு என் ஊர்ல இருந்து ராமதுரைனு ஒரு தம்பி வந்தான். எங்க ரெண்டு பேரையும் ஹாஸ்பிடல் கொண்டு வந்து விடுவதற்காக என் தம்பி மாதவன் வந்தான். திரும்பவும் எல்லா செக்கப்பும் பண்ணாங்க. செக்கப் பண்ண எந்த டாக்டருக்கும் நம்பிக்கை இல்லை.
எனக்கு ஆபரேஷன் பண்ணப் போற அந்த சீஃப் டாக்டர் கடைசியா பார்த்தார். நான் அவர்கிட்ட கேட்டேன், "பார்வை வந்துருமா?"ன்னு. அவர் என்ன சொன்னார் தெரியுமா? "30% சான்ஸ் இருக்கு பார்வை வர்றதுக்கு, பார்க்கலாம்" என்றார்.
ராமதுரை கிட்ட என் தம்பி சொல்லிக்கிட்டு இருந்தான், "ஆபரேஷன் பண்றது வேஸ்ட், பார்வை வராது"ன்னு. அவன் சொல்லிக்கிட்டு இருந்தது எனக்குக் கேட்டுடுச்சு, நான் கேட்டேங்கிறது அவனுக்குத் தெரியாது. என் வீட்டுக்கும் என் தம்பியே சொல்லிட்டான், "டாக்டர் இப்படி சொல்றாங்க"ன்னு.
எனக்கு என்ன பண்றதுன்னு புரியலை. நான் யாருகிட்டயும் ரொம்ப ஃபீல் பண்ணி பேசுறவன் கிடையாது. நான் எந்தப் பிரச்சனைனாலும் என் அண்ணிகிட்ட தான் சொல்லுவேன். அதனால என் அண்ணிக்கு போன் பண்ணினேன். என் அண்ணிகிட்ட, "30% தான் சான்ஸ் இருக்குன்னு சொல்றாங்க அண்ணி"ன்னு சொன்னபோது, "அப்புறம் ஏன் அந்த ஆபரேஷன் பண்ணிக்கிட்டு? கிளம்பி வந்துட வேண்டியதுதானே! கண்ணு தெரியலைன்னா என்ன, கண்ணு தெரியாதவங்கெல்லாம் வாழலையா? நீங்க தைரியமா இருங்க, மனசை விட்றாதீங்க"ன்னு சொன்னாங்க.
என் அண்ணி அப்படித்தான், எதையுமே நேரடியா சொல்லுவாங்க. என்னோட தப்பு, சரி எல்லாத்தையும் நேரடியா என்கிட்ட சொல்றவங்க. என் அண்ணியோட பெயரை நான் இன்னும் சொல்லலைதானே? சொல்றேன்... சித்ரா செந்தில்.
என் அண்ணிகிட்ட பேசின பிறகு எனக்கு ஒரு தைரியம் வந்துச்சு. நம்ம வாழ்க்கை சீக்கிரம் முடிஞ்சு போயிடாதுன்னு நினைச்சேன். ஆனாலும் நைட்டு முழுக்க நான் தூங்கலை. 'என் வாழ்க்கை என்ன ஆகும்? ஒருவேளை கண்ணு தெரியலைன்னா இந்த வாழ்க்கையை நம்ம எப்படி வாழ்றது?' நிறைய குழப்பம், நிறைய கேள்விகள் எனக்குள்ள கேட்டுக்கிட்டே இருந்துச்சு.
இருந்தாலும் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையோட ஆபரேஷன் தியேட்டருக்கு புறப்பட்டேன். இந்த முறை என்னை யார் கையைப் பிடிச்சு அழைச்சிட்டுப் போறதுன்னு கூட தெரியாம பின்னாடி போனேன்.
ஆபரேஷன் தியேட்டர்ல எனக்கு ரெண்டு ஊசி போட்டாங்க. அப்படி போட்டும் ஆபரேஷன் நடக்கும்போது எனக்கு வலி இருந்தது. அந்த தியேட்டர்ல ஒரு சின்ன சத்தம் கூட கேட்கலை. ஒரு கட்டத்துல "வலிக்குது"ன்னு சொல்லிட்டேன். திரும்பவும் ஒரு ஊசி போட்டாங்க. எனக்குள்ள ஒரு மிகப்பெரிய போராட்டமே நடந்துக்கிட்டு இருந்துச்சு.
வாழ்க்கையில முதல்முறையா ஆபரேஷன் தியேட்டர்ல படுத்துக்கிட்டு நிறைய யோசிச்சேன். 'இந்த ஆபரேஷனுக்குப் பிறகு பார்வை வந்தால், நான் ஒரு பார்வையில்லாத பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணனும்; அவருக்கு வாழ்க்கை முழுக்க பார்வையா இருக்கணும்'னு நினைச்சேன். 'அப்பக்கூட நீ கல்யாணத்தைப் பத்திதான் யோசிச்சியாடா?'ன்னு நீங்க கேட்கிறது புரியுது. இல்லை, நிறைய யோசித்தேன்.
எதைப்பத்தியெல்லாம் நான் திரும்ப நினைத்துக்கூட பார்க்கக் கூடாதுன்னு நினைச்சேனோ, அதைப்பற்றி எழுதிக்கொண்டு இருக்கேன். நீங்க படிக்கிறது இப்போ என் வாழ்க்கையை அல்ல, என் வாழ்க்கையின் முடிவை. ரொம்ப வலிக்குது. நானும் வலிக்காத மாதிரியே எவ்வளவு நேரம்தான் எழுதுறது?
ஆபரேஷனுக்குப் பிறகு என்ன நடந்துச்சு? என் கண்ணுல வந்த வெளிச்சம் எங்கே போச்சு? சொல்கிறேன் அடுத்த பகுதியில்.
தொடர்புக்கு: ashokbala1387@gmail.com
பேச: 9626261773
கருத்துகள் (0):
Post a Comment