ஆபரேஷன்
நடக்கும்போது மனசுக்குள்ள எண்ணற்ற குரல்கள் கேட்டுக்கிட்டே இருந்துச்சு. நாம
வாழப்போறோமா சாகப்போறோமான்னு எனக்குள்ள போராட்டமே நடந்துச்சு. அப்பக்கூட கடவுள்
இருக்குமோ, அதை வேண்டுவோமா அப்படிங்கிற எந்தச் சிந்தனையும்
எனக்கு இல்லை.
ஆபரேஷன் நடந்து
முடிஞ்சிடுச்சு. "டாக்டர், நரம்பு வீக்காதான் இருக்கு,
பார்க்கலாம்"னு சொல்லிட்டுப் போனார். என்னை வீல்சேர்ல உட்கார
வச்சுத் தள்ளிக்கிட்டு வந்து பெட்ல படுக்க வச்சாங்க. அடுத்த நாள் கண்ணுக்கு
மருந்து போடக் கட்டைப் பிரிச்சுக் கண்ணைத் திறக்கும்போது, வெள்ளை
நிறமா மட்டுமே தெரிஞ்சுச்சு.
மருத்துவமனையில
இருந்து வீட்டுக்கு வந்தேன். மீண்டும் தினந்தோறும் சொட்டு மருந்து, மாத்திரை, குப்புறத்தான் படுக்கணும்னு இப்படியே
பெரிய பயத்தோட நாட்கள் நகர்ந்துச்சு. இந்த முறையும் என் ஊரே என்னைப் பார்க்க
வந்துச்சு; உறவுகளும் வந்துச்சு. அம்மாவின் புலம்பலும்
தொடர்ந்துச்சு.
என் கண்ணுல சில
வாரங்களுக்குப் பிறகு வெளிச்சம் தெரிய ஆரம்பிச்சது. உண்மையிலேயே எனக்கு மரணத்துல
இருந்து மீண்ட மாதிரி இருந்துச்சு. எல்லார்கிட்டயும் சொன்னேன், "எனக்கு வெளிச்சம் தெரிய ஆரம்பிச்சுடுச்சு"னு. எனக்கு ஒரு பழக்கம்
உண்டு; என்னோட சின்ன சின்ன சந்தோஷங்களைக் கூட
எல்லார்கிட்டயும் சொல்லுவேன். ஆனா என்னுடைய கஷ்டத்தை யார்கிட்டயும் சொல்லக்
கூடாதுன்னு நினைப்பேன்.
கொஞ்சம் கொஞ்சமாக்
காட்சிகள் தெரிவதற்கான அறிகுறிகள் வந்துச்சு. கிட்டத்தட்ட நான் இரண்டரை
மாதங்களுக்குப் பிறகு வெளிச்சத்தைப் பார்த்தேன். ஹாஸ்பிடலுக்குச் செக்கப்புக்குப்
போகும்போது திரும்பவும் மருந்து, மாத்திரை எல்லாம்
கொடுத்தாங்க.
நான் தூங்கி காலையில
கண் விழிக்கும் போது எனக்கு எதிரே என் ஜன்னல் தெரியும்; அது
வழியா அந்த வெளிச்சம், ஜன்னல் கம்பிகள் எல்லாம் தெரியும். அந்தக்
காட்சிகளை நான் மீண்டும் பார்க்க ஆரம்பிச்சேன். ஜன்னல் கம்பிகள் எனக்குத் தெளிவா
தெரியல, ஆனா கொஞ்சம் கொஞ்சமாக் காட்சிகள் தெளிவு பெற
ஆரம்பிக்குதுன்னு புரிஞ்சது.
நான் ஒவ்வொரு நாளும்
என் தங்கத்தைப் பார்ப்பேன், அவன் எனக்கு நல்லா
தெரிகிறானான்னு. அடுத்தது நான் எழுதிக்கிட்டு இருந்த நோட்டை எடுத்துப் பார்ப்பேன்.
நான் எப்ப திரும்ப எழுதப் போறேங்கிறதுக்காகக் காத்துக்கிட்டு இருந்தேன். அது
மத்தவங்களைப் பொறுத்த அளவுக்கு ஒரு நோட்டு, வெறும் காகிதம்.
ஆனா அது எனக்கு ஒரு உயிர். நான் எழுதுன ஒவ்வொரு கவிதையிலும் உயிர் இருந்துச்சு,
எனது கனவு இருந்துச்சு. சரியோ தப்போ, நடக்குமோ
நடக்காதோ... அதெல்லாம் தெரியாது, ஆனா அதுல ஒரு காதல்
இருந்தது.
எப்போ எனக்கு
வெளிச்சம் தெரிய ஆரம்பிச்சதோ, அப்பவே முடிவு
பண்ணிட்டேன்—ஆபரேஷன் தியேட்டர்ல நான் நினைச்ச மாதிரி எனக்குக் கண்ணு தெரிஞ்சா,
நான் ஒரு கண்ணு தெரியாத பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணணும்னு. இப்பவும்
நான் தேவதையைத்தான் தேடினேன்; ஆனா என்னைப் பார்த்துக்கிற
தேவதையை இல்லை, நான் பார்த்துக்கப்போற தேவதையை.
இந்த இடத்துல ஒரு
இளையராஜா சாங் கேட்போமா? "என்ன என்ன கனவு கண்டாயோ
சாமி... வாழ்க்கை ஒரு கனவு தானையா..." இப்ப எதுக்குடா இந்த பாட்டுன்னு
கேட்குறீங்களா?
ஒரு நாள் காலையில
கண்விழிக்கும் போது எனக்குக் கண்ணு வலிக்க ஆரம்பிச்சது. கண்ணைத் திறந்தாலே கண்ணீர்
வந்துகிட்டே இருந்தது. வெளிச்சம் மங்கலா தெரிஞ்சது. திருவாரூரில் இருக்கிற டாக்டர்
பாபாவைப் பார்த்தேன். அவர் செக் பண்ணிட்டுக் கண்ணு வலிக்குச் சொட்டு மருந்து
கொடுத்தார். அவர் ஃபீஸ் வேண்டான்னு சொல்லிட்டாரு. எனக்குப் புரிய ஆரம்பிச்சது—என்
வாழ்க்கை முடிந்துவிட்டது என்று.
என் தம்பியோட பைக்ல
டாக்டரைப் பார்த்துட்டுப் போகும்போது, நான் அழுதுகிட்டேதான்
போனேன்; ஆனா அது என் தம்பிக்குத் தெரியாது. இதப் பத்தி நான்
யாருகிட்டயும் சொல்லல. மீண்டும் மருத்துவமனைக்கு வருவதற்கான ஒரு தேதி
கொடுக்கப்பட்டிருந்தது. அந்தத் தேதிக்காக நான் காத்திருந்தேன்.
இதற்கிடையே
புத்தாண்டும் வந்தது. ஒவ்வொரு புத்தாண்டையும் திருவிழா மாதிரி கொண்டாட
ஆரம்பிச்சோம், கொண்டாடிக்கிட்டும் இருந்தோம். "நீங்க
பண்ணுங்கடா, இந்த முறை என்னால வர முடியாது"ன்னு நான்
எவ்வளவோ சொல்லியும் என்னோட பசங்க கேட்கல. "நீ வந்தாதான் எல்லாம்
நடக்கும்"னு சொன்னாங்க. "என்னோட கஷ்டம் என்னோட இருக்கட்டும்"னு
முடிவு பண்ணினேன்.
என் பசங்களோட போய்
அதற்கான வேலைகளையும் பார்த்தேன். பெரிய போஸ்டர் அடிச்சோம். அதுக்கு டிசைன்
பார்க்கவும் நான் போயிருந்தேன். அங்க என் கூட இருந்த பசங்க, "அண்ணே, இப்படி வருது, இந்த
கலரு, இந்த மாதிரி டிசைன்"னு ஒவ்வொண்ணைப் பத்தியும்
சொன்னாங்க. அந்தக் கடையில இருந்தவங்க எல்லாம் ஒரு மாதிரியா பார்க்கும்போது கூட,
"இவர்தான் எங்க தலைவர், எங்க அண்ணன்;
இவர் இல்லாம எதுவும் நடக்காது. இப்ப கொஞ்சம் சிகிச்சையில
இருக்காரு"ன்னு சொல்லிச் சிரிச்சாங்க. என் மனசு முழுக்க வலி, என் மரணத்தோட கதறல் கேட்க ஆரம்பிச்சபோதும், அந்த
புத்தாண்டைச் சந்தோஷமாக் கொண்டாடி முடிச்சோம்.
ஜனவரி 16,
2012 அன்னைக்குதான் குமாரை அழைச்சுக்கிட்டு நான் ஹாஸ்பிடல் போனேன்.
எனக்கு மட்டும்தான் தெரியும், எனக்குத் தெரிஞ்ச வெளிச்சமும்
குறைஞ்சிடுச்சுன்னு. "டாக்டர் இனிமே எதுவும் பண்ண முடியாதுன்னு
சொல்லப்போறாரு"ன்னு எனக்குத் தோண ஆரம்பிச்சது. ஆனாலும் ஒரு ஆசை...
"திரும்பவும் ஆபரேஷன் பண்ணலாம்" அப்படின்னு டாக்டர் சொல்லுவாங்க,
நம்மளை அப்படியெல்லாம் அம்போன்னு விட்டுட மாட்டாங்க அப்படிங்கிற ஒரு
சின்ன நம்பிக்கை இருந்தது.
அன்னைக்கு கன்னிப்
பொங்கல், அதனால அதிக டாக்டர்கள் அங்கு இல்லை. தமிழ் தெரியாத
ஒரு தெலுங்கு டாக்டர் என்னைச் செக் பண்ணிட்டு, "நரம்பு
கட் ஆயிடுச்சு, இனி ஒன்னும் பண்ண முடியாது"ன்னு தமிழைக்
கொலை பண்ணி என்னையும் கொன்னுட்டேன்னு சொன்னாரு. ஜூலை 27, 2011 அன்னைக்கு என்னைக் கொன்னதுக்கு, ஜனவரி 16,
2012 அன்னைக்குதான் டெத் சர்டிபிகேட் கொடுத்தாங்க.
நானும் மனுஷன்தானே?
அந்த டாக்டர் சட்டையைப் பிடிச்சு, "ஏண்டா
இப்படி பண்ணுனீங்க? நான் கண்ணு தெரிஞ்சவனாதானடா வந்தேன்?
அன்னைக்கே இப்படி ஒரு ரிஸ்க் இருக்குன்னு சொல்லியிருந்தா நான்
ஆபரேஷன் வேண்டான்னு சொல்லியிருப்பேனே! என் பார்வை தானா போற வரைக்கும் நான் இந்த
உலகத்தைப் பார்த்திருப்பேனே! ஏண்டா சொல்லல?" அப்படின்னு
கேட்கணும்னு நினைச்சேன். ஆனா கேட்கல.
"ஐயோ என்
வாழ்க்கை முடிஞ்சு போச்சே"ன்னு கத்தி கதறி அழணும்னு நினைச்சேன், அதையும் செய்யல. வெளியே வெயிட் பண்ணச் சொன்னாங்க. என்னால என் கண்ணீரைத்
தடுக்க முடியல, ஆனா நான் எதுவுமே பேசல; அழுதுகிட்டே இருந்தேன். என் பக்கத்துல இருந்த குமாருக்கு எதுவுமே புரியல,
அதிர்ச்சி ஆயிட்டான். அவனால "அழாதே"ன்னு சொல்லவும் முடியல,
சொல்லாம இருக்கவும் முடியல. ஆனா நான் ஒரு வார்த்தைகூட பேசல.
எந்த ஹாஸ்பிடல்
தெரியாத கண்ணைத் தெரியவச்சதோ, அதே ஹாஸ்பிடல் தெரிஞ்ச கண்ணைத்
தெரியாம ஆக்கிடுச்சு. முதல் தடவை ஆபரேஷன் பண்ணும்போது ஆயில் வச்சு ஒட்டியிருந்தா
பார்வை அப்பவே வந்திருக்கும். ஆனா நரம்பு வீக்கா இருக்குன்னு தெரிஞ்சும் அதை ஏன்
அந்த டாக்டர் பண்ணலன்னு தெரியல. இப்படி எத்தனையோ கேள்வியோட அந்த ஹாஸ்பிடல்ல
இருந்து வெளியே குமாரோடு வந்தேன்.
காலையிலேயே
சாப்பிடாமதான் ஹாஸ்பிடலுக்குள்ள போனோம். மதியம் ஆயிடுச்சு, என்னால
அவன் சாப்பிடாம இருக்கக் கூடாதுன்னு நினைச்சேன்; நான்
சாப்பிடாம அவன் சாப்பிட மாட்டான்னு தெரியும். அதனால ரெண்டு பேரும் போய்
சாப்பிட்டுட்டு ஊருக்கு பஸ் ஏறினோம். ஜன்னல் ஓரத்துல நான் உட்கார்ந்தேன். ஆறு மணி
நேரப் பயணம்.
அந்தப் பயணம் எப்படி
இருந்தது தெரியுமா? நெருங்கிய உறவு இறந்துபோக, அந்த உயிரற்ற உடலை ஆம்புலன்ஸ்ல ஏத்திக்கிட்டு, அந்தப்
பிணத்தோட நீங்க பயணிச்சிருக்கீங்களா? நானும் பயணித்ததில்லை.
ஆனா அன்னைக்கு அந்த ஆறு மணி நேரப் பயணத்துல இறந்துபோன என்னைச் சுமந்துகிட்டு நான்
பயணித்தேன்.
"என்னடா சும்மா
சும்மா இறந்துட்டேன், செத்துட்டேன்னு சொல்ற? நீ நல்லாதானே இருக்க"ன்னுதானே கேட்குறீங்களா? அந்தப்
பயணத்துல என் மனசு எழுதின ஒரு கவிதையை உங்களுக்குச் சொல்றேன்:
என்னோட வேதனையை
யாரிடம் சொல்லி அழ?
கண்ணுல நீருகூட ரத்தமா
கசியுதே!
எனக்குள்ள இதயம்
அழுகும் சத்தம் மட்டும் கேட்குதே!
உடலை விட்டு உசுரு
போகிறேன்னு சொல்லுதே!
பாவி நான் சேர்த்து
வச்ச பல கோடி கனவெல்லாம்,
தன்னால தீக்குளிச்சு
என் கண்ணால எரியுதே!
தீக்குளிச்சு
சாகையில தேகம் எல்லாம் வேகையில
உதடு மட்டும்
சிரிக்குதே!
புத்தகமா ஆகும்னு
புதுக்கவிதை எழுதி வச்சேன்,
புதையலா
இருக்கட்டும்னு புதைகுழியில போட்டுவிட்டேன்.
வெளிச்சமெல்லாம்
இருட்டாச்சு, இருட்டு மட்டுமே நிலையாச்சு!
நிற்கதியா
நிக்கும்போது மூச்சுக்கூட பாரமாச்சு!
மூணாம் பிறை
தேஞ்சிடுச்சு!
பாதி உசுரைச் சுமந்த
கண்ணு,
பாதியில
இறந்திடுச்சு!
எதற்காக பிறந்தேனோ,
எதைத் தேடி வளர்ந்தேனோ,
எதுவுமே தெரியாம
நிர்வாணமானேனோ!
நினைவெல்லாம்
நிழலாகி, நிழலெல்லாம் முள்ளாகி,
நித்தம் நித்தம்
செத்துப் போக என்னை வந்து குத்துதே!
மூங்கில் வீடு கட்டி
நான் தூங்கப் போகவா?
முழிச்சுப்
பார்க்கையில சாம்பலா பறக்கவா?
முன்ஜென்மக் கதை போல
என் வாழ்க்கை ஆனது!
என் கடந்த கால
வாழ்க்கையெல்லாம் முன்ஜென்மம் ஆனது!
ஒருத்தன்
செத்ததுக்குப் பிறகுதான், அவன் அப்படி வாழ்ந்தான் இப்படி
வாழ்ந்தான்னு அவனோட நினைவுகளைப் பத்திச் சொல்லுவாங்க. ஆனா நான் வாழ்ந்த நினைவுகளை
நானே நினைச்சுப் பார்த்துக்கிட்டு பயணித்தேன். இனிமே நான் நினைச்சாலும் கண்
தெளிந்த உலகத்துக்குள்ள வாழ முடியாது. அப்படின்னா நான் செத்துட்டேன்னுதானே
அர்த்தம்?
நான் சில மாதங்களா
பார்வையில்லாமல் வாழ்ந்தாலும், எனக்குப் பார்வை
வந்துடும்ங்கிற நம்பிக்கையில்தான் வாழ்ந்தேன். ஆனா இனி பார்வை இல்லாம நான் எப்படி
வாழ்றது அப்படிங்கிற பயத்தை விட, இனிமே எனக்குப் பார்வை
வராதுங்கிறதை நான் எப்படி என் வீட்ல போய் சொல்வேன், எப்படி
நான் இனி எல்லோரையும் பார்ப்பேன்றதுதான் பயத்தைக் கொடுத்துச்சு.
எல்லோரும் என்னைப்
பார்த்துப் பரிதாபப்படுவாங்களே, நான் சண்டை போட்டவங்கெல்லாம்
என்னைப் பார்த்துச் சிரிப்பாங்களே, கம்பீரமா நடந்த
ஊருக்குள்ள நான் இனி எப்படி இன்னொருத்தன் கையைப் பிடிச்சுக்கிட்டு நடக்கிறதுன்னு
எத்தனையோ கேள்விகள் எனக்குள்ள. மன உளைச்சல், மன அழுத்தம்,
மனச்சிதைவு, மனச்சோர்வு, மனப்பிறழ்ச்சி, மனநோய்... இப்படி உளவியல்
மருத்துவர்கள் மனரீதியான பல பிரச்சினைகளைச் சொல்லுவாங்க, அது
அத்தனையும் எனக்கு ஒரே நேரத்துல நடந்துகிட்டு இருந்துச்சு.
எனக்குக் கடவுள்
நம்பிக்கை இருந்திருந்தால் கூட, "கடவுளே"ன்னு
சொல்லி அழ ஒரு வாய்ப்பு இருந்திருக்கும்; எனக்கு அதுகூட
இல்லை.
நான் எந்த மாதிரி
நிலையில இருந்தேன் தெரியுமா? நான் ஒரு காட்சியைச் சொல்றேன்.
தீபாவளி டயத்துல ஒரு ஆட்டை அசைய விடாம பிடிச்சுக்கிட்டு, அந்த
ஆடோட கழுத்தைக் கத்தியை வச்சு ஒருத்தர் அறுப்பாரு. இன்னொருத்தர் அந்த ரத்தத்தை ஒரு
பாத்திரத்துல பிடிப்பாரு. அந்த ரத்தத்தை வாங்க சிலர் காத்திருப்பாங்க. அதேபோல
கோவில்ல ஒரு ஆட்டுக்கிடாவை நிக்க வச்சு, அது தலையில மஞ்சள்
தண்ணி ஊத்தி, கொஞ்ச நேரம் கழிச்சு அது உடலைச் சிலுப்பும்போது,
ஆள் உயர அருவாளை எடுத்து ஒரே வெட்டுல அது தலையைத் துண்டாக்குவாங்க.
தலை இல்லாத அந்த உடல் மட்டும் துடிக்கும்.
இந்த இரண்டு
காட்சிகளையுமே நான் பார்த்திருக்கேன். சம்பந்தமே இல்லாம இதை ஏண்டா இப்ப சொல்றேன்னு
கேட்குறீங்களா? சொல்றேன். என்னோட கனவு, ஆசை, காதல், கற்பனை, வாழ்க்கை, எதிர்காலம், என்
கம்பீரம், கர்வம், துணிச்சல், வீரம், திமிர், ஆணவம், அகந்தை... இது எல்லாமே ஒரே வெட்டுல துண்டாக்கப்பட்ட ஆட்டோட தலை மாதிரி
ஆச்சு. இன்னொரு பக்கம் கழுத்து அறுபடுற ஆடு மாதிரி, நான் கண்
தெரிஞ்சு வாழ்ந்த வாழ்க்கை எல்லாம் சேர்ந்து என்னை அறுக்கிற மாதிரி இருந்தது.
ஒவ்வொரு நாளும்
சித்திரவதை அனுபவிக்கிற மாதிரியான ஒரு வாழ்க்கையை நம்ம வாழவே கூடாது, செத்துருவோம்னு என் மனசு சொன்னது. ஒரு மூணு விஷயத்தை நினைக்கும்போதுதான்,
நம்ம வாழவே கூடாது, செத்துடணும்னு எனக்கு
மீண்டும் மீண்டும் தோணுச்சு.
முதல் விஷயம்,
என்னோட தேவதையைப் பார்க்கணும்னு நினைச்சேன். அப்படி ஒரு தேவதையே என்
முன்னாடி வந்து இனி நின்னாலும் என்னால பார்க்க முடியாது.
இரண்டாவது விஷயம்,
என்னோட தங்கம். அவனுக்கு இரண்டரை வயசு. அவன் கொஞ்சம் கொஞ்சமா
வளர்றதை நான் வாழ்க்கை முழுக்கப் பார்க்கணும்னு நினைச்சேன். முதல் ஆபரேஷன் செய்த
நாள்ல இருந்து நான் அவனைத்தான் பார்க்கணும்னு நினைச்சேன். அவனை நான்தான் என்
பக்கத்துல படுக்க வச்சுத் தூங்க வைப்பேன். என் தங்கம் தூங்கிக்கிட்டு
இருக்கும்போது அவன்கிட்ட சொல்லுவேன், "மாமாவுக்கு
சீக்கிரமா கண்ணு தெரிஞ்சிடும், உன்னை மாமா பைக்ல வச்சு
அழைச்சுட்டுப் போவேன். நீ ஸ்கூலுக்குப் போகும்போதெல்லாம் உன்னை மாமாதான் ரெடி
பண்ணி வேன்ல ஏத்திவிட்டு உனக்கு பாய் சொல்லுவேன். மாமா சீக்கிரம் சம்பாதிப்பேன்,
நீ கேட்குறதெல்லாம் வாங்கித் தருவேன்"னு இப்படி நிறைய நான்
பேசுவேன். சில நேரங்கள்ல அவனைப் பார்க்க முடியாம போயிட்டா என்ன பண்றதுன்னு
அழுதுருக்கேன். இனிமே என் தங்கத்தை என்னால பார்க்கவே முடியாது.
மூணாவது விஷயம்,
நான் சாகுற நிமிஷத்துல கூட எழுதிட்டுச் சாகணும்னு நினைச்சவன். 13 வயசுல எழுத ஆரம்பிச்சவன். என்னை எல்லோரும் படிக்காதவன், முட்டாளா பார்த்தபோதும், என் கூட என் எழுத்து
இருக்குன்னு நினைச்சவன். ஆனா என்னால இனிமே எழுதவே முடியாது. இந்த நிஜத்தை என்னால
ஏத்துக்கவே முடியல.
சரி செத்துடலாம்,
எப்படி சாகலாம்னு யோசிச்சேன். சாகும்போது வலிக்கக் கூடாது. தூக்கு
போட எனக்குத் தெரியாது, தூக்கு போட்டாலும் வலிக்கும்.
கரண்ட்ல கையை வச்சு சாகலாம், ஆனா அதுவும் வலிக்கும். விஷம்
குடிச்சா கசக்கும்... இப்படிலாம் யோசிச்சேன். இதெல்லாம் மதுரையில இருந்து நான் என்
வீட்டுக்கு வர ஆறு மணி நேரத்துக்குள்ள எனக்குள்ள நடந்தது.
நான் ரொம்ப
சோகத்தைப் பிழியுறேன்ல? எத்தனை வருஷமா எனக்குள்ளேயே தேக்கி
வச்சிருந்தது... இப்பயாவது வெளியே வருது, கொஞ்சம்
பொறுத்துக்கோங்க. இது என்னோட வலி மட்டும் இல்ல, இடையில
பார்வை இழந்த ஒவ்வொருத்தங்களோட வலி.
சரி, "நீ அடுத்து என்ன நடந்தது, அதைச் சொல்லு"ன்னு
நீங்க கேட்குறது கேட்குது. சரி சரி, டென்ஷன் ஆகாதீங்க.
கடைசியா நான் என்ன முடிவு செய்தேன்? நான் தற்கொலைக்குத்
தேர்ந்தெடுத்த வழி என்ன? அதை முயற்சி செய்தேனா, இல்லையா? சொல்கிறேன் அடுத்த பகுதியில்!
இனிதான் விரட்டும் இருளிலிருந்து
மீளத் துடிக்கும் விடியல் வேட்கையின் ஆரம்பம்.
தொடர்புக்கு: ashokbala1387@gmail.com
பேச: 9626261773

கருத்துகள் (1):
Post a Comment