
பிறவியிலிருந்தே முழுப் பார்வையில்லை, முறையான
இசைப் பயிற்சி இல்லை, அன்றாட இசைப் பயிற்சி வகுப்புக்குச் சென்றுவருகிற சூழல்களோ,
அதற்கான நிலையான பொருளாதார வசதிகளோ இல்லை. இப்படி எண்ணற்ற இல்லைகளுக்கிடையே
சிறுவனுக்கு வாய்த்ததெல்லாம் சில நூறுகளில் கிடைத்த புலூட்டூத் ஸ்பீக்கர் மற்றும்
விலைமதிப்பில்லா அவர் அம்மாவின் ஆதரவு. வெறும் 600 கிராம் எடையுடன் பிறந்த
குழந்தையின் குட்டி மூளையை ஆதியிலிருந்தே ஆக்கிரமிக்கத் தொடங்கின அவர் அம்மா தன்
அன்றாடத்தில் கேட்டுச் சிலாகித்த 200-க்கும் மேற்பட்ட தமிழ்த்திரையிசைப் பாடல்கள்.
“13 வருடங்கள் காத்திருந்து பிறந்த ஒற்றைப்
பிள்ளை, என் குழந்தை எனக்குப் பொக்கிஷம்” எனத் தனக்கும் பிறருக்கும் சொல்லிச்
சொல்லியே நகர்ந்திருக்கிறது தாய் சித்ராவின் வாழ்க்கை. சிறுவனின் வயது ஏற்இயது,
வாழ்க்கையோ மாறவில்லை. குழந்தையோடே உண்டு, உறங்கி, வேறு எவராலும் விளங்கிக்கொள்ள
இயலாத அவன் சிரிப்பை, அழுகையை, குழைவை, குமட்டலை வாங்கியும் தாங்கியும் மட்டுமே
கழிக்கிற வாழ்க்கைப் பாடு அவருக்கு.
தன் மகனின் வயது ஒத்த சிறு குழந்தைகளின்
சைகைகளும், சேட்டைகளும் பார்த்துப் பூரிக்கிற தாயுள்ளம் தனக்குள் புழுங்காத
நாளில்லை. பிற குழந்தைகளோடு ஓடி, ஆடிச் சிரித்திருக்க வேண்டிய தன் செல்லமகன், தன்
அரவணைப்புக்குள்ளே அடங்கிக் கிடந்ததில் பீறிட்டு எழுந்த ஆற்ற்ஆமைகளை எவரிடம்
பகிர்வது? எவ்வளவு தன்னம்பிக்கையைக் கூட்டிப்
பிறர்முன் இறுமாப்பாய் பேசினாலும், மனதுக்குள் மட்டும் ஆறாத ரணம். “கடவுளே
எனக்கு மட்டும் ஏன் இப்படி?” என்ற கேள்வி உள்ளுக்குள் அவரை ஓயாமல் அரிக்க,
உறக்கமின்றிக் கழித்த இரவுகள்தான் எத்தனை எத்தனை.
அந்த வலிகளுக்கெல்லாம் ஒத்தடமாய், வாய்த்த
தனிமைக்கும் வெறுமைக்கும் வடிகாலாய் அமைந்தன தமிழ்த்திரையிசைப் பாடல்கள். ரசித்து
ரசித்துக் கேட்ட பாடல்களில் கொஞ்சமே கொஞ்சம் ரணங்களின் வலி குறைந்தது.
எல்லாவற்றையும் பழகத் தொடங்கியது மனம். இனி இவன்தான் நம் வாழ்க்கை, இவனைப் பேணி,
பெரிதுவப்பதே நம் பிறவியின் நோக்கம்” என்ற சமாதானத்தோடே சகஜமாகத் தொடங்கினார்
சர்வேஸின் அம்மா.
தாய் ஊட்டிய உணவோடே, உடன் ஒலித்த பாடல்கள்
சிறுவன் உள்ளுக்குள் மெல்ல இறங்கி, அவனை மீட்டத் தொடங்கின. பல அன்றாடங்களின் ஒரு
பொழுதில், ஒலித்த ‘நம் தந்த நம்த நம்தம்’
பாடலுக்கு சிறுவனிடமிருந்து விளக்க இயலா எதிர்வினை. இன்னும் ஒருமுறை கேட்க
வேண்டுமா, இணைந்து பாட விருப்பமா தெரியவில்லை. ஆனால், குழந்தையின் உள்ளும் புறமும்
ஏற்பட்ட சொல்ல முடியாத மாற்றம், தாய்க்குச் சூசகமாய் ஒன்றை உணர்த்தியது.
“என்பிள்ளைக்கிட்ட ஏதோ ஒன்னு இருக்கு”. அப்போதும் “இவன் பெரியவனாகி என்ன
செய்யப்போறான், கொன்றுடு, எங்கேயாவது விட்டுட்டு வந்துடு”. அன்றாடம்
எவரிடமிருந்தாவது இந்தச் சொல்லை எதிர்கொண்டபடியேதான் இருந்திருக்கிறார் சித்ரா.
அவனுக்கு மேலும் மேலும் பாடல்களை ஊட்டினார்.
உடன் அமர்ந்து தானும் பாடினார். சொற்கள் மறந்தபோதும், சுருதி விலகியபோதும்,
சிறுவனை வழிப்படுத்தி, நெறிப்படுத்திய அவன் முதல் குரு அவன் அம்மா சித்ரா.

“அம்மா அம்மா எந்தன் ஆருயிரே” கரோக்கியின்
பின்னணியில், “ஊம் பாடு” என்கிற குரு சித்ரா அவர்களின் வழிகாட்டலில் சிறுவனின்
குரல் சிறுசிறு காணொளிகளாய் வாட்ஸ் ஆப் குழுக்களில் வலம்வரத் தொடங்கியது. கேட்டவர்
கடந்துவிடும் குரலாக அது இல்லை. ‘அன்பச் சுமந்து சுமந்து, அல்லும் பகலும் நினைந்து,
இன்பம் சுமக்க வச்ச மாமா’ என்று சிறுவன் பாடியபோதெல்லாம் அந்த ‘மாமா’வை
‘அம்மா’என்றுதான் பலர் காதுகள் கேட்டன, அல்லது கேட்க விரும்பின.
தன் கணவரின் துணையோடு, இடுப்பைவிட்டு இறங்க
மறுத்த குழந்தையோடு எங்கெங்கோ சுற்றி வந்தார் சித்ரா. அவனுக்கு மாற்றுத்திறனாளி அடையாள
அட்டை வாங்க, அவனை சிறப்புப்பள்ளியில் சேர்க்க, கூடவே, எவரிடமோ எங்கோ கேள்விப்பட்ட
சிகிச்சைகளில் ஏதேனும் அதிசயம் நடந்துவிடாதா என ஏங்க இப்படித்தான் கழிகிறது பல
இந்தியத் தாய்மார்களின் எளிய அன்றாடங்கள்.
அப்படித் தேடித் தேடிக் கண்டடைந்த மேடைதான்
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் 11. தமிழகம் முழுக்கப்
போட்டியிட்ட ஆயிரக்கணக்கான குரல்களில் 20 குரல்களுக்கு வெளிச்சம் கிடைத்தது.
அவர்களுள் ஒருவனாய் எட்டு வயதுச் சிறுவன் சர்வேஸ்வரன் மேடையேறினான். 20 10
ஆனபோதும், 10 6 ஆனபோதும் சர்வேஸ்வரன் தன் இடத்தை உறுதியாகப் பற்றியிருந்தான். ஆறு
மாதங்கள், அடுத்தடுத்து கடுமையாகிக்கொண்டே போன போட்டிச் சூழல்கள். அத்தனைக்கும் முகம்
கொடுத்தது அவனுடைய வாஞ்சைக் குரலும், தாயின் வைராக்கிய மனமும்.
‘தேனாற்றங்கரையில் தெய்வீகக் குரலில் நான்தான்
ஒரு பாட்டிசைத்தேன்’ இது சர்வேஸ்வரன்.
‘தினந்தோறும் இரவில், நடுஜாம இருளில் நான்தான்
அதைக் கேட்டிருந்தேன்’ இது சின்னக்குயில் சித்ரா. கேசட்டில் எஸ்பிபிக்குப்
பதிலாகச் சின்னக்குயிலோடு சேர்ந்து பலமுறை நாம் பாடி, அப்படி ஒரு மேடயைக் கற்பனை
செய்து கழிந்த நாட்கள்தான் எத்தனை எத்தனை? காலங்காலமாய் நம்முள்ளே இருந்த ஒரு
கனவுக்கு ஒரு சிறுவன் உயிர்கொடுத்துவிட்டான் என நிறைந்தது மனம்.
‘ஆ ராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா,
சொந்தங்கள் தேடினாலும், தந்தை தாய் ஆகாதம்மா,
என்னோட தாய் தந்த பாட்டு தானம்மா.’ என்று
குழந்தை பாடியதுதான் எத்தனை பொருத்தம்! எஸ்பிபி இருந்திருந்தால் உன்னைக்
கொண்டாடித் தீர்த்திருப்பார் மகனே! என நமக்குள் மனம் சொல்லிக்கொண்டது.
“கட்டுத்தறிக் காள நானே, கண்ணுக்குட்டியானேனே!
தொட்டுத் தொட்டுத் தென்றல் பேச, தூக்கம்
கெட்டுப் போனேனே!
சொல் பொன்மானே!’ என அவன் உச்சத்துக்குப் போனபோது
நம்உடலெல்லாம் சிலிர்த்தது. “ஒரு சின்ன பிடி கிடைச்சிட்டா, அதை அப்படியே எங்கேயோ
கொண்டுபோயிடுற டா, அப்பப்பா ஹெவன்” என அன்றைக்கு பாடகி அனுராதா ஸ்ரீராம் சொன்னபோது
“ஆமாம் ஆமாம்” என ஆர்ப்பரித்தது மனம்.
டிஆர் முன்னிலையில், ‘உயிரே’ என்று அவன் தொட்ட
உச்சத்தில் தங்கள் மூச்சே நின்றுவிடுவதாய் உணர்ந்தார்கள் நடுவர்கள். ‘பட்டுக்
கிளியோஓஓஓஓ’ என்கிற அவன் குரல் ததும்பலை ஓரிரு நாட்களுக்குப் பயிற்சி செய்தபடியே
இருந்தோம் நாம்.
அதுவரை நாம் கேட்டுச் சிலிர்த்த
பாடல்களுக்கெல்லாம் ஒரு புதுவித வண்ணத்தை அவன் குரல் கொண்டுவந்து சேர்த்தது.
‘மேய்ப்பன் இல்லாத மந்தை, வழிமாறுமே’ என அவன்
பாடியபோது, “இன்னும் எத்தனை சர்வேஸ்வரன்கள் இந்த நிலத்தில், இவன் தாயைப் போன்ற ஒரு
மேய்ப்பனுக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறார்களோ” என்கிற தவிப்பு நம்மை ஆட்கொண்டது.
தாயின் மடியைப் போலவே, வாஞ்சையோடு வரவேற்று,
திறமையை அங்கீகரித்து, சர்வேஸ்வரனை ஏந்திக்கொண்ட இன்னொரு மடி விஜய் தொலைக்காட்சி.
ஒவ்வொரு மேடையிலும் உடனிருந்து, தன் அன்புத் தொடுகையால் அவனை நெறிப்படுத்தி, அவனுக்குள்
பிரவாகித்த இசை ஊற்றின் திசை சமைத்தார் பயிற்றுநர் அபினயா.
நடுவர்க் குழாமின் பாடகி சித்ரா, இசையமைப்பாளர்
இமான், பாடகி அனுராதா ஸ்ரீராம், பாடகி மஞ்சரி என அனைவரின் சொற்களிலும் துளிப்
பரிதாபம் இல்லை, மாறாகப் பரிவு இருந்தது. அச்சச்சோ இல்லை, அன்பு அதிகம் இருந்தது.
நிகழ்ச்சித்
தொகுப்பாளர்களான மாகாபாவும் பிரியங்காவும், சர்வேஸ்வரனை சக போட்டியாளராக மட்டுமே
கையாண்டது மனதுக்கு நிறைவாய் இருந்தது. “எல்லா ஜட்ஜும் எழுந்திரிச்சு உன்னைக்
கைதட்டிப் பாராட்டுனாங்க” என உரிய புரிதலுடன் ஒவ்வொரு முறையிம் நிகழ்நேரச் சூழலை
அவனுக்கு விளக்கிச் சொல்லியபடியே இருந்தார்கள். எந்தத் தருணத்திலும், எவர்
முன்னிலையிலும், சிறுவனுடைய பார்வையின்மையைச் சுட்டாத, பின்னணியில் கழிவிரக்க
இசைக்கலவையை இட்டு நிறைக்காத நிகழ்ச்சி வடிவமைப்புக்குக் கோடான கோடி நன்றிகளும்
பாராட்டுகளும்.
நிகழ்ச்சியின் சக போட்டியாளர்களான பிற
குழந்தைகள் சர்வேஸ்வரன் வெற்றிபெற வேண்டுமென வாழ்த்தினார்கள். சமத்துவம்
இலக்கென்றபோதும், அதற்கு முதலில் தேவை சமூகத்தின் ஒத்திசைவு என்பதையே விஜய்
தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் மேடை உணர்த்தியது.
தன் வீட்டின் ஓர் மூளையி்ல் அமர்ந்து, தான் கேட்டுச் சிலிர்த்த பாடல்களுக்குத் தன்
குரலால் புது வண்ணம் தீட்டி, மூன்றாவது பரிசைத் தட்டிச் சென்றிருக்கிற சர்வேஸ்வரனை
உச்சி முகர்ந்து வாழ்த்துகிறோம்.
சிறுவனின் திறமையை அங்கீகரித்து, அவனுடைய புகழை இந்த உலகத்துக்கு
வெளிச்சமிட்டுக்காட்டிய விஜய் தொலைக்காட்சிக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்
வாழ்த்துகளும்.
மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் நிறைந்த இந்தச்
சாதனைத் தருணம் வாய்த்திட வேண்டும் என்கிற நினைப்பை ஒவ்வொருநாளும் தன் நினைவிலும்
கனவிலும் சுமந்து, ஈன்ற பொழுதின் இன்று பெரிதுவந்துநிற்கிற சர்வேஸ்வரனின் தாய்
சித்ராவை என்ன சொல்லிப் பாராட்டுவது என்று தெரியவில்லை. அவரை வாழ்த்தும் அதேசமயம்,
இன்னும் அவருக்காய் காத்திருக்கும் சவால்களையும் மனம் கணக்கிட்டுப் பார்க்காமல்
இல்லை.
அதிரும் கைதட்டல்களும், ஆர்ப்பரிப்புகளும் சில
நாட்கள் நீடிக்கலாம். எல்லாம் அடங்கி, அமைதியான ஒருநாளில், “மகளே! சோர்ந்துவிடாதே,
நாங்கள் இருக்கிறோம்” எனத் தோள்தட்ட, துயர் துடைக்க சில கைகளேனும் நீளக்கூடும்.
அணைக்கின்ற அந்தக் கரங்களில் முதல்க்கரமாய் இருக்க வேண்டியது அரசின் கடமை.
சிறுவனின் சாதனை குறித்து, மாற்றுத்திறனாளிகள்
நலத்துறையின் அமைச்சரான மாண்புமிகு தமிழக முதல்வரின் மேலான கவனத்திற்கு மாற்றுத்திறனாளிகள்
நலத்துறை உயர் அதிகாரிகள் கொண்டுசெல்ல வேண்டும். எதிர்வரும் டிசம்பர் 3, அனைத்து
நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தில் முதல்வரின் பாராட்டுகளைப் பெற துறை சார்பில்
உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
சிறுவன் சர்வேஸ்வரனுக்கு இசையோடு இணைந்த
பாதுகாப்பான சிறப்புக்கல்வி வழங்கப்பட வேண்டும். அதற்கான ஊக்கமும் ஆக்கமும் வழங்க
வேண்டியது அரசின் தலையாய கடமை. பரிசுத்தொகையாகச் சிறுவனுக்குக் கிடைத்திருக்கிற
ரூ. 500,000-கு முழுவதும் வரிவிலக்கு கிடைத்திட அரசு வழிவகை செய்ய வேண்டும்.
சர்வேஸ்வரனைப் போன்ற பல பார்வைத்திறன் குறையுடைய
குழந்தைகள் தங்கள் தனித்திறமைகளை மேம்படுத்திக்கொள்ள அரசு சிறப்புப்பள்ளிகளில் பல
வாய்ப்புகளை ஏற்படுத்திட வேண்டும். அதன் முதல்ப்படியாக, அரசு சிறப்புப்பள்ளிகளில்
காலியாக இருக்கிற 9 இசை ஆசிரியர்ப் பணியிடங்களைத் தகுதியுடைய பார்வையற்றவர்களைக்
கொண்டு உடனடியாக நிரப்பிட வேண்டும்.
இறுதியாக, ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடு உடைய
மாணவர்களுக்கான உண்டு உறைவிடப் பள்ளிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடங்கப்பட
வேண்டும். அந்த விடுதிகளில் வாய்ப்புகள் ஏதுமற்ற, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும்
குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்குவதோடு, ஒரு குறிப்பிட்ட காலம் வரை, குழந்தைகளின்
அம்மாக்களுக்கும் இடமளித்து, குழந்தைகளின் சீரான ஆளுமை வளர்ச்சியை உறுதிப்படுத்திட
வேண்டும். கூடுதலாக, குழந்தைகளைப் பேணும் அம்மாக்களின்
உடல்நலம் மனநலப் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.
‘கலங்காதே ராசா! காலம் பிறக்கும்,
நல்லிரவு போன பின்னே வெள்ளி முளைக்கும்’
வெள்ளி முளைத்திருக்கிறது, வெளிச்சமான பகலை
அந்தக் குழந்தைக்குப் பரிசலிக்கட்டும் காலம்.
***ப. சரவணமணிகண்டன்
கருத்துகள் (3):
Post a Comment