நேரடியாக முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

தொடர்: விரட்டும் இருளும் விடியல் வேட்கையும்! (15) கைகொடுத்தது தெய்வம், ஊமையாகிப்போனேன்: S. அஷோக் பாலா

graphic அசோக் பாலா அவர்களின் புகைப்படம்

முந்தைய பகுதிகளைப் படிக்க:

நான் ஒரு விஷயம் சொல்லவா? வேண்டான்னா நீ என்ன விடவா போறேன்னு நீங்க சொல்றது கேக்குது சரி சொல்றேன். ஜூலை 27 இந்த தேதியை நீங்க மறந்திருக்கலாம். என்னால எப்படி மறக்க முடியும். இந்த நாள் வரும் போதெல்லாம் நான் இறந்த நாளாத்தான் நினைப்பேன். எனக்கு நானே இரங்கல் பா கூட எழுதி இருக்கேன். கடைசியா நான் பார்த்த முகங்கள் பார்த்த காட்சிகள் இப்படி ஒன்னு ஒன்னா நான் யோசிச்சுகிட்டே இருப்பேன்.

 

நான் கடைசியா கண்ணு தெரிஞ்சி தியேட்டருக்கு போய் பார்த்த படம் காவலன். நான் கடைசியாக கேப்டனை திரையில் பார்த்த படம் விருதகிரி. நான் பார்த்த எனக்கு பிடித்த எல்லோருடைய முகமும் ஏன் என்னுடைய முகமும். இப்ப நினைச்சாலும் நான் கடைசியாக பார்த்த முகம் தான் எனக்கு தெரியும். என் தங்கத்தோட முகம் கூட இரண்டரை வயசு குழந்தை முகம் தான் ஞாபகத்துக்கு வரும்.

 

நான் கடைசியா எழுதின கவிதை எதுன்னு எனக்கு ஞாபகம் இல்லை. நான் எழுதும் போதெல்லாம் தேதி போட்டு தான் எழுதுவேன். அதேபோலத்தான் கண்ணு தெரியாம போனதுக்கு பிறகு எனக்கு கவிதை தோணும்போதெல்லாம் அந்த நாள் தேதியோட சொல்லி ரெக்கார்ட் பண்ணி வச்சுப்பேன். முக்கியமான சில நிகழ்வுகளையும் நான் ரெக்கார்ட் பண்ணி வச்சுப்பேன். என்கிட்ட இருந்த மொபைல் பட்டன் போன் தான். எனக்கு மொத மொதல்ல என் பேர்ல ஒரு மெயில் ஐடி கிரியேட் பண்ணி ஒரு பேஸ்புக் அக்கவுண்ட் ஓபன் பண்ணி கொடுத்தது என் தம்பிகளில் ஒருத்தன் சின்ன பாலு. அவங்க மொபைல்ல தான் அந்த பேஸ்புக் ஓபன் பண்ணி நான் சொல்றதெல்லாம் எழுதி ஷேர் பண்ணுவாங்க.

 

மாதங்கள் வருடங்களா மாற ஆரம்பிச்சது. நான் என் ஃப்ரெண்ட் வெளிநாடு போறதுக்காக என்கிட்ட சொல்றதுக்கு வந்தான் நான் தான் அவன பைக்ல உட்கார வச்சி அழைச்சிட்டு போய் பஸ் ஏத்திவிட்டு பாய் சொல்லிட்டு வந்தேன்னு சொன்னது ஞாபகம் இருக்கா. அவன் வெளிநாட்டிலிருந்து வந்து என்ன பாக்க வந்தான் என் வீட்டுக்கு. என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் சூர்ய மூர்த்தி. அவன் என்ன பார்த்தான். ஆனா நான் அவனை கட்டிப்பிடிச்சு தொட்டு தான் பார்த்தேன். இப்படி நாங்க ரெண்டு பேரும் சந்திப்பொண்ணு நினைக்கவே இல்ல. நானும் அவனை பார்த்து அழல அவனும் என்னை பார்த்து அழல ஜாலியா வழக்கம் போல தான் பேசிக்கிட்டோம். நாங்க போன்லயே நிறைய தொடர்ந்து பேசிக்கிட்டதனால பெருசா தெரியல.

 

சரி நாம அடுத்து கொஞ்சம் அரசியல் பேசுவோமா. ஆணவத்தோட மொத்த உருவமா இருந்த ஒருத்தவங்க கிட்ட அதிகாரத்தோட உச்சம் கிடைக்கும் போது. எல்லாருமே தான் காலடியில் விழுந்து கிடக்கிறதை பார்த்து ரசிச்சுக்கிட்டு இருந்தா அவங்க முன்னாடி தலை நிமிர்ந்து நெஞ்ச நிமித்தி கையை நீட்டி நாக்க மடக்கி. ஒரே ஆம்பள ஒரே தலைவன். நின்னாருன்னா அது கேப்டன் அதனாலதான் அவர் கேப்டன். திராணி இருக்கான்னு கேட்டவங்களுக்கே திராணி இல்லாம கேப்டனை நேருக்கு நேர் சந்திக்க முடியாம அவருடைய முதுகுல குத்த ஆரம்பிச்சாங்க. அவர் மட்டும் கைய கட்டி கொஞ்சம் தலை குனிஞ்சு நின்னு இருந்தா அரசியல்ல அவருக்கு வீழ்ச்சியே வந்திருக்காது.

 

கேப்டனை விலைக்கு வாங்க முடியாதவங்க கேப்டன் கூட இருந்த துரோகிகள விலைக்கு வாங்கினாங்க. அவர குடிகாரனா கோமாளியா கோவக்காரனா பிச்சை வாங்கிக்கிட்டு ஊடகங்களும் காட்டுச்சி. இன்னொரு கட்சி. அவர் அரசியலுக்கு வர்றாருன்னு தெரிஞ்ச உடனே அவர் மண்டபத்தை இடிச்சாங்க. 2011 தேர்தலில் ஒரு காமெடி நடிகர விலைக்கு வாங்கி ஊர் ஊரா அவருக்கு எதிராக பேச வச்சாங்க.

 

இப்ப எதுக்குடா சம்பந்தமே இல்லாம அரசியல்னு கேக்குறீங்களா? காரணம் இருக்கு நான் என்ன நினைச்சு கவலைப்பட்டதை விட என் அண்ணன் கேப்டனை நினைச்சு கவலைப்பட்டது அதிகம். அன்னைக்கு இருந்த ஆளுங்கட்சிக்கு எதிராக ஏன் பேஸ்புக்ல கடுமையான விமர்சனங்களை நான் சொல்ல சொல்ல என் தம்பிகளை எழுத வச்சு ஷேர் பண்ணினேன். என் போன்ல ஆடியோவா ரெக்கார்ட் பண்ணி அதுக்கு வீடியோ கிரியேட் பண்ணி கூட பேஸ்புக்ல ஷேர் பண்ணி இருக்கேன்.

 

"இலையின் மறைவில் கத்தி வைத்து உன்னை நேருக்கு நேர் சந்திக்க திராணியற்று உன் முதுகில் குத்திய போது. உடைந்து போனது கத்தியும் அவர்களின் புத்தியும் தான்."

 

இப்படி எல்லாம் வீர வசனம் பேசி வீடியோ வா பேஸ்புக்ல போட்டு இருக்கேன். என் பசங்க சொல்லுவாங்க இது மட்டும் தெரிஞ்சுதுன்னா உன்னை தூக்கிட்டு போய் புழல் ஜெயில்ல வச்சுருவாங்கன்னு. அப்ப நான் சொல்லுவேன் என் அண்ணனுக்காக மனித வெடிகுண்டா கூட மாறுவேன்னு. அப்ப எல்லாம் என்ன பயங்கரமா கிண்டல் பண்ணுவாங்க நீ ஜெயிலுக்கு போறது உறுதின்னு சொல்லுவாங்க. என்னுடைய அரசியல் கருத்தோடு உங்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம் அது உங்கள் அரசியல் நிலைப்பாடு. அதை நான் மதிக்கிறேன்.

 

சரி அடுத்த விஷயத்துக்கு வருவோம். நான் ரெண்டு வருஷம் மட்டும் தான் வாழனும்னு முடிவு பண்ணி இருந்ததா சொல்லியிருந்தேல ரெண்டு வருஷம் முடிஞ்ச பிறகும் எனக்கு சாகணும்னு தோணல. எவ்வளவு பெரிய காயமா இருந்தாலும் காலம் அதை ஆத்தும். எவ்வளவு பெரிய தாங்க முடியாத வழியை சுமந்தாலும். காலம் அந்த வலியோட வாழ பழக வைக்கும். தற்கொலை என்பது அந்த நேரத்தில் நாம எடுக்கிற அவசர முடிவு. ஆனா அந்த முடிவை எடுத்த பிறகு கூட நான் அவசரப்படல அதை செயல்படுத்தவில்லை.

 

நீங்க அப்படி ஒரு முடிவு எடுத்தீங்கன்னா உடனே செயல்படுத்த நினைக்காதீங்க. அந்த தற்கொலை முடிவை கொஞ்சம் தள்ளிப்போட்டு கொஞ்சம் வாழ்ந்து பாருங்க. என்ன எப்படி ஒரு மெசேஜ் சொல்லி இருக்கேன் நீங்க எல்லாம் கைதட்ட மாட்டிங்களா. சரி தட்டுறீங்கன்னு நம்புறேன். இது அட்வைஸ் இல்ல என் அனுபவம். நான் தற்கொலை முடிவை மொத்தமா கைவிடல மீண்டும் அடுத்த ரெண்டு வருஷத்துக்கு தள்ளிப் போட்டேன்.

 

உங்களுக்கு ஒன்னு தெரியுமா? நான் கண்ணு தெரிஞ்ச காலத்துல சென்னைக்கு போனதே இல்லை. சென்னைய நான் படங்கள்ல தான் பார்த்திருக்கேன் நேர்ல பார்த்ததில்லை. 2010ல் என்னோட சித்தி பையன் மணி வெளிநாடு போவதற்கு. வழி அனுப்பி வைக்க ஏர்போர்ட் வரைக்கும் என்னை கூப்பிட்டிருந்தான். ஆனா நான் என் ஊரு கும்பாபிஷேகத்திற்கு பேனர் அடிக்கிற விஷயமா பிஸியா இருந்ததால போகல.

 

சரி சரி ஏண்டா இப்படி சுத்துறேன்னு நீங்க டென்ஷன் ஆகிறது புரியுது சொல்றேன். என்னோட பெரிய மாமா பேரு ராஜா வெளிநாட்டிலிருந்து வந்திருந்தாங்க. திரும்ப வேற ஹாஸ்பிடலில் போய் பாக்கலாம்னு சென்னையில் இருக்க சங்கர் நேத்ராலயா ஹாஸ்பிடலுக்கு என் தம்பி மாமா கூட மூணு பேரும் வந்தோம். நான் முதல் முறையா சென்னைக்கு வந்தது அப்போது தான். உண்மையிலேயே அந்த ஹாஸ்பிடல் உள்ள போகும்போது ரெண்டு வருஷத்துல ஏதாவது மருத்துவத்தில் புதிய கண்டுபிடிப்புகள் வந்திருக்கும். பார்வை வருவதற்கு வாய்ப்பு இருக்குமோங்கிற சின்ன  நப்பாசை எனக்குள்ள வந்தது.

 

அந்த ஹாஸ்பிடலிலும் எதுவும் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டாங்க. இந்த முறை நான் அழல கவலைப்படல. ஆனா ஏன் மாமாவுக்கு ரொம்ப கவலையா இருந்தது. நீ கவலைப்படாத தம்பி நான் இருக்கேன் உன்ன நான் பாத்துக்குறேன்னு சொல்லிக்கிட்டே வந்தார். நான் எவ்வளவுதான் சிரிச்சாலும் தைரியமா இருந்தாலும் வருஷங்கள் போனாலும். ஒவ்வொரு நாளும் எனக்கு யாராவது ஏதாவது ஒரு வழி காட்ட மாட்டாங்களா நான் சுயமா வாழ்றதுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதானு ஏங்கி கிட்டே இருந்திருக்கேன். ஆனா அந்த வலியை கூட நான் யார்கிட்டயும் காட்டிக்கிட்டதில்லை.

 

என் பசங்க எல்லாம் அடிக்கடி தியேட்டருக்கு படம் பார்க்க கூப்பிட்டும். நான் கண்ணு தெரியாம போனதுக்கு பிறகு நான் போனதில்லை அதை விரும்புவதும் இல்லை. ஆனா ஏன் அண்ணன் பையன் சண்முக பாண்டியனுடைய முதல் படத்தை தியேட்டர்ல போய் பாக்கணும்னு நினைச்சேன். திருவாரூரில என் தம்பி கூட நைட் ஷோ போனேன். நான் தியேட்டருக்கு படம் பார்க்க போனாலே வாய்விட்டு சிரிப்பேன் சத்தம் போடுவேன் கத்துவேன். ஒரு முறை கேப்டன் நடித்த அரசாங்க படத்துக்கு சின்னவன் பெரியவன் முதல்ல இவங்க ரெண்டு பேரும் யாருன்னு சொல்றேன். சின்னவன் பேரு விக்னேஷ். பெரியவன் பேரு வினேஷ். இவங்க ரெண்டு பேரும் இரட்டையர்கள். என் ஊரிலேயே இருக்க என்னுடைய தம்பிங்க.

 

இந்த ரெண்டு பேரையும் அழைச்சுக்கிட்டு நான் படத்துக்கு போனேன். அங்க கூட்டமே இல்லை. தியேட்டரே அமைதியா இருக்கு. நான் டைட்டில் போட்டதிலிருந்து நான் மட்டும் கத்திக்கிட்டே இருந்தேன். எனக்கு விசில் அடிக்க தெரியாது. ஆனாலும் அண்ணா கேப்டன் தலைவான்னு ஒவ்வொரு சீனுக்கும் தியேட்டர் அதிர அளவுக்கு கத்துவேன். படம் முடிஞ்சு ஊருக்கு வந்த பிறகு என்ன பயங்கரமா எல்லார்கிட்டயும் சொல்லி ஆளே இல்லாத தியேட்டர்ல இவன் மட்டும் தனியா கத்திக்கிட்டு இருந்தான்னு கிண்டல் பண்ணுவாங்க. அப்படி தியேட்டர்ல போய் படம் பார்த்த நான் வெறும் சத்தத்தை மட்டும் கேட்டுகிட்டு சத்தம் போடாம அமைதியா உக்காந்திருந்தேன். கேப்டனோட அறிமுக காட்சி வரும் போதெல்லாம் நான் தொண்டை வலிக்க கத்துவேன். ஆனா கேப்டனோட என்ட்ரி வெறும் மியூசிக் தான் கேட்டது. நான் கை கூட தட்டாம அமைதியா இருந்தேன். கேப்டன் நடித்த கடைசி திரைப்படம் அது தான்.

 

2015 நான் எதிர்பார்த்த என் அத்தை பையன் மணியோட கல்யாணம். எந்த கல்யாணத்துல நான் முன்னாடி நின்னு எல்லாத்தையும் பண்ணனும்னு நினைச்சேனோ. அந்த கல்யாணத்துல ஒரு ஓரமா ஒக்காந்து இருந்தேன். அந்த மேல சத்தத்துல எல்லாரும் வந்து என் கைய புடிச்சு நல்லா இருக்கியான்னு கேட்கும்போது கூட அவங்க யாருன்னு தெரியாம எல்லாத்துக்கும் தலையை ஆட்டிகிட்டு அமைதியா உக்காந்திருந்தேன்.

 

கல்யாணத்துக்கு போயிட்டு அந்த பந்தில போய் ஒக்காந்து சாப்பிடுவதை விட ஒரு கஷ்டம் எனக்கு வேற எதுவும் இல்லன்னு நினைச்சிருக்கேன். என் பசங்க கூட போனா என் பக்கத்துல உக்காந்து இலையில என்னென்ன இருக்குன்னு என் கைய புடிச்சு தொட்டு காட்டுவாங்க. சில நேரங்களில நான் பசங்களோட சேர்ந்து சாப்பிடுறேன்னு சொன்னாலும் அத கேட்காம அழைச்சிட்டு போய் உட்கார வச்சுடுவாங்க. நான் இலையில கை வைக்கிற இடத்துல என்ன சாப்பாடு இருக்கோ அதை மட்டும் தான் சாப்பிடுவேன். நான் கைய வச்சி தடவி பார்க்கிறத எல்லாரும் பாப்பாங்களோங்கிற எண்ணத்திலேயே நான் கை வச்ச இடத்துல இருக்குற சாப்பாடை மட்டும் சாப்பிட்டுட்டு எந்திரிச்சிடுவேன்.

 

என் கூட இருந்த பசங்க எல்லாம் வேலைக்கும் வெளிநாட்டுக்கும் போக ஆரம்பிச்சாங்க. என் எதிர்காலமே என்னன்னு தெரியாம என் நாட்கள் நகர்ந்தன. ஆனாலும் இவன் திமிரு குறையல பாருன்னு எல்லாரும் சொல்ற மாதிரி சில சம்பவங்களையும் பண்ணுனேன். அந்த சம்பவத்தை தெரிஞ்சுக்க நீங்க திரும்பவும் என் கூட திருவிழாவுக்கு வாங்க. என் ஊருக்குள்ள ஒரு வருஷத்துக்கு ரெண்டு திருவிழா நடக்கும். ஒன்னு முருகன் கோயில் இன்னொன்னு மன்மதன் கோயில்.

 

முருகன் கோயில் திருவிழா தான் கொஞ்சம் பெரிய திருவிழா. அந்தத் திருவிழா வரும் போதெல்லாம் திருவிழாவ நடத்துவதற்கான கூட்டம் போடுவாங்கன்னு சொல்லி இருக்கேன்ல. நான் சில வருஷங்கள் அந்த கூட்டத்துக்கு போகல ஒரு நாள் அந்த கூட்டத்துக்கு என் பசங்க என்ன கூட்டிட்டு போனாங்க. வீட்டுக்கு வீடு எவ்வளவு வசூல் பண்ணலாம் என்ன நிகழ்ச்சி பண்ணலாம்னு எல்லாம் பேச ஆரம்பிக்கும் போது. நான் அதெல்லாம் அப்புறம் பேசலாம் போன வருஷத்தோட வரவு செலவு கணக்க சொல்லுங்கன்னு சொன்னேன். கூட்டம் பரபரப்பானது சலசலப்பானது.

 

கடைசியா அந்த வரவு செலவு கணக்கு நோட்டை எடுத்து படிச்சாங்க. எனக்கு தெரியும் அந்த வரவு செலவு கணக்க கரெக்டா சொல்லிட்டாங்கன்னா அவங்க என்ன வச்சி செஞ்சிடுவாங்கன்னு தெரியும். வரவு செலவு கணக்க முழுசா படிச்சு முடிச்சாங்க மீதம் நான்காயிரம் ரூபாய் இருக்குன்னு அந்த நோட்டில் எழுதி இருந்ததையும் படிச்சாங்க. நான் அந்த நாலாயிரத்த எடுத்து வைங்கன்னு சொன்னேன். அப்புறம் என்ன கூட்டம் அது களம் ஆயிடுச்சு. ஸ்டேஜ் போட்டதற்கு 5000 ரூபாய் நான் அதை கணக்குல எழுதல 1000 கையில இருந்து போட்டு இருக்கேன்னு சொன்னாங்க.

 

நான் அதை ஒத்துக்கல. என்ன சமாதானப்படுத்த கடைசியா என்ன செஞ்சாங்க தெரியுமா! அந்த வரவு செலவு நோட்டை எடுத்துட்டு வந்து என் கைல கொடுத்து இந்த வருஷம் திருவிழாவை நீ நடத்துன்னு சொன்னாங்க. அப்புறம் என்ன நான் அந்த நோட்டை வாங்கிகிட்டு கோயில் திருவிழாவை நடத்தி காட்டினேன்னு சொல்லுவேன்னு நினைச்சீங்களா. அந்த சீன் இங்க இல்ல. அது என்ன மாட்ட வைக்க அவங்க வீசின வலை. நான் ஒத்துக்கல சரி போய் தொலைங்கன்னு விட்டுட்டு வந்துட்டேன்.

 

அதுக்குப் பிறகு நடந்தது தான் ஹைலைட். அந்த திருவிழா நடந்து முடிந்த மூன்றாவது நாளே மீண்டும் ஒரு கூட்டத்தை கூட்டி வரவு செலவு கணக்கு ஒப்படைச்சாங்க. அதுவரைக்கும் அப்படி ஒரு சம்பவம் நடந்ததே இல்லை. நான் அந்த கூட்டத்துக்கு போன உடனே தம்பி வந்திருக்குன்னு சில பெருசுகள் சொல்ல. வரவு செலவு கணக்கு எல்லாம் கரெக்டா கேட்டுக்கணும் திரும்ப வந்து யாரும் சண்டை போட கூடாதுன்னு சொன்னாங்க. எனக்கு நல்லா தெரியும் கண்ணு தெரியாம போன பிறகும் இவன் திமிரு குறையலன்னு நிறைய பேரு அன்னைக்கு திட்டி இருப்பாங்கன்னு.

 

அடுத்து மன்மதன் கோயில் திருவிழா அது நைட்ல நடக்கும். ஏதோ ஒரு பையனோட எனக்கு சின்னதா ஆரம்பிச்ச ஒரு வாக்குவாதம். பெரிய சண்டையா மாறிடுச்சு பெரிய ஆட்களும் அதுல சேர்ந்துக்கிட்டு எனக்கு எதிரா பேச. நான் உச்சகட்ட கோபத்துக்கு போக. நாலு பசங்க என்ன பிடிச்சு இழுத்துகிட்டு என் வீட்டுக்கு வந்தாங்க. என்னை இழுத்துகிட்டு போயிட்டு இருக்கும்போது ஒரு பையன் ஓடிவந்து சொன்னான். அண்ணே உனக்கு கண்ணு தெரியலங்கிறதுனாலதான் உன்ன அடிக்காம விட்டாங்களாம்.

 

அவன் சொல்லி முடிக்கும் போது என்ன பிடிச்சிருந்த நாலு பேரும் நாலு சைடு போய் விழுந்தாங்க. என்னை யாராலும் கண்ட்ரோல் பண்ண முடியல. நான் திரும்ப அந்த இடத்துக்கு வேகமா போனேன் எப்படி போனேன்னு தெரியல. என்கிட்ட வந்து சொன்னவன் அண்ணே உன் கால்ல விழுறேன் நீ போகாத அதுக்கும் என்னதான் அடிப்பாங்கன்னு சொன்னான். நான் எதையும் காதில் வாங்கல அந்த இடத்துக்கு போயிட்டு ஆம்பளையா இருந்தா என்ன வந்து அடிங்கடான்னு சொன்னேன். நான் பேசின வார்த்தை எல்லாம் கெட்ட வார்த்தை. ஒருத்தர் கூட என்கிட்ட வரல. யார் வந்திருந்தாலும் நான் இருந்த கோபத்துக்கு அடிச்சிருப்பேன். இதை னான் ஒரு பெருமையா சொல்றேன்னு நினைக்காதீங்க. இதெல்லாம் அந்த நேரத்துல அந்த வயசுல பெருமையா இருந்தது. இப்ப நினைக்கும் போது அசிங்கமா இருக்கு நான் இப்படி எல்லாம் நடந்திருக்க கூடாதுன்னு.

 

சரி திரும்ப அரசியலுக்கு வருவோம். 2016 தேமுதிக திமுகவோட தான் போகணும்னு நானும் நினைச்சேன். ஆனா அன்னைக்கு எடுக்கப்பட்ட முடிவு தப்புன்னு எனக்கும் தெரிஞ்சது. ஆனா என் அண்ணன் என் தலைவன் கேப்டன் தோப்பாருங்கறத நான் கனவுல கூட நினைச்சு பார்க்கல. நடிகரா இருந்து அரசியலுக்கு வந்து அரசியல்ல நடிக்க தெரியாததுனாலயே தோத்து போன ஒருத்தர் கேப்டன்.  என்ன சுத்தி இருந்த என் சொந்தக்காரங்க எல்லோரும் என்னை கிண்டல் பண்ணாங்க. கேப்டனை பற்றி ட்ரோல் வீடியோ வந்தா அதை என்கிட்ட வந்து போட்டு காட்டி சிரிப்பாங்க. நான் எல்லார்கிட்டயும் சொல்லுவேன். தெய்வத்தின் தெய்வம் என் தெய்வம் நான் வணங்கும் தெய்வம் என் மனித தெய்வம் கேப்டன் ஒருவரே தெய்வம். போங்கடான்னு சொல்லுவேன்.

 

இன்றைக்கு கேப்டனை பத்தி நிறைய சொல்லி இருக்கேன்ல, காரணம் இருக்கு. ஒருவேளை 2006 ஆம் ஆண்டும் 2009 ஆம் ஆண்டும் நான் கேப்டனை தேர்தல் பிரச்சாரத்தில் பார்க்க முடியாம போயிருந்ததுனா. என் வாழ்க்கை முழுக்க அது வலிச்சுக்கிட்டே இருந்திருக்கும். நான் நேர்ல பாக்கணும்னு ஆசைப்பட்டது சில பேரைத்தான். அதுல முதல்ல உள்ளவர் கேப்டன் தான்.

 

இப்ப எதுக்குடா அரைச்ச மாவையே அரைக்கிறேன்னு நீங்க கேக்குறது புரியுது. கேப்டனை தூரமா நின்னு பார்த்தேன்; அவரை பக்கத்துல பார்க்கணும் அவர் கூட போட்டோ எடுத்துக்கணும்கிறது என் சின்ன வயசு கனவு. அந்தக் கனவு நிஜமாகற நாள் வந்தது. 2017 கேப்டன் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் உங்களோடு நான் என்ற நிகழ்ச்சியில் தொண்டர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கிற நிகழ்வு நடந்தது. பிப்ரவரி 13 2017 திருவாரூரில் ராயல் பார்க் என்கிற ஒரு நட்சத்திர விடுதிக்கு கேப்டன் வர்றாருன்னு தெரிஞ்சுகிட்டேன்.

 

அப்புறம் என்ன சின்னவன அழைச்சிக்கிட்டு திருவாரூர் போனேன். அங்கே என் சித்தி வீட்டுக்கு போய் கட்சி வேஷ்டி கட்டிக்கிட்டு சும்மா கெத்தா திருவாரூர் வீதியில் நடந்து போனேன். என் கூட வந்த சின்னவன் கிண்டல் பண்ணிகிட்டே வந்தான். “ஐயோ எல்லாரும் பாக்குறாங்க எனக்கு அசிங்கமா இருக்குன்”னு சொல்லிக்கிட்டே வந்தான். நான் என் அண்ணனை பார்க்க போறேன் என்கிற சந்தோஷத்தோட போனேன்.

 

காலையிலே போனதுனால டோக்கன் கொடுத்தாங்க 100 ரூபாய் அந்த டோக்கனுக்கு வாங்கினாங்க. ஆயிரம் ரூபாய் கேட்டிருந்தாலும் நான் கொடுத்திருப்பேன். கேப்டனோட என்ட்ரி கேப்டன் கேப்டன் என்கிற சத்தத்துல அந்த இடமே அதிர்ந்தது. எல்லாரும் வரிசையா போக. என் பக்கத்துல இருந்த ஒருத்தர் கண்ணாடியை கழட்டுங்க கேப்டன் கண்ணாடி போட்டு இருக்கார் நாம போடக்கூடாதுன்னு சொன்னாரு. எனக்கு கண்ணு தெரியாதுங்குறது யாருக்கும் தெரியல. சொன்ன பிறகு யாரும் எதுவும் சொல்லல.

graphic சகாப்தம் பாடல்கள் வெளியீட்டு விழாவில் விஜயகாந்த்
விஜயகாந்த்
“ஸ்டேஜ்ல கேப்டன் உட்கார்ந்து இருக்க அவர் ரெண்டு பக்கத்திலும் ரெண்டு சேர் போட்டு ரெண்டு பேரா உட்கார வச்சி போட்டோ எடுத்து அனுப்பிக்கிட்டு இருக்காங்”கன்னு சின்னவன் சொன்னான். அது மட்டும் இல்ல “ஆர்வக்கோளாறுல அண்ணான்னு கத்திகிட்டு கிட்டக்க போயிடாத உன் அண்ணன் அறைஞ்சிடுவார்”னு கிண்டல் பண்ணினான். டேய் சின்னவனே அண்ணன் கிட்ட போகும்போது என் கைய புடிச்சு அண்ணன் கிட்ட குடுடான்னு சொல்லிக்கிட்டே போனேன். மேடையை நெருங்கும் போது ஒருத்தர் என் கைய புடிச்சுக்கிட்டாரு. சின்னவன் “அண்ணனுக்கு கண்ணு தெரியாது நான் புடிச்சு உக்கார வைக்கிறேன்”னு சொல்லியும் “நீங்க போங்க நான் உட்கார வைக்கிறேன்”னு சொல்லி அவனை அனுப்பிட்டு என்ன ஒரு சேர்ல உக்கார வச்சாரு. கேப்டன் கிட்ட இன்னும் என்ன உட்கார வைக்கல, கொஞ்ச நேரம் கழிச்சு உக்கார வைப்பாங்க போலன்னு நினைச்சுக்கிட்டே உட்கார்ந்து இருந்தேன்.

 

"வணக்கம்"ன்னு ஒரு குரல் கேட்டது. என் நாடி நரம்பு எல்லாம் சிலிர்த்துப் போனது. அந்தக் குரல் என் அண்ணன் என் கேப்டன். என்ன உட்கார வச்ச அந்த ஆளு கேப்டன் பக்கத்துல தான் உட்கார வச்சேன்னு சொல்லவே இல்ல. “தெய்வமே நீ என் பக்கத்துல தான் உட்கார்ந்து இருக்கியான்”னு அதிர்ச்சியில் எந்திரிக்க பார்த்தேன்.

 

“இங்க பாருங்கன்”னு ஒரு குரல் கேட்டுச்சு பார்த்தேன். போட்டோ எடுத்துட்டாங்கன்னு என்ன ரெண்டு பேரு தூக்கிட்டாங்க. நான் கேப்டனுக்கு கை கொடுக்காம வரமாட்டேன்னு சொல்லியும் அவங்க ரெண்டு பேரும் கேட்காம என்ன தூக்கிக்கிட்டுப் போனாங்க. கேப்டன் கையை காட்டினாராம்! எனக்கு தெரியாது. அதற்குப் பிறகு என்ன விட்டாங்க. கேப்டன் ஓட ரெண்டு கையையும் என் ரெண்டு கையால் சேர்த்து பிடிச்சுகிட்டேன். நான் எதுவுமே பேசல உண்மைய சொல்லணும்னா அந்த நிமிஷம் என் வாழ்க்கையில சின்ன வயசுல இருந்து நான் நெனச்சு பார்த்த ஒரு நிகழ்வு நடக்கும்போது. எனக்கு பேச்சே வரல.

 

கேப்டன் ஓட கை சாஃப்டா இல்ல ரஃப்பாதான் இருந்தது. அவர் போட்டிருந்த கட்சி மோதிரமும் எனக்கு தெரிஞ்சது. கேப்டனும் என்கிட்ட எதுவும் பேசல, பேசுறதுக்கான நேரத்தையும் யாரும் கொடுக்கல. கூட்டம் கட்டுக்கடங்காம இருந்ததால என்ன தூக்கிட்டு வந்து வெளிய விட்டாங்க. “நீங்க எதுவும் நினைச்சுக்காதீங்க; கேப்டனை அப்புறமா வந்து பார்க்கலாம்; நீங்க நிறைய பேசலாம்”னு சொல்லி அனுப்பி வச்சாங்க.

 

எங்கடா சின்னவன்னு பார்த்தா அவன அப்பவே தூக்கிட்டு போய் வெளில விட்டுட்டாங்களாம். கேப்டனோட நான் எடுத்த போட்டோவை பிரேம் பண்ணி என் வீட்ல வச்சிருக்கேன். அந்த போட்டோவை எடுத்துட்டு போய் எல்லோர்கிட்டயும் காட்டினேன். எல்லாரும் பார்த்து பார்த்து சந்தோஷப்பட்டாங்க. வாழ்க்கைய பாத்தீங்களா. சின்ன வயசுல இருந்து நான் ஆசைப்பட்ட கனவு நிஜமானது. ஆனா என்னால அத பார்க்க முடியல. அதுதான் வாழ்க்கை.

 

பார்வையற்ற சமூகத்துக்குள்ள நான் வந்த நிகழ்வ பத்தி ஆரம்பிக்கலாமா?  சரி ஆரம்பிக்கலாம், ஆனால் இப்ப இல்ல அடுத்த பகுதியில்.

 

***தொடர்புக்கு: ashokbala1387@gmail.com

 

பேச: 9626261773

www.thodugai.in

கருத்துகள் (1):

Anonymous
நண்பர் சோகத்தையும் சுகமாக எடுத்துக்கொண்டு பல சவால்களை கடந்து சாதித்து வருவது பாராட்டிற்குரியது ❤️❤️❤️

Post a Comment

தளத்தின் மேலே செல்ல