
சிறுவனின் முயற்சிக்கு
வாழ்த்துகள். மேலும், சர்வேஸ்வரனின் வெற்றியில் தன் சக்திக்கும் மீறிய உழைப்பைச் செலுத்திப்
பெரிதுவக்கும் தாயாய் மிளிர்ந்திருக்கிற அவருடைய அம்மா சித்ராவுக்கு தொடுகை மின்னிதழ்
தன் தலைதாழ்ந்த வணக்கங்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது.
ஒவ்வொரு நிகழ்ச்சி மேடையிலும்
சிறுவனை உடனிருந்து நெறிப்படுத்துவதோடு, திரைக்குப் பின்னால் அவனுடைய ஒவ்வொரு பாடல்
முயற்சியையும் தொடர்ந்து செம்மைப்படுத்தி, சிறந்த பங்களிப்பைச் செய்துவரும் பயிற்சியாளர்
அபினயாவுக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும் பாராட்டுகளும். நவம்பர் 15 அன்று நடைபெற உள்ள
இறுதிப் போட்டியில் சிறுவன் சர்வேஸ்வரன் முதல்ப்பரிசைத் தட்டிச் செல்வார் என்ற நம்பிக்கையோடு,
அரசிடம் சில கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.
பார்வையற்றவர்களுக்கு
உண்மையான மறுவாழ்வு என்பது அவர்கள் பெறும் தரமான கல்வியில்தான் அடங்கியுள்ளது. எத்தனை
வாய்ப்புகள் உருவாக்கப்பட்டாலும், ஒரு முழுப் பார்வையற்றவர் பார்வையுள்ளவர்களுக்குச்
சமமாகப் போட்டியிட்டு, வெற்றிபெறுகிற வாய்ப்பினை மிகத் துல்லியமாகக் கொண்டிருப்பவை
இசை, சதுரங்கம் ஆகிய இரண்டு துறைகளும்தான்.
ஆனால், அரசால் நடத்தப்படும்
பார்வைத்திறன் குறையுடையோருக்கான பத்து சிறப்புப்பள்ளிகளி்லும் அதற்கான போதிய வாய்ப்புகளும்
வசதிகளும் உருவாக்கப்படவில்லை என்பது உண்மையில் நிகழ்காலச் சோகம். அவ்வப்போது தனியார்
தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் சதுரங்கப் போட்டிகள் தவிர்த்து, பார்வையற்றோருக்கான
சதுரங்க முயற்சிகளில் அரசின் பங்களிப்பு என்பது பூஜியமே.
இசைத்துறை வரலாற்றில்
பார்வையுள்ளவர்களுக்கு நிகராகப் பார்வையற்றவர்களும் சாதித்திருக்கிறார்கள். ஆனால்,
அவர்களுள் பெரும்பாலோர் சமூகத்தின் முதன்மை அடுக்கைச் சேர்ந்தவர்கள். முன் தீர்மானிக்கப்பட்ட
சமூகப் பொருளாதார வாய்ப்புகள் அவர்களுக்கான பெரும் ஊக்கிகளாக இருக்கின்றன. அதேசமயம்,
கடைக்கோடி கிராமத்தைச் சேர்ந்த, சமூக மற்றும் பொருளாதாரச் சூழலில் மிகமிகப் பின்தங்கிய
நிலையில் இருக்கிற சர்வேஸ்வரன் போன்ற மாணவர்களும் மேல் எழும்பித் தங்களை நிரூபித்துக்கொள்ள
பெரும் ஊக்கியாக அமைய வேண்டிய முதன்மைக் கடப்பாடு கொண்டது அரசு.
ஆனால், அரசு தன் கடமையை
நிறைவேற்றுவதில் பெரும் சருக்கலைச் சந்திக்கிறது. இன்றைக்கும் தமிழகத்தில் பார்வையற்றோரு்க்காக
இயங்கிவரும் பத்து அரசு சிறப்புப்பள்ளிகளில் ஒன்பது பள்ளிகளில் இசை ஆசிரியர்ப் பணியிடங்கள்
பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாகவே வைக்கப்பட்டுள்ளன. சர்வேஸ்வரன் படிக்கும் புதுக்கோட்டை
பள்ளியில் இசை ஆசிரியருக்கான பணியிடமே பள்ளி தொடங்கி ஐம்பதாண்டுகள் கடந்தும் உருவாக்கப்படவில்லை
என்பது மிகப் பெரிய ஏமாற்றம். எஞ்சிய பள்ளிகளான தஞ்சை மற்றும் திருச்சி மேல்நிலைப்பள்ளிகள்,
சேலம் நடுநிலைப்பள்ளி, கடலூர்,தர்மபுரி,சிவகங்கை,மதுரை, கோவை தொடக்கப்பள்ளிகளில் இசை
ஆசிரியர்ப் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. பூவிரு்ந்தவல்லி மேல்நிலைப்பள்ளியில்
இருக்கிற இரண்டு இசை ஆசிரியர்ப் பணியிடங்களில் ஒன்று மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது.
இசை ஆசிரியர்ப் பணியிடங்களைப்
போலவே, 17 மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களில் பல ஆண்டுகளாக காலியாக இருந்த
உதவி வரவேற்பாளர் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான அறிவிக்கை அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
அந்தப் பணியிடங்களை முழுப் பார்வையற்றவர்களைக்கொண்டு மட்டுமே நிரப்பிட வேண்டும் என்கிற
அரசின் அறிவிப்பும் பாராட்டுக்குரியது.
உதவி வரவேற்பாளர் பணிநியமன
அறிவிப்பினைப் பின்பற்றி, சிறப்புப் பள்ளிகளில் பல ஆண்டுகளாகக் காலியாக உள்ள இசை ஆசிரியர்ப் பணியிடங்கள் தகுதியுடைய
பார்வையற்றவர்களைக் கொண்டு மட்டுமே நிரப்பிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப்
பணி நியமன நடவடிக்கைகளில் பள்ளிக்கல்வித்துறையில் பகுதிநேர இசை ஆசிரியர்களாகப் பணியாற்றுவோருக்கு
முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். துறை மாறுதல் என்ற பெயரில், ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறையில்
காலமுறை ஊதியத்தில் இசை ஆசிரியர்களாகப் பணியாற்றுவோருக்கு வாய்ப்பளிப்பதன் மூலம், பல
ஆண்டுகளாக அரசுப்பணிக்காகக் காத்திருக்கும் இரண்டு பார்வையற்றவர்களுக்கான வாய்ப்புகள்
மறுக்கப்படுகின்றன என்ற உண்மையைப் புரிந்துகொண்டு, எதிர்காலத்தில் அவ்வாறான கோரிக்கைகளை
அரசு பரிசீலிக்கக் கூடாது.
உதவி வரவேற்பாளர் பணி
நியமன நடவடிக்கைகள் போலல்லாமல், இசை ஆசிரியர்களுக்கான பணி நியமன நடவடிக்கைகளின் ஒவ்வொரு
கட்டத்திலும் அரசு முழுமையான வெளிப்படைத்தன்மையைப் பேணிட வேண்டும். இவ்வாறு நன்கு திட்டமிட்டு
உருவாக்கப்படும் ஒவ்வொரு பணிவாய்ப்பும், அனைவரையும் உள்ளடக்கிய, ஒத்திசைந்த சமூகத்தை
உருவாக்குவதில் அரசுக்கு மிகப் பெரிய அளவில் கைகொடுக்கும் என்பதை அரசு கவனத்தில்கொள்ள
வேண்டும்.
***தொடுகை மின்னிதழ்.
www.thodugai.in
கருத்துகள் (2):
Post a Comment