நேரடியாக முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

அஞ்சலி: தினமும் கேட்கும் தேவராகம்

graphic: இந்தப் புகைப்படத்தில் தேவா அவர்கள் வெள்ளை நிற உடை அணிந்து, பின்னணியில் மங்கலான சாம்பல் மற்றும் மஞ்சள் கலந்த வண்ணங்களைக் கொண்ட திரைக்கு முன்னால் நின்று புன்னகைக்கிறார். அவரது நெற்றியில் மூன்று பட்டை விபூதியும் அதன் நடுவில் சிவப்பு நிற குங்குமமும் காணப்படுகின்றன. கருமையான தலைமுடியும் அடர்த்தியான மீசையும் கொண்டுள்ளார்.தேனிசைத் தென்றல் நம் இடம் விட்டு நீங்கி இன்றோடு ஒரு மாதம் ஆகிவிட்டது. இத்தனை தாமதமாகவா ஒரு அஞ்சலிக் கட்டுரை எழுதுவது என்று கேட்டால், அது அஞ்சலி மட்டுமில்லையே! வாழ்வின் ஒரு குறிப்பிட்ட பருவத்தைத் திரும்பிப் பார்க்கிற நினைவுகூரலும் ஆகிவிடுகிறது என்பதால்தான் இத்தனை தாமதம்.

 

வாசித்துச் சுவைப்பதற்குப் பாடப்புத்தகங்களும், சில விவிலியத் தொகுப்புகளுமே கையில் கிடைத்த பள்ளிப் பருவம் கொண்ட என்னைப் போன்ற பார்வையற்றவர்களின் ஒற்றைப் பொழுதுபோக்கு திரைப்படங்களும் அவற்றின் பாடல்கள் மட்டுமே. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியை அன்றைக்கு நாங்கள் அடைந்திருந்தால், எத்தனையெத்தனை நவீன இலக்கியங்களைப் படித்திருப்போம். நல்வழி, கொன்றை வேந்தன்களின் தொகுப்பாக இருந்த பாடப்புத்தகங்களைக் கடந்து எங்கள் மனம் அழகியல் என்று எதை வரித்துக்கொள்ள முடிந்தது? அன்றைய காலகட்டங்களில் வெளியான திரைப்படப் பாடல்களைத்தான்.

 

தவிர்த்தல் இன்றி, வடிகட்டல் இன்றி வெளியான எல்லாப் பாடல்களையும் கேட்கிற வாய்ப்பை 90-களின் நடுப்பகுதி வரைக்கும் இலங்கையின் கொழும்பு வர்த்தக சேவை எங்களுக்கு வழங்கிக்கொண்டே இருந்தது. இன்றைய பண்பலைகள் போல அல்ல அது. பாடல் இடம்பெற்ற திரைப்படம், பாடியவர்கள், எழுதியவர், இசையமைத்தவர் என ஒலிபரப்பப்படுகிற ஒவ்வொரு பாடலுக்கான விவரங்களை மிகத் துல்லியமாக வழங்கினார்கள்.

 

என்னுடைய மன நூலகத்தின் இசைச் சேகரத்துக்குக் கூடுதல் தீனி போட்டவர் என் அப்பா. சாலைகளைச் செம்மைப்படுத்தப் பயன்படும் சாலை உருளை வாகன (Road Roller) ஓட்டுநர் அவர். ஒவ்வொரு நாளும் அவருக்குக் கிடைக்கும் சொற்பக் கூலியின் மூன்றில் ஒரு பங்கைச் செலவிட்டு எனக்குப் புதுப்பட கேசட்டுகளை வாங்கி வந்துவிடுவார். அப்படி அவர் வாங்கி வராத நாட்களில், அவரை வீட்டுக்கு வெளியே நிறுத்தி, அழுது அடம்பிடித்து, புதுக் கேசட்டோடு வந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்துக்குக் கொண்டுவந்துவிடுவது என்னுடைய பொறுக்க இயலாத சேட்டைகளில் ஒன்று. இன்றைக்கும் என்னுள் 80-கள், 90-களின் இசை நினைவடுக்கில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்க அவரே முதல் காரணம்.

 

ஒவ்வொரு நாளும் புதுக் கேசட்டுகள். ஒவ்வொரு நாளும் புதுப்புதுப் பாடல்கள். அப்படித்தான் ஒரு கேசட்டின் வழியே தேவா எனக்கு அறிமுகமானார். ஒரு பக்கம் மனசுக்கேத்த மகாராசா, இன்னொரு பக்கத்தில் ஊருவிட்டு ஊருவந்து. அது ஒன்றாம் வகுப்பில் படித்த காலம். தேவா, இளையராஜா என்று அறிந்து வைத்திருந்தோமே தவிர, எவரையும் மனதுக்கு நெருக்கமானவர் என்றெல்லாம் வகைப்படுத்திக்கொள்ளவில்லை. ஆதித்தியனின் அமரனையும், சௌந்தரியனின் சேரன் பாண்டியனையும் ஒரே மாதிரித்தான் மனம் ரசித்து உள்வாங்கியது. உண்மையில் அப்படி வகைப்படுத்திக்கொள்ளாத வரையில்தான் பாடல்கள் சுகமாக இருந்தனவோ என்னவோ?

 

மனசுக்கேத்த மகாராசாவின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒருவிதமாக ஒலித்தது. அன்றைக்கு அப்படி உணரவில்லை, ஆனால், இன்று கேட்கையில், அவருக்கென்ற தனி முத்திரையுடன் அந்தப் பாடல்கள் இல்லை என அறிவு சொல்கிறது. ‘ஆத்து மேட்டு தோப்புக்குள்’ எம்எஸ் விஸ்வநாதன் ரகம் என்றால், ‘ஆறெங்கும் தானுறங்க’, ‘கானக்கருங்குயிலே’ என்ற இளையராஜாவின் ரகம். ‘வானத்துல பறக்குது பார்’, ‘மஞ்சக் குளிக்கிற பிஞ்சுக் குருவிக்கு’ இவையெல்லாம் சந்திரபோஸ் பாணி.

 

இந்தப் படத்தில் என்னுடைய எப்போதைக்குமான தெரிவு, ‘முகம் ஒரு நிலா’ பாடல்தான். கொஞ்சம் சந்திரபோஸ், கொஞ்சம் டி. ராஜேந்தர், கொஞ்சமே கொஞ்சம் இளையராஜா எனக் கலந்துகட்டிக் கொடுத்த அந்தப் பாடல் என்னைக் கவர்ந்ததற்குக் காரணம், அதில் எஸ்பிபிக்கும் சித்ராவுக்கும் இடையே நடைபெறும் பாடல்வழி உரையாடல். பாட்டுக்கொரு தலைவன் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அழகிய நதியினில்’ பாடலின் சாயலில்தான் அவருடைய ‘முகம் ஒரு நிலா’, மரிக்கொளுந்து படத்தின் ‘கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு’ போன்ற பாடல்கள் அமைந்தன. அவர் தனக்கென்ற முத்திரையை மெதுவாக உள்ளிறக்கிய படம் வைகாசி பொறந்தாச்சு. இங்கே வைகாசி பொறந்தாச்சு திரைப்படம் மரிக்கொளுந்துவுக்கு முன்பு வெளியானது என்ற கொசுறுத் தகவலை வரலாற்றுக் காலக்கோட்டுப் பிழை நேராதிருக்க வேண்டி எழுதுகிறேன்.

 

வைகாசிப் பொறந்தாச்சு அட்டகாச வெற்றியைப் பெற தேவாவின் பாடல்கள் முக்கிய ஊக்கிகளாக அமைந்தன. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதத்தில் மக்களைக் கவர்ந்தன. அதிலும் ‘சின்னப்பொண்ணுதான் வெட்கப்படுது’ பாடலை முணுமுணுக்காத விடலைகளே அன்றைக்கு இல்லை. பாடல் ஒரு கோரஸோடு தொடங்கும். அந்தத் தொடக்கத்தில் அவர் வழங்கியிருக்கும் ‘டிகிடிகி டின்டின்டின் டின்டின்டின் டின்டின்டின்டின்’ என்கிற கிட்டார் இசை, அதைத் தொடரும் புல்லாங்குழல் என மனதின் ஆழத்தில் போய் உட்கார்ந்து கொண்டது அந்தப் பாடல்.

 

இளையராஜா தன்னுடைய டூயட் பாடல்களில் பெரும்பாலும் எஸ்பிபி–ஜானகி, மனோ–சித்ரா என ஒரு திட்டம் வைத்துப் பயன்படுத்துவார். இந்த நிலையில், எஸ்பிபி–சித்ரா ஜோடியைப் பயன்படுத்திப் பல அற்புதமான பாடல்களைக் கொடுத்துத் தன் இசைக்குக் கூடுதல் தனித்துவ அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார் தேவா.

 

graphic: இந்தப் புகைப்படத்தில் தேவா அவர்கள், வெள்ளை நிற உடை அணிந்து, மர நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். இரு கைகளையும் ஒன்றோடொன்று கோத்தபடி முகத்துக்கு அருகில் வைத்துப் புன்னகைக்கிறார். அவரது நெற்றியில் மூன்று பட்டை விபூதியும் சிவப்பு நிற குங்குமமும் காணப்படுகின்றன. வலது கையில் கைக்கடிகாரமும் வண்ணக் கயிறுகளும் அணிந்துள்ளார். அவருக்கு முன்னால் ஹார்மோனியம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. பின்னணியில் வெளிர் நிறத் திரை காணப்படுகிறது.
வைகாசி பொறந்தாச்சு ‘நீலக்குயிலே! நீலக்குயிலே’, கிழக்குக்கரை ‘‘எனக்கெனப் பிறந்தவள், றெக்க கட்டிப் பறந்தவள்’, அண்ணாமலை, கட்டபொம்மன், வேடன், புருஷலட்சணம் என்னாசை மச்சான் ஆகிய திரைப்படங்களின் அத்தனை டூயட்களிலும் எஸ்பிபி–சித்ரா ஜோடி இடம்பெற்றது. மார்க்கண்டேயனான எஸ்பிபியை, தான் என்று நினைத்துக்கொண்டு பாடலை முணுமுணுக்கும் ரசிகனுக்கு, சித்ராவின் குரல் தன் சகியின் வயதையும் குறைத்துக் காட்டியிருக்குமோ என்னவோ! தேவாவின் வழியே இந்த ஜோடியை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள்.

 

அதற்காக எஸ்பிபி–ஜானகி ஜோடியை முழுவதும் கைவிட்டுவிடவில்லை அவர். வசந்தகாலப் பறவைகள் ‘செம்பருத்தி செம்பருத்தி, தைமாசி பங்குனி போயி’, சூரியன் ‘பதினெட்டு வயது’, சந்தைக்கு வந்த கிளி ‘எருக்கஞ்செடியோரம்’, ராஜதுரை ‘ஊசிமலக்காடு’, குறிப்பிட்டுச் சொல்லும்படி, தெற்குத் தெரு மச்சான் ‘தென்னமரத் தோப்புக்குள்ளே’, திருமூர்த்தி ‘செங்குருவி செங்குருவி’ ஆகியவை எஸ்பிபி–ஜானகி ஜோடிப் பாடல்களாய் சக்கைபோடு போட்டவை.

 

‘தேவா தன் பாடல்களில் கலகலப்பான உரையாடல்களுக்கு எஸ்பிபி சித்ரா, கவனப்படுத்த வேண்டிய தருணங்களில் எஸ்பிபி ஜானகி என மாறி மாறிப் பயன்படுத்தினாலும், அவ்வப்போது கவித்துவமான உரையாடல்களை அவர் எஸ்பிபி–சுனந்தாவைக் கொண்டு நிகழ்த்தினார். சந்தைக்கு வந்த கிளி ‘காலையிலும் மாலையிலும்’ ஒருவித இதம் என்றால், மகாப்பிரபுவின் ‘சொல்லவா சொல்லவா’ அடடா உன்னதம். பாடலுக்கு இடையே அவர் கோர்த்திருக்கும் இசையின் விளைபயனாய் தன்னை அறியாமலேயே கைகள் மார்புக்கூட்டில் தாளமிட்டுக்கொள்ளும் மாயம் நிகழாதவர் எவர்?

 

1992-ல் ரோஜா வெளியாகி, ரஹ்மான் நமக்கெல்லாம் மிகத் தீவிரமாக மேற்கத்திய இசையை அறிமுகம் செய்துகொண்டிருந்த சமயம் அது. ‘சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு, ஊர்வசி, ஊர்வசி, பேட்ட ராப்’ எனக் கூடி ஆடிக் குதியாட்டம் போட்ட இளவட்டங்கள் களைத்து அடங்கிய பொழுதுகளில் அவர்களோடு நெருக்கமாய் அமர்ந்து பேசிய பாடல்கள் மூன்று. ஒன்று, காதலன் படத்தின் ‘என்னவளே அடி என்னவளே’. இரண்டு தேவா படத்தின் ‘ஒரு கடிதம் எழுதினேன்’. மூன்று பிரியங்கா படத்தில் ‘வனக்குயிலே குயில்தரும் இசையே’. ஒரு கடிதம் எழுதினேன் பாடல்தான் மனதுக்குச் சுகமாய் இருந்ததென்று ராஜாவும் ரஹ்மானுமே சொல்லிவிடக் கூடும்.

 

இன்றைய தமிழக முதல்வரும், அன்றைய நடிகருமான திரு. விஜய் அவர்களின் எழுச்சியில் முக்கியப் பங்கு வகித்தது தேவாவின் இசை. விஜய்க்கு முதன்முதலில் பாட வாய்ப்பளித்தவர் தேவா. ரசிகன் படத்தின் ‘பம்பாய் சிட்டி சுக்காரொட்டி’ என்ற பாடலைப் பாடகி சித்ராவோடு இணைந்து பாடினார் நடிகர் விஜய். அதே படத்தில் இடம்பெற்ற ‘எல்ஓவிஈ லவ்வு மாமா’ பாடலை எஸ்பிபியும் விஜய் அவர்களின் அம்மா ஷோபாவும் இணைந்து பாடினார்கள். இரண்டு பாடல்களுமே பிரபலமாகின.

 

விஷ்ணு படத்தின் ‘தொட்டபெட்டா ரோட்டு மேல’ பாடலை விஜய் தனது அம்மாவோடு இணைந்து பாடியிருப்பார். ஏற்கெனவே ராஜா என்கிற இந்தித் திரைப்படத்தில் வெளியாகிப் புகழ்பெற்றிருந்த ‘அக்கியமிலா’ என்ற பாடலைத் தமிழ் ரசிகர்களுக்காக மீட்டுருவாக்கம் செய்து, அதில் வெற்றியும் பெற்றார் தேவா. அதிகம் வரவேற்பைப் பெறாத திரைப்படம் விஜயின் காலமெல்லாம் காத்திருப்பேன். ஆனால், பாடல்கள் இன்று கேட்டாலும் மனதுக்கு சுகம் தருபவை. ‘நில்லடி என்றது உள்மனது’ எஸ்பிபியும் சித்ராவும் ஒருவரையொருவர் தாளாட்டி, நம்மையும் தாலாட்டுகிற பாடல்.

 

வசந்தவாசல், நேருக்கு நேர், பிரியமுடன், நினைத்தேன் வந்தாய், நெஞ்சினிலே, மின்சாரக் கண்ணா, குஷி என விஜயின் பல திரைப்படங்களுக்குத் தேவா இசையமைத்திருந்தாலும், என்றைக்கும் மனதுக்குள் திகில் கிளப்பிப் பின் தேனிசை பரப்பும் படம் பிரியமுடன். சொல்லப்போனால், நடிகர் விஜயின் திரை வரலாற்றில் அவரை ஒரு நடிகனாக முன் நிறுத்திய படங்கள் பிரியமுடன் மற்றும் பிரியமானவளே மட்டுமே.

 

பிரியமுடன் படத்தில் குப்த் என்ற இந்தித் திரைப்படத்தின் பிரபல இசைக்கலவை ஒன்றை பயன்படுத்தியிருப்பார். காதலுக்காகக் கொலையும் செய்யத் துணியும் ஒரு பொஸஸிவ் நாயகனுக்கு அந்த இசைத்தெரிவு மிகப் பொருத்தமாகத்தான் இருந்தது. தனக்குச் சமமான எதிர்பால் தோழமையைத் தேடித் திரிந்ததும், அந்தத் தேடலில் கிடைத்த திரவியத்திடம் தன்னைத் திறந்துகாட்டிவிடத் துடித்ததுமே எங்கள் பதின் பருவத்தில் நாங்கள் உண்ட பச்சையங்கள். அந்த ஒளிச்சேர்க்கையில், உரமாய், காற்றாய், உறைக்கின்ற வெயிலாய் உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது ‘பாரதிக்கு கண்ணம்மா, நீ எனக்கு உயிரம்மா’ பாடல். கூடவே “விளக்கை மூடும் சிமிழாய் நான் உன்னை மூடுகிறேன், உன் மேல் விழுந்த வெயிலாய் நான் சருகாய் மாறுகிறேன்’ என மிரட்டலும் மென்முத்தங்களுமாய் உள்ளுக்குள் இறங்கிய பழனி பாரதி வரிகளைச் சுமந்த ‘பூஜா வா பூஜாவா’ பாடலை மனதுக்குள் பச்சை குத்திக்கொண்டோம்.

 

இயக்குநர் செல்வாவின் இயக்கத்தில் பாலு பாரதி இசையில் தலைவாசல் திரைப்படத்தில் கானாப் பாடல்கள் அறிமுகமாகிவிட்டன என்றாலும், இந்து திரைப்படத்தின் மூலம் அதனைப் பட்டிதொட்டியெல்லாம் கொண்டுபோய்ச் சேர்த்தவர் தேவா. ராஜாவின் வீராவுக்கும், ரஹ்மானின் காதலனுக்கும் சவால்விட்டவை இந்து திரைப்படத்தின் அத்தனை பாடல்களும்.

 

உண்மையில் கானா தேவாவின் அடையாளமாக எல்லோராலும் பேசப்படுகிறது. ஆனால், தேவாவிடம் எனக்குப் பிடித்தது தேனிசைதான். சில கானாப் பாடல்கள் மட்டுமே என் மனதுக்கு நெருக்கமானவை. காரணம், அந்த கானாப் பாடல்களில் போகிற போக்கில் சொல்லியடித்த சில வாழ்க்கைத் தத்துவங்கள், சமூக விமர்சனங்கள்.

 

நானறிந்து தேவா முதன்முதலில் பாடிய கானாப் பாடல், செந்தூரப் பாண்டி படத்தில் இடம்பெற்ற ‘ஆடாதடா ஆடாதடா மனிதா’. அரபு பாணியைக் கானாவோடு கலந்து சோகமழை பொழிந்திருப்பார் தேவா. அதிலும் சில சமூக விமர்சனங்கள் உண்டு என்றாலும்,

‘வாழ்க்கை ஒரு சீட்டாட்டம்,

ராணி பாடு கொண்டாட்டம்,

ஜெயிச்ச கையில சேந்துக்குவா ரம்மி,

பாவம் இளிச்சவாயன் ஆம்பலதான் டம்மி.’

பாடல் உங்களுக்கு ஞாபகம் வருகிறதா?

 

‘அன்னாடம் வீட்டுக்குள்ள குவாட்டருதான் அடிக்கணும்,

ஆம்பலைங்க சிங்கமுணு ஐநாசபையும் பேசணும்.’

இதையும் கண்டுபிடித்திருப்பீர்கள். கண் எதிரே தோன்றினாள் படத்தில் எல்லோரும் ‘சலோமியாவை விரும்ப’, எனக்கோ ‘கொத்தவால்சாவடி’தான் மிகவும் பிடித்திருந்தது. சென்னையை எனக்கு மானசீகமாக அறிமுகம் செய்த பாடல் அது.

 

graphic: தேவா அவர்கள் வெள்ளை நிறச் சட்டை அணிந்து, ஒரு கையில் மைக்ரோஃபோனைப் பிடித்தவாறு, மற்றொரு கையின் ஆள்காட்டி விரலை உயர்த்திப் பேசிக் கொண்டிருப்பது போல் அமர்ந்துள்ளார். அவரது நெற்றியில் விபூதி மற்றும் குங்குமம் இடப்பட்டுள்ளது. படத்தின் பின்னணியில் வெளிர் நீல நிறத்தில் ஆங்கிலத்தில் "HAPPY BIRTHDAY" என்றும், படத்தின் கீழே பெரிய எழுத்துக்களில் "THENISAI THENDRAL DEVA" என்றும் எழுதப்பட்டுள்ளது.

பாஷா திரைப்படத்துக்குப் பிறகு, தேவாவின் அடுத்த காலகட்டம் தொடங்கியது. அது என்னைப் போன்ற இசைப்பிரியர்கள் மெல்ல அவரிடமிருந்து விலகவும் வழி செய்தது. அதற்காக உடனே விலகிவிட முடியுமா என்ன? பாஷாவில் ரஜினியின் ஆக்ரோஷமான நடிப்புக்குக் கூடுதல் அழகு சேர்த்தது தேவாவின் இசை. அந்தப் படத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாடல் பிடிக்கும் என்றாலும், எனக்கு ‘அழகு’ பாடல்தான் என்றைக்குமான விருப்பத் தெரிவு. காரணம், எஸ்பிபி–சித்ரா ஜோடி, வைரமுத்து வரிகள், அந்த வரிகளை மெல்ல இதயம் நுழைத்த தேவா அவர்களின் இசை. ஷோலே படத்தில் இடம்பெற்ற தில்பர் பாடலின் ராகத்தைப் பல்லவியில் வைத்து, சரணத்தில் அவர் ஆடியிருப்பதெல்லாம் மயிலிறகுச் சிலம்பாட்டம்.

 

பிறகு வந்த ஆசை, தேவாவை மட்டுமல்ல, ஏதேனும் ஒரு வெளிச்சப் புள்ளி தென்பட்டுவிடாதா என ஏங்கிக்கொண்டிருந்த ஆசை நாயகன் அஜித்தையும் உச்சத்தில் கொண்டுபோய் வைத்தது. ஆனால், இந்தத் திரைப்படத்திலிருந்துதான் தன் வழக்கமான எஸ்பிபி–சித்ரா ஜோடியைக் கைவிடத் தொடங்கினார் தேவா. ஹரிஹரன், உண்ணி கிருஷ்ணன் மெல்ல வந்துசேர, தேவாவின் இசையை அடுத்த கட்ட மெருகேற்றலுக்கு உந்திச் சென்ற பன்னீர் தெளித்த பனிக்கூழ் தேன் குரலழகி அனுராதா ஸ்ரீராமும் இணைந்துகொண்டார்.

 

அதற்காக மொத்தமாகவே எஸ்பிபி–சித்ரா ஜோடியைக் கைவிட்டுவிடவில்லை அவர். என்னைப் போன்ற ரசிகர்களும் அவர் மனதில் வந்துபோவோம் இல்லையா? அதனால், வான்மதி படத்தில் ‘வைகறையில் வந்ததென்ன வான்மதி’, கோகுலத்தில் சீதை ‘கோகுலத்துக் கண்ணா கண்ணா!’, நேசம் ‘ஓரங்க நாதா’, நினைத்தேன் வந்தாய் ‘உனைநினைத்து நான் என்னை மறப்பது’ என அடிக்கடி அவர்களையும் அழைத்தபடியேதான் இருந்தார்.

 

எஸ்பிபி–சித்ரா ஜோடிக்கான பாடல்களைக் குறைத்தாரே தவிர, எஸ்பிபியையும் சித்ராவையும் வேறு வேறு இணைவுகளில் பயன்படுத்திப் பல இதயத்துக்கு நெருக்கமான மெட்டுகளைத் தந்தார். ஆசை ‘ஒருமுறை எந்தன் நெஞ்சில்’, காலமெல்லாம் காதல் வாழ்க ‘வெண்ணிலவே வெண்ணிலவே’, நினைத்தேன் வந்தாய் ‘பொட்டு வைத்து பூமுடிக்கும் நிலா’ என எஸ்பிபி சொர்ணலதா ஜோடியை இணைத்து, நம்மைத் தக்கஜும் தக்கஜும் போடவைத்தார். எஸ்பிபியோடு சொர்ணலதா மட்டும் இல்லை. சந்திப்போமா படத்தில் ‘ராதா ராதா அனுராதா’ பாடலில் எஸ்பிபியோடு டூயட் பாடி, நம்மைக் கிறங்கடித்தார் சுஜாதா. அந்தக் கிறங்கலின் கின்னர வித்தை தேவாவினுடையது.

 

பாடகி சித்ராவையும் அப்படித்தான். தேவாவின் இசையில் உண்ணிக் கிருஷ்ணனோடு இணைந்து, ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ (காதல்கோட்டை), மறைந்த பாடகர் கிருஷ்ணராஜோடு இணைந்து, ‘இதயம் இதயம் இணைகிறதே’ (விடுகதை) என நினைக்க நினைக்கப் பட்டியல் நீளும். மேற்சொன்ன இரண்டு பாடல்களுமே மிகமிக மெதுவான ஆனால், ஏன் பாடல் முடிந்தது எனக் கேட்கத் தூண்டுபவை.

 

நுங்கின் குளிர்ச்சியைத் தேனின் தித்திப்போடு பரிமாறத் தெரிந்தவர் தேவா. நம்பிக்கையில்லையென்றால், பாஞ்சாலங்குறிச்சி படத்தில் இடம்பெற்ற ‘உன் உதட்டோர சிரிப்பே’ பாடலைக் கேட்டுப் பாருங்கள். ‘மீனமா அனுராதாவா’ இது என ஆடிப்போய்விடுவீர்கள். ‘மலரே மௌனமா’ என நம்மை அகத்தின் ஆழத்துக்கு வித்யாசாகர் கூட்டிச் சென்ற அதே பாதையில், இனியவளே படத்தின் ‘மலரோடு பிறந்தவளா?’ பாடல் மூலம் மறுமுறை அழைத்துச் சென்றவர் தேவா.

 

நடிகர் விஜய் மட்டுமல்ல, நடிகர் அஜித்குமாரின் பல ஆரம்பகாலப் படங்களில் தேவாவின் இசை தனித்துவமாய் ஒலித்தது. ‘நலம் நலமறிய ஆவல்’ (காதல்கோட்டை), ‘ஏப்ரல் மாதத்தில்’ (வாலி), ‘ஓ நெஞ்சே நெஞ்சே’ (முகவரி) என படத்துக்குப் படம் அஜித்தின் புகழ் ஏறிக்கொண்டே போக தேவாவின் இசை கைகொடுத்தது.

 

நாயக பாவத்துக்கு எஸ்பிபிக்கு மாற்றாய் ஹரிஹரனைப் பயன்படுத்தினார் என்றாலும், அதற்கேற்ற தகவமைதல்களைத் தன் மெட்டுகளில் திறமையோடு கையாண்டார் தேவா. ‘கொஞ்சநாள் பொரு தலைவா’ (ஆசை) தொடங்கி, ‘காஞ்சிப் பட்டுச் சேலைகட்டி’ (ரெட்டைஜடை வயசு), ‘ஓ சோனா சோனா’ (வாலி), ‘நாளைக் காலை நேரில் வருவாளா’ (உன்னைத் தேடி) என இன்னும் இன்னும் ஹரிஹரனை உச்சத்துக்குக் கொண்டுபோனது தேவாவின் இசை.

 

நாயகனின் காதல் கசிந்துருகல்களுக்கு தேவா ஹரிஹரனை அதிகம் பயன்படுத்தினார். அத்தகைய பாடல்கள்தான் பொதுவெளியில் இப்போது அதிகம் பேசப்படுகின்றன. ஆனால், நாயகியின் தாப மோக ராகங்கள் என்று யோசித்தால், அங்கேயும் அணிவகுத்து நிற்கின்றன தேவாவின் பாடல்கள்.

 

‘ஆசை நாயகனே! சௌக்கியமா?’ இன்றைய தம்பி தங்கைகள் இந்தப் பாடலைக் கேட்டுப் பார்க்க வேண்டும். கேட்டால், நீங்கள் உங்கள் இசை ரசனையை அனிருத், அப்யங்கர் என்பதிலிருந்து தேவா ராஜா எனத் திருப்பிக்கொள்வீர்கள். ‘அன்பே!’ என மூச்சுக்காற்று முட்ட முட்ட ஓடிவந்து தோள்கட்டிக் கொள்கிற தேவதையைச் சித்ராவின் மூலம் மனக்கண்முன் நிறுத்தியது தேவாவின் இசை.

 

பாஞ்சாலங்குறிச்சி படத்தில் இரண்டு விதமான நாயகி பாவப் பாடல்கள் உண்டு. ஒன்று ‘ஆத்தோரம் தோப்புக்குள்ள’ கிராமிய மனம் கமழ சொர்ணலதா பாடியிருப்பார். பாடல் இசையை விஞ்சி நிற்கும் வைரமுத்துவின் வரிகளுக்குச் சொக்கிப் போகாதவர்கள் யார்? இன்னொரு பாடல், மேற்கத்திய இசையைக் கலந்துகட்டி சித்ராவை சிணுங்க வைத்திருப்பார். அந்தப் பாடல் ஏனோ பொதுவெளியில் அதிகம் பேசப்படவில்லை. முன்னதைவிட என் மனதை அதிகம் கவர்ந்த பாடல் இது.

‘சின்னச் சின்னப் பனித்துளி,

சிந்தி விழும் சோலைக்குள்ளே,

என்ன என்ன கேட்பாரோ? அணிலே சொல்லு அணிலே!

 

சித்திரைத் திருவிழா இருக்கும்வரை தேவாவின் ‘வாராறு வாராறு அழகர் வாராறு’ ஒலித்துக்கொண்டேதான் இருக்கும் என்கிற குரல்கள் அதிகம் கேட்கின்றன. இந்தக் குரல்கள் என்னுள் கிளர்த்தும் ஞாபகமெல்லாம், அதே படத்தில் இடம்பெற்ற ‘அழகா! கள்ளழகா’. கிட்டத்தட்ட இன்னொரு ‘ஆசை நாயகனே’ ஆனால், இதுவும் கேட்பதற்குப் பரம சுகத்தை அளித்த பாடல்.

 

இளையராஜா பயன்படுத்திய அதே பாணியில்தான் அருள்மொழியை தேவாவும் பயன்படுத்தியிருப்பார். அங்கே எப்படியோ, அப்படித்தான் இங்கும். பாடல்கள் அத்தனையும் ஹிட். ‘சிங்காரப் பெண்ணுக்கு’ (விஷ்ணு), ‘அத்திப்பட்டி அழகுக் குட்டி’ (வசந்தவாசல்). அதிகம் பேசப்பட்ட ‘தென்றலுக்குத் தெரியுமா?’ (பாரதி கண்ணம்மா).

 

தேவாவுக்கும் ராஜாவுக்கும் வேறுபாட்டை அறிய விரும்புபவர்கள், அவர்கள் இருவரும் பயன்படுத்தும் புல்லாங்குழல் ஓசையை கொஞ்சம் உற்றுக் கேட்டாலே போதும். ‘அடிப் பூங்குயிலே பூங்குயிலே’ ராஜாவின் புல்லாங்குழலுக்கும், ‘முத்துநகையே முழுநிலவே’ தேவாவின் புல்லாங்குழலுக்கும் பாரதூர வேறுபாடுகள் உண்டு. ஆனால், இரண்டும் இருவேறு திசைகளில் நம் உள்ளம் கரைத்தவை என்பதை எவரால் மறுக்க இயலும்?

 

ஒரு பத்தி முடிப்பதற்குள் ஒரு பத்துப் பாடல்கள் உள்ளத்தில் எழுந்து, “என்னை எழுது, என்னை எழுது” என்று கேட்பதே தேவாவின் பெருமையும் நிகழ்த்திய சாதனையும். உண்மையில், என் வயதொத்தவர்கள் ஊர்ப்புற தனியார் பேருந்துகளில் நடத்துநர்களாக, ஓட்டுநர்களாக இருக்கும்வரை, ஒவ்வொரு நாளும், குமுக்குகளாய், ஜிலுப்புகளாய் தேவா உயிர்த்தெழுந்தபடிதான் இருப்பார்.

***ப. சரவணமணிகண்டன்

www.thodugai.in

கருத்துகள் (0):

Post a Comment

தளத்தின் மேலே செல்ல