நேரடியாக முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

அலசல்: டிசம்பர் 3 கொண்டாட்டங்கள்: சமத்துவ நோக்கும் சம்பிரதாயப் போக்கும்

நவம்பர் மாதம் வந்துவிட்டது. டிசம்பர் 3 அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி, மாவட்ட வாரியான கொண்டாட்டங்களுக்கான முன்னெடுப்புகள் தொடங்கிவிட்டன. விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் என மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர்கள் தங்கள் மாவட்டத்துக்கான தேதிகளை அறிவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அவற்றில் கணிசமானவை, நவம்பர் மற்றும் டிசம்பர் மாத மழைப்பொழிவுகளால் ஒத்திப் போடப்படலாம், அவற்றுள் சில டிசம்பர் 3-க்குப் பிறகான தேதிகளில் கொண்டாடப்படலாம்.

 

மாநில அளவிலான கொண்டாட்டங்களைப் பொருத்தவரை, ஒவ்வொரு ஆண்டும் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் 3-ஆம் தேதியிலேயே அமைச்சர் பங்கேற்கும் முதன்மை விழாவை ஒருங்கிணைத்து வருகிறது தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை. டிசம்பர் 1-ஆம் நாள், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளைத் துறை அமைச்சர் தொடங்கிவைத்து, அன்று மாலை வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகளை வழங்குவார்.

 

அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் 3-ஆம் நாள், காலையில்மாநிலத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் சிறப்புப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான கலைப்போட்டிகள் நடத்தப்படும். இந்தப்போட்டியில் முதல்ப்பரிசு பெறும் கலைநிகழ்ச்சிமாலை நடைபெறும்் விழாவில் அமைச்சர் முன்னிலையில் அரங்கேற்றப்படும். அத்தோடு,சிறப்பாகச் செயல்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விருது வழங்கிச் சிறப்பிக்கும்.

 

பணிவாய்ப்பு, மாதாந்திர ஓய்வூதிய உயர்வு போன்ற தங்களுடைய அத்தியாவசியக் கோரிக்கைகளின் பின்னுள்ள நியாயங்களை ஆளும் அரசிடமும், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடமும் கவனப்படுத்தி, அவற்றை வென்றெடுக்கும் நோக்கத்தோடு, மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக பார்வையற்றோருக்கான சங்கங்கள் இந்த நாளை கருப்புநாளாக அனுசரித்திருக்கின்றன என்பதும் கடந்தகால வரலாறு.

 

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாள்: வரலாறு சொல்வதென்ன?

1976-ல்  ஐக்கிய நாடுகள் பொதுச்சபை (UN General Assembly) 1981 ஆம் ஆண்டை "சர்வதேச மாற்றுத்திறனாளிகள் ஆண்டு" (International Year of Disabled Persons) எனப் பிரகடனம் செய்தது. "முழு பங்கேற்பு மற்றும் சமத்துவம்" என்ற முழக்கத்துடன் இது தொடங்கப்பட்டது.

Graphic: 1981 ஆம் ஆண்டு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் ஆண்டை நினைவுகூரும் பிரிட்டிஷ் தபால் தலைகள் இடம்பெற்ற விளம்பரப் படம். மேல்பகுதியில் ஆரஞ்சு நிற சக்கர நாற்காலி சின்னமும், அருகில் “The International Year of Disabled People 1981” என்ற வாசகமும் உள்ளது. கீழே மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை மற்றும் திறன்களைச் சித்தரிக்கும் நான்கு வண்ணத் தபால் தலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
 1981 ஆம் ஆண்டின் தொடர்ச்சியாக, 1983 முதல் 1992 வரையிலான 10 ஆண்டுகளை "மாற்றுத்திறனாளிகளுக்கான ஐ.நா. தசாப்தம்" (UN Decade of Disabled Persons) ஆக ஐ.நா. அறிவித்தது. இந்தக் காலகட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை எனத் தனித்துறையாகச் செயல்படாமல், ஊனமுற்றோருக்கான மறுவாழ்வு என்ற பொருண்மையின் கீழ், தமிழக அரசின் சமூகநலன் மற்றும் சத்துணவுத்துறையின் கட்டுப்பாட்டில் ஊனமுற்றோருக்கான மறுவாழ்வுத் திட்டங்கள் தீட்டப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, ஒவ்வோர் ஆண்டு் மார்ச் மூன்றா் ஞாயிற்றுக்கிழமை ஊனமுற்றோருக்கான நாள் தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டது. இந்த நாளை முன்னிட்டு, மாவட்ட மற்றும் மாநில அளவிலான கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

 

தமிழகத்தில் ஊனமுற்றோருக்காக இயங்கிவந்த பல சிறப்புப்பள்ளிகளுக்கு இந்த நாள்தான் ஆண்டுவிழா. அனைத்துவிதமான போட்டிகளிலும் மாணவர்கள் உற்சாகத்தோடு பங்கேற்றார்கள். ஆனால், 1990களின் பிற்பகுதியில் ஊனமுற்றோர் நாள் கொண்டாட்டங்களில் மாற்றங்கள் ஏற்பட்டன.

graphic: 1983 முதல் 1992 வரை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஐக்கிய நாடுகள் பத்தாண்டைக் குறிக்கும் சுவரொட்டி. வெள்ளை நிறப் பின்னணியில் பச்சை நிறத்தில் ஐக்கிய நாடுகளின் ஆலிவ் கிளைச் சின்னத்தால் சூழப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தொடர்பான குறியீடு இடம்பெற்றுள்ளது. அதன் கீழே ஸ்பானிய மொழியில் “மாற்றுத்திறனாளிகளுக்கான ஐக்கிய நாடுகள் பத்தாண்டு, 1983–1992” என்று எழுதப்பட்டுள்ளது.
ஐநாவின் பத்தாண்டு
 ஐநாவின் ஊனமுற்றோருக்கான தசாப்தம் 1992-ஆம் ஆண்டு நிறைவடைந்த நிலையில், இனி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ஐ அனைத்து நாடுகள் ஊனமுற்றோர் நாளாகக் கடைபிடிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2006-ல், ஊனமுற்றோர் (Disabled persons) என்ற சொல் பெர்சன்ஸ் வித் டிசேபிலிட்டிஸ் (Persons with Disabilities) எனப் பெயர் மாற்றம் பெற்றது.

 

1993-ஆம் ஆண்டு, சமூகநலன் மற்றும் சத்துணவுத்துறையிலிருந்து மறுவாழ்வுச் செயல்பாடுகள் பிரித்தெடுக்கப்பட்டு, ஊனமுற்றோருக்கான மறுவாழ்வுத்துறை (Department ofRehabilitation for Disabled)  தனித்துறையாகச் செயல்படத் தொடங்கியது. ஊனமுற்றோருக்கான நல ஆணையர் பதவி தோற்றுவிக்கப்பட்டு, ஆணையரின் நேரடிக் கண்காணிப்பில் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் மாவட்ட மறுவாழ்வு அலுவலர்கள் (District disabled Rehabilitation Officers DDROS)நியமிக்கப்பட்டனர்.

 

டிசம்பர் 3-ஐ அனைத்து நாடுகள் ஊனமுற்றோருக்கான நாளாகக் கடைபிடிப்பது என்ற 1992-ன் ஐநாவின் முடிவு, 1990களின் இறுதியில் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அன்றுமுதல், முன்பிருந்த கொண்டாட்டங்கள் அதன் சுரத்தை இழக்கத் தொடங்கியதாக விமர்சிப்பவர்களும் உண்டு.

 

அதற்குக் காரணங்களு்ம் இல்லாமல் இல்லை. மாநிலத்தின் கனமழை, புயல் வெள்ள நாட்களாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள் இருப்பதால், டிசம்பர் 3 அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் நாள் கொண்டாட்டங்கள் பலமுறை ஒத்திப்பொடப்பட்டுள்ளன அல்லது கைவிடப்பட்டுள்ளன. இது அந்த நாளினை வருடத்தில் தங்களுக்குக் கிடைத்த பொன்னாளாகக் கருதும் சிறப்புப்பள்ளி மாணவர்கள் மற்றும் பல தரப்பு மாற்றுத்திறனாளிகளிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது. மேலும், தற்காலத்தில் மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் 3 கொண்டாட்டங்கள் அதன் உத்வேகத்தை இழந்து, நலத்திட்ட உதவிகளை வழங்கும் ஒரு சம்பிரதாய நிகழ்ச்சியாக மாறிவருகிறது என்கிற புலம்பல்களும் கேட்கின்றன. அதற்குக் காரணம், துறையில் நடந்திருக்கிற ஒரு முக்கிய மாற்றம்தான் என்கிறார்கள் மாற்றுத்திறனாளிகள் நல ஆர்வலர்கள்.

 

அது என்ன மாற்றம்?

graphic: இடது பக்கத்தில் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்கள் மேடையில் அமர்ந்திருக்கும் காட்சியும், வலது பக்கத்தில் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட தொழுநோய் மறுவாழ்வு முகாம் கட்டிடத்தின் முன்பாக சில நபர்கள் நிற்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளன. குறிப்பு: இது ஒரு கருப்பு வெள்ளைப் புகைப்படம்
1993-ல் ஊனமுற்றோருக்கான நலன்கள் தனித்துறை கண்டாலும், சமூகநலன் மற்றும் சத்துணவுத்துறையின் அமைச்சரே இந்தத் துறைக்கும் அமைச்சராக நீடித்தார். ஆனால், 2007 ஊனமுற்றோர் தொடர்பான ஐக்கிய நாடுகள் ஒப்பந்தத்தின் (UNCRPD) சரத்துகளை மாநிலத்தில் அமலாக்க விரும்பிய அன்றைய முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் கடந்த 2010 மார்ச் மாதம் சட்டமன்றத்தில் சில அறிவிப்புகளைச் செய்தார்.

 

“#இனி ஊனமுற்றோர் என்ற சொல் (Persons with Disabilities) மாற்றப்பட்டு, அவர்கள் மாற்றுத்திறனாளிகள் (Differently abled Persons) என்று அழைக்கப்படுவார்கள்.

 

#ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை (Welfare for the Differently abled Persons) எனப் பெயர் மாற்றப்படுகிறது.

 

#மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு தனிச் செயலர் நியமிக்கப்படுவதோடு, அந்தத் துறை எனது (முதல்வரின்) நேரடிக் கண்காணிப்பில் இயங்கும்.”

 

முன்னாள் முதல்வரின் அறிவிப்புகள் அன்றைய நாளிலேயே அமலுக்கு வந்தன. அதனைத் தொடர்ந்து, மு. கருணாநிதி அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அமைச்சராகவும் இருந்தார். ஆனால், 2011, 2016-ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த ஆட்சி மாற்றம், பழைய நிலையே  தொடர வழிவகுத்தது. முன்னாள் முதல்வர்கள் செல்வி. ஜெயலலிதா, திரு. ஓ. பன்னீர்செல்வம், திரு. எடப்பாடி பழனிச்சாமி என மூவருமே மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் பொறுப்பை மீண்டும் சமூகநலத்துறை அமைச்சர் கட்டுப்பாட்டிலேயே ஒப்படைத்தனர்.

graphic: மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் பெரிய உருவப்படத்தின் முன்பாகத் திரும்பி நின்று மரியாதை செலுத்தும் காட்சியைக் காட்டும் புகைப்படம்.
 ஆனால், வரலாறு மீண்டும் திரும்பும் என்பார்களே! அதைப்போல, கடந்த 2021 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் மாநிலத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றார். தன் தந்தையைப் போலவே மாற்றுத்திறனாளிகள் நலத்துறையைத் தனது நேரடிக் கண்காணிப்பில் வைத்துக்கொள்வதாக அறிவித்தார்.

 

முன்னாள் முதல்வரின் இந்த அறிவிப்பினை தொடக்கத்தில் மாற்றுத்திறனாளிகள் வரவேற்றார்கள் என்றாலும், அதன் நடைமுறை இடர்பாடுகள் மாற்றுத்திறனாளிகளிடம் மாநிலத்தின் முதல்வரே மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கும் அமைச்சர் என்கிற அம்சத்தின்மீதும் ஒரு ஒவ்வாமையை ஏற்படுத்திவிட்டது. இது குறித்து, தனித்த ஒரு பதிவில் விரிவாக அலச வேண்டும். இப்போதைக்கு, இந்த அம்சம் மாற்றுத்திறனாளிகள் நாள் கொண்டாட்டத்தில் ஏற்படுத்தியிருக்கிற தாக்கத்தை மட்டும் பார்ப்போம்.

 

கடந்த ஐந்தாண்டுகளில் முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் துறை இருந்ததால், டிசம்பர் 3-ஐ முன்னிட்டு, பல புதுமையான முன்னெடுப்புகள் செயல்படுத்தப்பட்டன. சிறப்புப்பள்ளி மாணவர்களை ஒருநாள் சுற்றுலாவாக சென்னையின் முக்கிய இடங்கள், திரைப்படங்கள் என அழைத்துப் போவது, மாநிலத்தின் உட்பகுதியில் இருக்கும் ஒரு சிறப்புப்பள்ளியைத் தேர்ந்தெடுத்து அந்த மாணவர்களை விமானப் பயணத்தின் மூலமாக சென்னைக்கு அழைத்து வருவது போன்றவை பாராட்டுக்குரிய முன்னெடுப்புகள். அதேசமயம், அந்த நாளின் விழாத் திட்டமிடல்களும் நிறைவேற்றமும் எப்படியிருந்தன?

 

முதல்வரே துறையமைச்சர் என்பதால்,அவர்  பங்கேற்கும் விழாவில் பாதுகாப்பு காரணங்களால்  கெடுபிடிகள் அதிகமாகியிருக்கின்றன. அதனால், துறை செல்வாக்கு பெற்றவர்கள், வாரிய உறுப்பினர்கள், சங்கம் அல்லது தன்னார்வத் தொண்டு நிறுவனத் தலைவர்களுக்கு மட்டுமே அன்றைய விழாவில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றன. மேலும், காலை, மாலை என்ற ஒரு முழுநாள் கொண்டாட்டம் அரைநாளாகச் சுருங்கிவிட்டது. அத்தோடு, பாதுகாப்பு என்கிற ஒற்றை அம்சத்தால் விழா அதன் கொண்டாட்டப் பொலிவை இழந்து, ஒரு இறுக்கமான நிகழ்வாகமாறிவிடுகிறது என்கிறார்கள் மாற்றுத்திறனாளிகள்.

 

முன்பெல்லாம் கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற சிறப்புப் பள்ளி மாணவர்கள், தங்கள் திறமையை விழா மேடையில், துறை அமைச்சர் முன்னிலையில் நிகழ்த்திக் காட்ட வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. கலை நிகழ்ச்சிகளை ரசித்துப் பார்க்கும் அமைச்சர், அந்த மாணவர்களை அழைத்துப் பேசுகிற இனிய நிகழ்வுகளெல்லாம் முந்தைய காலங்களில் அரங்கேறியிருக்கின்றன. அந்த வாய்ப்பின் மூலம், சிறப்புப்பள்ளிகளும் அங்கே பயிலும் மாணவர்களின் நலன்களும் கவனப்படுத்தப்பட்டன.  ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் அது பரிசு வழங்கும் சில வினாடிகளாக மட்டுமே சுருங்கிவிட்டது. அதற்கும் இத்தனைபேர்தான் வரவேண்டும், இப்படித்தான் நிற்கவேண்டும் என எக்கச்சக்க கெடுபிடிகள்.

 

இந்தப் போக்கு, இந்த நாளையே தங்களின் பள்ளி ஆண்டுவிழாவாகக் கருதும் அரசு சிறப்புப்பள்ளி மாணவர்களிடையே மிகப் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. “வெற்றிபெற்றால் அமைச்சர் முன்னிலையில்மேடையேறலாம்” என்கிற ஓராண்டுகால ஊக்கமும் எதிர்பார்ப்பும் ஒரு நொடியில் பொய்த்துப்போவதில் விரக்தியடைகிறார்கள் மாணவர்கள். மாணவர்களின் மனதில் உருவாகும் ஆழமான சோர்வின் தாக்கத்தினை அதிகாரத்தின் கண்களைக்கொண்டு ஒருபோதும் உய்த்துணர இயலாது.

graphic: மஞ்சள் நிறப் பின்னணியில் நடிகர் மற்றும் தமிழக முதவர் விஜய், வெள்ளை நிறச் சட்டையும் கருப்பு நிற கோட்டும் (Suit) அணிந்து புன்னகையுடன் காட்சியளிக்கும் படம்.
 இந்த ஆண்டு, மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள்தான் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையையும் தனது நேரடிக் கண்காணிப்பில் வைத்திருக்கிறார். எனவே, கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் சிறப்புப்பள்ளி மாணவர்களுக்கான ஒருநாள் சுற்றுலா போன்ற திட்டங்கள் கூடுதல் பொலிவுடனும் விமர்சையாகவும் ஏற்பாடு செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

 

அதேசமயம், மாண்புமிகு தமிழக முதல்வர் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம்களை ஏற்படுத்தி, அந்த பணிவாய்ப்பு முகாம்களில், குறிப்பிடத்தக்க மாற்றுத்திறனாளிப் பிரிவைச் (Benchmark Disabilities) சேர்ந்த அனைத்துப் பிரிவினருக்கும் பணி வாய்ப்பு கிடைப்பதை துறை உயர் அலுவலர்கள் உறுதிசெய்ய வேண்டு்ம் என்கிற கோரிக்கையினை முன்வைக்கிறார்கள் பார்வையற்றோரின் நலனுக்காக இயங்கும் சங்கங்களைச் சேர்ந்தவர்கள். ஏனெனில், ‘மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்’ எனப் பொதுவாக அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, அந்த முகாமில் பார்வை மாற்றுத்திறனாளிகள் புறக்கணிக்கப்படுவதே காலங்காலமாக இங்கே நடந்துவரும் அவலம் என்பதையும் அவர்கள் விரக்தியோடே சுட்டுகிறார்கள்.

 

புதிய அரசு பொறுப்பேற்று, கடந்த ஆட்சியைப் போலவே, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை தமிழக முதல்வர் அவர்கள் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சூழலில், இந்த ஆண்டுக்கான டிசம்பர் 3! அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் நாள் கொண்டாட்டங்கள் குறித்த எதிர்பார்ப்பு மாற்றுத்திறனாளிகளிடையே அதிகரித்திருக்கிறது.

 

வரவிருக்கும் டிசம்பர் 3, மாற்றுத்திறனாளிகளிடையே மகிழ்ச்சியைப் பெருக்கிடுமா, இல்லை மற்றும் ஒரு சம்பிரதாய நாளாக சுருங்கிடுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

 

***தொடுகை மின்னிதழ்.

உரையாடலும் உரையாடல் நிமித்தமும்.

www.thodugai.in

கருத்துகள் (0):

Post a Comment

தளத்தின் மேலே செல்ல