நேரடியாக முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

ஆளுமை: ஒரு விருட்சத்தின் வரலாறும் அந்த விடையறியாக் கேள்வியும் - ப. சரவணமணிகண்டன்

■ All our world organizations will prove ineffective if the truth that love is stronger than hate does not inspire them.

 

“வெறுப்பைவிட அன்பே வலிமையானது என்ற உண்மை நம்மை ஊக்குவிக்காவிட்டால், உலக அமைப்புகள் அனைத்தும் பயனற்றவையாகிவிடும்.”

 

***டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்.

 

சிலருக்குச் செல்வம் சேமிப்புக்கானது. தனக்கு மட்டுமின்றி தன்னுடைய ஏழு தலைமுறைகளுக்கும் இந்தப் பிறவியிலேயே என்ன செய்தாகிலும் சேர்த்துவைக்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பார்கள். இன்னும் சிலர், செல்வத்தால் அதிகாரத்தை அடைந்து, அதன்வழியே தங்கள் செல்வத்தைப் பெருக்குவார்கள்.

 

பயனீட்டுச் சமூகமாகச் சுருங்கிவிட்ட இன்றைய மனிதகுலத்தில், மேற்சொன்ன இரண்டு ரகம்தான் பெரும்பான்மை. ஆனால், கைவிரல்கள் விட்டு எண்ணக்கூடிய சில மனிதர்களும் இந்த உலகத்தில் அவ்வப்போது அவதரிக்காமல் இல்லை. அவர்களின் பட்டுண்டுண்டதாலேயே மண் புக்கு மாயாதிருக்கிறது இந்த உலகம். கிடைத்தற்கரிய செல்வத்தை வாரி வழங்கி, அவற்றை புவியின் பல்வேறு இடங்களில் விதைத்தவர்களின் மாண்பும், மானுடப் பார்வையும் ஒருபோதும் புதைக்கப்படுவதில்லை.

 

அது 1841. பிறந்து ஒன்பதே வாரங்களில் சிறுமி எலிசபெத் ராட்மேன் (Elizabeth Rodman) தன் தாயை இழந்தாள். செல்வச் செழிப்பான டச்சுக் குடும்பத்தைச் சேர்ந்த அவளின் தந்தை ஜான் ராட்மேன் (John Rodman) ஒரு கப்பல் வணிகர். தந்தையும் மகளும் நியூயார்க்கின் புரூக்ளினில் வசித்தார்கள். கப்பல் உரிமையாளராக இருந்த அவர் பெரும் செல்வத்தைச் சம்பாதித்திருந்தார். அந்தக் காலத்தில் கப்பல் வணிகம் மிகவும் லாபகரமான தொழிலாக இருந்தது.

 

எலிசபெத் சிறுவயதில் வசதியான வாழ்க்கை வாழ்ந்தார். 1860ஆம் ஆண்டு அவரது தந்தை நியூ ஜெர்சி மாநிலத்தின் பெட்மின்ஸ்டரில் ஒரு பெரிய நிலப்பகுதியையும் வாங்கினார். திருமணம் ஆகும் வரை எலிசபெத் தனது இளமைக் காலத்தின் பெரும்பகுதியை அங்கேயே கழித்தார். தாயை இழந்த தன் செல்லமகளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்வதில் ஜான் தனது அக்கறையைச் செலுத்தினார். கல்விக்காக எலிசபெத் பள்ளியில் சேர அனுமதிக்கப்படவில்லை. வீட்டிலேயே அவருக்கான அனைத்துக் கல்வி வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டன.

graphic Elizabeth Rodman
 புத்தகங்கள் படிப்பதிலும், கிறித்துவ போதனைகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் எலிசபெத். வாரத்தின் ஓய்வுநாளில் தேவாலயம் செல்வது, அங்கே இசைக்குழுவில் பங்கேற்று, பாடல்கள் பாடுவது, ஆராதனை முடிந்தபிறகு, தேவாலயத்துக்கு வரும் சிறுவர்களுக்காக ஓய்வு நாள் வகுப்புகள் (Sunday classes) எடுப்பது போன்ற இறைச்செயல்பாடுகள் மெல்ல அவரை ஆட்கொள்ளத் தொடங்கின. அந்த ஆளுகைக்குள் மேலும் தீவிரமாய் தன்னையே கரைத்துக்கொள்ளும்படி அவரை மேலும் உந்தித் தள்ளியது ஒரு சந்திப்பு.

 

1838-ல் அமெரிக்காவின் பழமையான டச்சுக் குடும்பங்களில் ஒன்றான வான் வூர்ஹீஸ் என்கிற செல்வந்த விவசாயக் குடும்பத்தில் 11-ஆவது பிள்ளையாகப் பிறந்தான் சிறுவன் ரால்ஃப் வூர்ஹீஸ் (Ralph Voorhees). ஆனால் எலிசபெத் போலல்லாமல், உள்ளூரின் பொதுப்பள்ளி ஒன்றில் கல்வி கற்றான். ரால்ஃபுக்கு இசை ஆர்வம் அதிகம். தேவாலயத்தின் இசைக்குழுவில் இசைக்கலைஞராகச் சேர்ந்தார் வூர்ஹீஸ். அங்கே எலிசபெத்தைச் சந்தித்தார். இசைக்குழுப் பாடல்கள் பயிற்சியின் நிமித்தம் அவர்கள் இருவரும் அதிகம் பேசிக்கொள்ளவும் அருகருகே இருக்கவும் வாய்ப்புகள் கிடைத்தன.

graphic Ralph Voorhees
 அன்பு, எளிமை, சக மானுட நேசிப்பு என ஆராதனையில் ஒலித்த இயேசுவின் சுவிஷேஷங்களும், அதற்கு ஒத்திசைவாய் செவிவழி இதயத்துக்குள் நுழைந்த தேவ கீதங்களும் இருவரின் உள்ளத்துக்குள்ளும் அன்பின் ஆயிரம் ஊற்றுகளைப் பெருக்கெடுக்கச் செய்திருக்காதா என்ன?

 

‘வெறுமையான பாத்திரம் நான்,

வெறுத்துத் தள்ளாமலே

நிரம்பி வழியும் பாத்திரமாய்

நீடிக்கச் செய்திடுமே’ எனப் பரஸ்பரம் இதயத்துக்குள் பொங்கி எழுந்த கீதங்களை எத்தனை நாட்களுக்குத்தான் உள்ளுக்குள்ளேயே பாடிப் பாடி உடல்கூசுவது? விளைவு, இருவர் உள்ளத்திலும் காதலாக உதித்தது கருணையின் மைந்தன்  இயேசுவின் முகம்.

 

போதாக்குறைக்கு பெட்மின்ஸ்டர் மக்களிடையே இந்த இருவர் உறவு குறித்து எழுந்துவிட்ட அலருக்கு அத்தனையையும் மலர்த்திவிடும் அசகாய சூரத்தனம் இருந்துவிட, இருவரும் தங்கள் குடும்பத்தினரிடம் விஷயத்தைச் சொன்னார்கள்.  எல்லோருக்கும் சம்மதம். பிறகென்ன!  இருவரின் இரவுகளையும் எதிர்காலம் பற்றிய கனவுகள் கையில் எடுத்துக்கொண்டன.

 

அது 1864-ன் ஒரு இரவு. கற்பனைகளின் வண்ண வண்ணக் காட்சிகள் கண்களைச் சூழ, இதயம் நிறைந்து ததும்புபவராய்ப் படுக்கைக்குச் சென்றார் ரால்ஃப் வூர்ஹீஸ். மறுநாள் இருள்விலகாத விடியலில்தான் அவர் கண் விழித்தார். முதலில் ஒரு கண்ணைச் சூழ்ந்த இருள், சிகிச்சைக்குப் பிறகு, இரு கண்ணையும் ஆக்கிரமித்துக்கொண்டது.

 

ரால்ஃப் இனி உலகத்தைப் பார்க்க மாட்டார். எந்தக் கண்களில் அன்பின் ஜீவ ஊற்றுப் பெருகிப் பெருகித் தன்னை மூழ்கடித்தபடி இருந்ததோ, அது இப்போது வறண்டுவிட்டது என்று நினைத்த மாத்திரத்தில் எலிசபெத் கலங்கினார். தன் தந்தை ஜானிடம் விஷயத்தைச் சொன்னார்.

 

பிறவி முழுக்க இனி இந்த உலகத்தைப் பார்க்காமலேயே வாழப்போகிற ஒரு முழுக் குருடனுக்குத் தன் மகளைத் தருவதில் அவருக்குத் துளி விருப்பமில்லை. ஜான் எலிசபெத்தின் விருப்பத்தைக் கடுமையாக எதிர்த்தார். நிசப்தமும் நீடிய பொறுமையுமாய் அதனை எதிர்கொண்டார் எலிசபெத்.

 

ஒன்றா, இரண்டா! ஆண்டுகள் 23 உருண்டோடி, 1887-ல் தன் தந்தை ஜான் ராட்மேன் இறப்புவரை காத்திருந்த எலிசபெத், ரால்ஃப் வூர்ஹீஸைக் கரம் பிடித்தார். அப்போது எலிசபெத்துக்கு வயது 45. மிகவும் நெகிழ்வான குடும்ப உறவைக் கொண்ட அமெரிக்க நிலத்தில் இது நிகழ்ந்திருப்பதன் வியப்பு மேலிடும் அதேசமயம், ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்கிற விழுமியத்தைச் சுமந்த நமது நிலத்தில் இது இன்றைக்குக்கூடச் சாத்தியமில்லை என்கிற உண்மை நம்மைச் சுடத்தான் செய்கிறது.

 

அடுத்த 20 ஆண்டுகள், அதாவது ரால்ஃப் வூர்ஹீஸ் இறக்கும்வரை சில நூறு குடும்பங்கள் கொண்ட ஓர் அமைதியான ஊரில் இருவரும் வாழ்ந்தார்கள். ரால்ஃப் தனது பார்வையின்மையை எண்ணியெண்ணிக் கலங்கிக்கொண்டிருக்காமல், தன்னால் இயன்றவரை தனது நடவடிக்கைகளைத் தற்சார்பு கொண்டதாக அமைத்துக்கொண்டார். அன்பும் அக்கறையோடும் அவரைக் கவனித்துக்கொண்டார் எலிசபெத்.

 

தொடக்கத்தில் மிகமிக எளிமையான வாழ்க்கையே அவர்களுக்கு வாய்த்தது என்றாலும், மரபுரிமையாக எலிசபெத்துக்குக் கிடைத்த தந்தையின் சொத்தும், தன்னுடைய சித்தப்பாவின் மரணத்திற்குப் பிறகு தனக்குக் கிடைத்த மிகப்பெரிய செல்வமும் அவர்களைப் பெரும் பணக்காரர்கள் ஆக்கியது. ஆனாலும் நிதானம் தவறாத இருவரும் தங்கள் எளிமையான வாழ்க்கையையே தொடர விரும்பினர். எலிசபெத் தன் கணவனின் முழு ஒத்துழைப்போடு, தனது செல்வத்தைக் கையாண்டார். இருவரும் இணைந்து, தங்களுடைய செல்வத்தின் பெரும்பகுதியை கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள், பெண்களின் கல்வி, தேவாலயங்கள், மதப் பணிகள், சமூக நல அமைப்புகள் ஆகியவற்றுக்கு வழங்கத் தொடங்கினர்.

 

அவர்கள் இருவருமே பட்டதாரிகள் அல்லர். ஆயினும், கல்வி மனிதர்களின் வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்டது என்பதை அவர்கள் ஆழமாக நம்பினர். குறிப்பாக பொருளாதார வசதி குறைவாக இருந்த சிறிய கல்லூரிகளுக்கு உதவுவதைத் தங்கள் முன்னுரிமையாகக் கொண்டனர்.

 

கொடுத்துக் கொடுத்துத் தழைத்த அவர்களின் தாராளக் கரங்கள் இந்தியாவரை நீண்டன. வூர்ஹீஸ் தம்பதி அமெரிக்க சீர்திருத்த கிறித்தவ சபையைச் (Reform Church of America) சேர்ந்தவர்கள். மும்பையில் அந்த அமைப்பின் பெயரால் இயங்கிக்கொண்டிருந்த கிறித்தவ மிஷனரிகள் இணைந்து, பார்வையற்றோருக்கான பள்ளி ஒன்றைத் தொடங்கினர். வூர்ஹீஸ் பார்வையற்றோர் பள்ளி (Voorhees School for the Blind) என்று அழைக்கப்பட்ட அந்தப் பள்ளி சிலகாலம் மட்டுமே இயங்கியது. ஆனால், அவர்கள் பெயரை இன்றளவும் நிலைநிறுத்துகிற ஒரு கல்வி நிறுவனமாய் நூற்றாண்டு கடந்தும் நிலைத்து நிற்கிறது வேலூரிலுள்ள வூரிசு கல்லூரி (Voorhees College).

 

அறியாமையின் காரணமாய் வறுமையின் பிடியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தார்கள் வேலூர் மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள். அவர்களுக்குக் கல்வி வழங்கி, அவர்களின் சமூக நிலையை உயர்த்திட பாடுபட்டது அமெரிக்க சீர்திருத்த சபையோடு (RCA) இணைந்து பணியாற்றிய அமெரிக்கன் ஆற்காடு மிஷன் என்கிற அமைப்பு.

 

அந்த அமைப்பின் முயற்சியால் 1898-ல் அமெரிக்கன் ஆற்காடு மிஷன் பள்ளி என்ற பெயரில் நடுநிலைப் பள்ளி தொடங்கப்பட்டது. 1905-ல் வூர்ஹீஸ் தம்பதி வழங்கிய 25000 அமெரிக்க டாலர்கள் நன்கொடையால் சில முதன்மைக் கட்டடங்கள் கட்டப்பட்டு, அந்தப் பள்ளி கல்லூரியாக தரம் உயர்ந்தது. அதன் நினைவாகவே, அந்தக் கல்லூரிக்கு வூர்ஹீஸ் தம்பதியினரின் பெயர் வைக்கப்பட்டு, இப்போது அது வூரிசு கல்லூரி (Voorhees College) என்று அழைக்கப்படுகிறது.

 

1915-ல் அதாவது ரால்ஃப் வூ்ஹீஸ் அவர்களின் மறைவுக்குப் (1907) பிறகு, எலிசபெத் வூர்ஹீஸால் 10000 அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக வழங்கப்பட்டு, கல்லூரிக்கு மேலும் சில உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. சிறிய பள்ளியாகத் தொடங்கிய அந்த நிறுவனம், பல்வேறு கட்ட வளர்ச்சிகளுக்குப் பிறகு, பட்டமேற்படிப்பு, பல்வேறு ஆய்வுப் படிப்புகளை உள்ளடக்கிய வேலூர் மாவட்டத்தின் புகழ்பெற்ற கல்லூரியாக உயர்ந்துள்ளது.

graphic Dr. Rathakrishnan
இந்து மதம் குறித்தும், அதன் தத்துவப் பண்பாட்டு விழுமியங்கள் குறித்தும் மிக ஆழ்ந்த புலமைகொண்ட நமது மேனாள் குடியரசுத் தலைவர் மறைந்த திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் பல புகழ்பெற்ற இந்தியக் குடிமைப்பணி அலுவலர்கள், காவல்த்துறை உயர் அலுவலர்கள் இந்தக் கல்லூரியைச் சேர்ந்தவர்கள்.

 

ரால்ஃப் வூர்ஹீஸ், எலிசபெத் வூர்ஹீஸ் குறித்து முதன்முதலில் எனக்குச் சொன்னவர் மூத்த பார்வையற்றவர் ஐயா திருவண்ணாமலை கணேசன் அவர்கள். வூர்ஹீஸ் தம்பதிதான் வேலூரிலுள்ள வூரிசு கல்லூரி அமையக் காரணமானவர்கள் என்ற சிறுபுள்ளியை எனக்குத் தொட்டுக்காட்டி, இது குறித்து என்னை இணையத்தில் தேடித் தகவல்களைத் தொகுக்கும்படிக்கேட்டுக்கொண்டார்.

 

ஒருவிதக் கரார் தொனியுடனேயே எப்போதும் பேசும் ஐயா திரு. கணேசன் அவர்களோடான ஒவ்வொரு முறை உரையாடல்களும் பார்வையற்றோர் குறித்த ஏதேனும் ஒரு புதிய தகவலைக் கொண்டதாகவே இருக்கும். உரையாடல்கள் முழுக்க, பார்வையற்றோர்கள் கொள்ள வேண்டிய எழுச்சி குறித்தும், தேவைப்படுகிற அடிப்படை சமூக மாற்றம் பற்றியும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியபடியேதான் இருப்பார் ஐயா கணேசன். அப்படித்தான் அன்றைய உரையாடலிலும் என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்.

 

“ஏன் தம்பி! வூரிசு கல்லூரி அமையறதுக்குக் காரணமா இருந்தவர் ரால்ஃப் என்கிற பார்வையற்றவர். ஆனா இதுவரைக்கும் அந்தக் கல்லூரி எத்தனை பார்வையற்றவர்களுக்கு தங்கள் கல்லூரியில வேலைவாய்ப்பு வழங்கியிருக்கு?”

இந்தக் கேள்விக்கான விடை  எந்தத் தளத்திலும் கிடைக்கவில்லையே ஐயா!

***ப. சரவணமணிகண்டன் 

www.thodugai.in

கருத்துகள் (0):

Post a Comment

தளத்தின் மேலே செல்ல