அக்டோபர் 15 உலக வெண்கோல் தினம். இன்று, தமிழ்நாடு பார்வையற்றோர் இயக்கத்தினர் திருப்பத்தூர் மாவட்ட தலைநகரில் வெண்கோல் விழிப்புணர்வு பேரணி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர், திருப்பத்தூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் என முக்கிய உயர் அலுவலர்கள் பேரணியில் பங்கேற்றுச் சிறப்பிக்கிறார்கள்.
பொதுவாக, பார்வையற்றோரின் முக்கிய தினங்களான ஜனவரி 4 லூயி பிறந்தநாள், அக்டோபர் 15 உலக வெண்கோல் நாள், ஜூன் 27 ஹெலன்கெல்லர் பிறந்தநாள் போன்றவை கொண்டாட்டங்களாக முன்னெடுக்கப்படுகையில், அவை கொண்டாட்டங்களாக அல்லாமல், விழாவை முன்னெடுப்பவர்களின் புகழ்பாடும் மேடைகளாக, அவர்களின் அதுநாள்வரை சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களாகச் சுருங்கிவிடுவதுதான் எதார்த்தம்.
காரணம், இவ்வகை முக்கிய தினங்களை விழாக்களாக முன்னெடுப்பவர்கள் பெரும்பாலும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள். அந்த நிறுவனங்களின் பெரும்பாலான தொடர்ச் செயல்பாடுகளில், நன்கொடையாளர் என்றோ, அறங்காவலர் என்ற பெயரிலோ பொருளியல் சார்ந்து பார்வையுள்ளவர்களின் பங்கேற்பு கூடுதலாக இருக்கும். எனவே, அவர்களின் விழைவுகள் நிறுவனத்தின் அத்தனை செயல்களிலும் பாதிப்பைச் செலுத்தும்.
அந்த நிறுவனங்களின் ஆளுகையான பொறுப்பில் ஒரு பார்வையற்றவர் இருப்பார் எனில், ஓரளவுக்கேனும் நிகழ்வு கொண்டாட்டமாக அமைய வாய்ப்பிருக்கிறது. மற்றபடி, இதுபோன்ற மேடைகளில் பார்வையற்றவர்கள் மனம் திறந்து ஒருவருக்கொருவர் உரையாடிக்கொள்ளவோ, சக பார்வையுள்ளவர்களுடன் தங்களின் இயல்பான விருப்பங்கள் குறித்து அலவலாவவோ இயல்வதில்லை.
அத்தகைய பெருந்தடைகளை இது போன்ற முன்னெடுப்புகள் தகர்க்கும். காரணம், இது முழுக்க முழுக்கப் பார்வையற்றவர்களால் ஒருங்கிணைக்கப்படும் நிகழ்வு. அதுமட்டுமல்ல, இது வெறும் உள்ளரங்குக் கூட்டம் இல்லை. வெண்கோல் குறித்த விழிப்புணர்வை பொதுச் சமூகத்திடம் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தைச் சுமந்து, அவர்களை நோக்கிச் செல்லும் திறந்தவெளிப் பேரணி.
ஆனால், முரண் என்னவெனில், இதுபோன்ற நிகழ்வுகளுக்கு பிரபல ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து, முதன்மைச் செய்தியாக ஆக்குவதில்லை. அப்படியே ஒரு செய்தியாக எங்கோ ஒரு மூலையில் வெளிவந்தாலும்கூட, அதனைப் பார்வையற்றோர் அல்லது பார்வை மாற்றுத்திறனாளிகள் பேரணி எனக் குறிப்பிடாமல், மாற்றுத்திறனாளிகள் பேரணி எனப் பொதுவாகச் சுட்டி விஷயத்தை முடித்துவிடுவார்கள்.
பெரிய எழுத்தில் ‘மாற்றுத்திறனாளிகள் பேரணி’ என்ற செய்தியைப் படிக்கும் பொதுமக்களும் அதை அப்படியே கடந்துவிடும் வாய்ப்புகளே அதிகம். ஆனாலும், இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் முன்னெடுக்கப்படுவது காலத்தின் கட்டாயம். நம்முடைய அரசியலை, அன்றாடத்தை முதலில் பேச வேண்டியவர்கள் நாம் என்கிற தெளிவு ஒவ்வொரு பார்வையற்றவரிடமும் ஏற்படுத்தப்பட வேண்டும். அத்தகையதொரு முயற்சியை முன்னெடுத்திருக்கும் தமிழ்நாடு பார்வையற்றோர் இயக்கத்தினருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
நம்மைப்பற்றி நாம் முதலில் பேச வேண்டும் என்பதுஒருகட்டம் என்றால், நம்மை நாமே படைக்க வேண்டும், புனைந்துகொள்ள வேண்டும், அதன்வழியே இந்த உலகம் குறித்த பார்வையையும் நாம் வெளிப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தோடு,அக்டோபர் 15 உலக வெண்கோல் நாளான இன்று, பகிர்வு என்கிற மின்னிதழ் இருமாத இதழாக வெளிவரவிருக்கிறது.
தமிழகப் பார்வையற்றோரிடையே கணினி பரவலாகச் சென்று சேர்ந்தது 2010 ஆம் ஆண்டு காலகட்டங்களில்தான். காரணம், அதுவரை ஆங்கிலத்தை மட்டுமே முதன்மையாகக் கொண்டு கணினித் திரைகளில் ஊடாடிய ஜாஸ் (JAWS) திரைவாசிப்பானுக்கு மாற்றாக, பிராந்திய மொழிகளில் பேசும் NVDA திரைவாசிப்பான் அறிமுகமானது. இதனால், அதுவரை பாடப்புத்தகங்களோடு மட்டுமே புழங்கிய பார்வையற்றவர்கள் பொது வாசிப்புக்குள் அடியெடுத்து வைத்தார்கள். வாசிப்பின் அடுத்த கட்டம், அதைப் பிறருக்குப் பகிர்வதுதானே!
பிறகென்ன, மின்னிதழ் போன்ற தொடக்க முயற்சியாய், வள்ளுவன் பார்வை, இணையத் தென்றல் மின்னஞ்சல் குழுமங்கள் உருவாகின.
2014 திறன்பேசிகளின் காலம். சாம்சங் திறன்பேசிகள் மிகப் பிரபலமாக விற்றுத் தீர்ந்துகொண்டிருந்தபோது, வாட்ஸ் ஆப் மெல்ல அறிமுகமானது. புலனக் குழுக்கள் வாயிலாகத் தங்கள் குரல்வழி உரையாடல்களைத் தொடர்ந்துகொண்டவர்களுக்கு இடையில், அறவழிச்சாலை என்ற வாட்ஸ் ஆப் குழுமத்தில் தினமும் தலையங்கம் எழுதி அந்தக் குழுவை ஒரு புதிய பரிமாணத்துக்கு இட்டுச் சென்றார் கா. செல்வம்.
அதைத் தொடர்ந்து பல சிறு சிறு கட்டுரைகள், நான் அன்றாடம் எழுதிய ராகரதம் தொடர் எனப் பார்வையற்றவர்களிடையே அறவழிச்சாலைக்கான வரவேற்பும், புதிய புதிய எழுத்தாளர்களின் பரஸ்பர அறிமுகமும் ஒருங்கே நிகழ்ந்தன. அவர்களில் சிலரை ஒரு புள்ளியில் இணைத்து, பார்வையற்றவர்களால் பார்வையற்றவர்களுக்காக நடத்தப்படும் தமிழின் முதல் மின்னிதழ் விரல்மொழியரைத் தொடங்கினார் ஆசிரியர் ரா. பாலகணேசன்.
அதனையொட்டி, மாற்றுத்திறனாளிகளின் அன்றாடச் செய்திகளுக்கு முக்கியத்துவம் தந்து வெளியான matruthiran.com, சில காலம் மாதாந்திர மின்னிதழாகவும் பரிணமித்த சவால்முரசு, தொடுகை போன்ற முயற்சிகள் தொடராத நிலையில், பகிர்வு மின்னிதழ் இருமாத இதழாக வெளிவருவது ஒரு புதிய நம்பிக்கையைத் தோற்றுவித்திருக்கிறது.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு புத்தக வாசிப்புக் குழுவாகத் தொடங்கப்பட்டு, பின்னர் பயிற்சிப் பட்டறைகள், இப்போது மின்னிதழ் என பகிர்வுக் குழுமத்தின் சீரான நகர்வு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று.
முதல் இதழின் சில பக்கங்களைப் படித்தபோது, அன்றைய விரல்மொழியரைப் போலவே, பகிர்வு மின்னிதழும் பன்முகத் தன்மைகொண்ட படைப்புகளை வெளியிடும் மற்றொரு இதழாக முகிழ்த்திருப்பதில் மகிழ்ச்சி. மேலும், திரைவாசிப்பான் பயன்படுத்துவோர் தளத்தை எளிதாக அணுகும் வகையில் அணுகல் வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பது சிறப்பான ஒரு முன்னுதாரண முயற்சி.
முன்னெடுப்பு இடைவிடாது தொடர, பார்வையற்றோரின் படைப்புக்குரல் பொது அரங்கில் ஓங்கி ஒலித்திட வாழ்த்துகள்.
ஒரு முக்கிய தினத்தில் நிகழும் இரண்டு முக்கிய நிகழ்வுகள், ஒன்று நம்மைப் புறம் நோக்கியும், மற்றொன்று அகம் நோக்கியும் அழைத்துச் செல்கிறது. இரண்டின் நோக்கமும் உள்ளார்ந்த உரையாடலே. நிகழ்த்துவோம், மாற்றம் நிகழ்ந்தபடியே இருக்கும் என்கிற நம்பிக்கையோடு.
அனைவருக்கும் உலக வெண்கோல் தின வாழ்த்துகள்.
***ப. சரவணமணிகண்டன்
கருத்துகள் (0):
Post a Comment