நேரடியாக முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

தொடர்: விரட்டும் இருளும் விடியல் வேட்கையும்! (16) கடவுள் இருப்பது உண்மைதான்: S. அஷோக் பாலா

graphic: அசோக் பாலா அவர்களின் புகைப்படம்

தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க

உங்களுக்கு இன்னொரு பஞ்சாயத்தை சொல்றேன். ஏண்டா உனக்கு வேற வேலையே இல்லையான்னு நீங்கள் கேக்குறது கேக்குது. என்ன பண்றது சில நேரங்களில் பிரச்சனையை நான் தேடிப் போவேன். பல நேரங்களில் பிரச்சனை என்னை தேடி வரும். இந்த பிரச்சனை இதுவரைக்கும் நான் சந்திச்சிடாத ஒரு பிரச்சனை.

 

ஒரு நாள் நான் என் வீட்ல நைட்டு சாப்பிட்டுக்கிட்டிருந்தேன். அப்போ பாலு அண்ணே வா பாலத்துக்கு போகலாம்னு கூப்பிட்டான். நான் வரலன்னு சொல்லியும் வந்தே ஆகணும்னு என்னை இழுத்துட்டு போனான். கூட பெரியவனும் வந்தான். மூணு பேரும் போய் பாலத்துல உக்காந்து கதை பேச ஆரம்பிச்சோம். நல்லாதான் போய்கிட்டு இருந்தது.

 

அந்தப் பாலத்தைத் தாண்டித்தான் அடுத்த ஊருக்கு போகணும். அது கொஞ்சம் பெரிய ஊர். எங்கள தாண்டி ஒரு ஸ்கூட்டி வேகமா போய் திடீர்னு பிரேக் அடிச்சது. நான் சத்தம் கேட்டு இவங்க ரெண்டு பேர்ட்டையும் யாருடா என்ன ஆச்சுன்னு கேட்டேன். அவங்களும் தெரியலன்னு சொன்னாங்க. திடீர்னு ஒரு குரல், "என்னடா என்ன கிண்டல் பண்றீங்கலா?"ன்னு கேட்ட உடனே மூணு பேருமே அதிர்ச்சி ஆயிட்டோம். "உங்கள பத்தி பேசலைன்னு" நான் சொல்லும்போது, "செருப்பால அடிப்பேன்டான்னு" அந்த ஸ்கூட்டில இருந்த லேடி சொல்ல எனக்கு பயங்கர ஷாக். "மரியாதையா பேசுண்ணு" சொல்லிக்கிட்டே நான் கீழ இறங்கினேன். அதுக்குள்ள பாலு பயந்துட்டான், பெரியவனும் "அண்ணே வா போகலாம்னு" கூப்பிட, அதுக்குள்ள அந்த ஸ்கூட்டி போயிடுச்சு.

 

என்னால அதை நினைச்சு கூட பாக்க முடியல. என் வாழ்க்கையில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததே இல்லை. நான் கண்ணு தெரிஞ்சு வாழ்ந்த காலத்திலேயே நான் ஒரு பொண்ண கிண்டல் பண்ணினேன், தப்பா பேசினேன் அப்படின்னு யாருமே சொல்ல முடியாது. ஆனா கண்ணு தெரியாத போது ஒருத்தி இப்படி பேசிட்டாலேங்கிறது என்னால ஏத்துக்கவே முடியல. எதையுமே வீட்ல சொல்லாத நான் இந்த விஷயத்தை உடனே வந்து என் வீட்ல சொல்லிட்டேன். மத்த பசங்களுக்கும் போன் பண்ணி அது யாருன்னு விசாரிக்க சொன்னேன். கொஞ்ச நேரத்திலேயே அது யாருன்னு தகவல் வந்துடுச்சு.

 

அது பொண்ணு இல்ல... ஐயோ நான் வேற ஏதாச்சும் தப்பா எழுதிட்டா அசோக் பாலா கண்ணியம் இல்லாம எழுதிட்டான்னு பெண்ணியவாதிகள் சொல்லிடுவாங்க. அதனால கொஞ்சம் மரியாதையோட அந்த கேடிய, சாரி... லேடின்னு" சொல்றேன். அந்த லேடி யாருன்னு எனக்கு தெரியும். அவளா பேசுனதுன்னு நினைச்சு நினைச்சு நைட்டெல்லாம் நான் தூங்கல. காலையில நான் எந்திரிச்ச உடனே பாலத்துல சத்தம் கேட்டுச்சு. அந்த சத்தத்தை கவனிக்கும்போதுதான் தெரிஞ்சது, அந்த லேடி வரும்போது அந்த லேடிய மறைச்சு பெரியவனோட அப்பா கார்த்தி சித்தப்பாவும் அவங்க அம்மாவும் சண்டை போட்டுகிட்டு இருக்காங்கன்னு.

 

உடனே நான் பாலத்தை நோக்கி போக ஆரம்பிச்சிட்டேன். என் கடையை தாண்டித்தான் போகணும். என் அப்பா என்னை பாத்துட்டாரு" போகாத போகாதன்னு" கூப்பிட்டுக்கிட்டே இருந்தாரு. ஆனா நான் அதையெல்லாம் காதுல வாங்காம பாலத்துக்கு போயிட்டேன். யாரு எங்க நிக்கிறான்னு எனக்கு தெரியல. அவங்க பேசுறது மட்டும் கேட்டுகிட்டு நின்னேன். "இவனுங்க ரெண்டு பேரும் சின்ன பசங்க, அவனுக்கு கண்ணு தெரியாது, இவங்க மூணு பேரும் உன்னை கிண்டல் பண்ணாங்களான்னு? கேட்டாங்க.

 

"நான் இவங்கன்னு தெரியாது, வேற யாரோன்னு நினைச்சுதான் பேசிட்டேன்னு" அந்த லேடி சொல்லும்போதுதான் தெரிஞ்சது, என் முன்னாடிதான் அந்த லேடி நிக்குதுன்னு. "அடிங்கொய்யால நீ இங்கதான் நிக்கிறியான்னு? கடுப்பான நான், "இப்ப நான் உன்னை செருப்பால அடிக்கவான்னு? கேட்டுட்டேன். அவ்வளவுதான், அப்புறம் என்ன... "ஒரு வயசுக்கு வந்த பொண்ண செருப்பால அடிப்பேன்னு சொல்றீங்கன்னு" அழுதுகிட்டு, அவங்க வீட்டுக்கு போன் பண்ணி "என்னை செருப்பால அடிக்க வந்துட்டாங்கன்னு" சொல்ல, சின்ன பிரச்சனை பெரிய பிரச்சனையாகி, பொண்ணு பிரச்சனை ஜாதி பிரச்சனையா மாறிடுச்சு. என்னை ரெண்டு பேரு வீட்டுக்கு இழுத்துட்டு வந்துட்டாங்க.

 

எங்கப்பா கொந்தளிக்க ஆரம்பிச்சிட்டாரு. "உனக்கு தேவையா, நீ ஏன் அங்க போன, ஏன் பேசிநேண்ணு" கெட்ட வார்த்தைல திட்டுனாரு. என் மேல தப்பு இல்லன்னு தெரிஞ்சும் எங்க அப்பா ஏன் பேசினாருண்ணு தெரியுமா? கடை வச்சிருக்கவங்க யாரையும் பகச்சிக்க கூடாதுங்கிற தொழில் தர்மம். வேற ஒன்னும் இல்ல. இன்னும் சில பேர் வந்து "உங்களுக்கு இது தேவையா தம்பி, உங்க தகுதிக்கு நீங்க போய் பேசலாமா, சாக்கடையில் கல் எறிஞ்சா அது நம்ம மேலதான் படும்"ன்னு அட்வைஸ் வேற.

 

அங்க கார்த்தி சித்தப்பா பிரச்சனையை பெருசாக்கிட்டு போயிட்டான்னு அவர் கத்த... உண்மையிலேயே அன்னைக்கு எனக்கு கண்ணு தெரிஞ்சிருந்தா பெரிய கலவரமே பண்ணி இருப்பேன். என் உயிரை விட என் மானம் பெருசு. அப்பவும் என்னை தேடி என் வீட்டுக்கு அவனுங்க வந்து இருந்தா, என் பக்கத்துல ஒரு பெரிய இரும்பு ராடு இருந்துச்சு. எடுத்து கைக்கு கிடைக்கிறவனையெல்லாம் அடிச்சு காலி பண்ணிடலாமான்னு கூட நினைச்சேன். எனக்கு கண்ணு தெரியலன்னு ரொம்ப வருத்தப்பட்டேன். என் மேல தப்பு இருந்தா நான் மன்னிப்பு கேட்க தயங்க மாட்டேன். அதுவே தப்பு இல்லேன்னா நான் யாருகிட்டயும் இறங்கி போக மாட்டேன். கடைசியா அந்த பிரச்சனை பலர் பஞ்சாயத்து பேசி முடிந்தது. ஒரு பொண்ணு நினைச்சா ஒரு பிரச்சனையை எப்படி எல்லாம் மாற்றலாம்கிறதை அப்போ தெரிஞ்சுக்கிட்டேன். இன்னும் சிலருடைய பிரச்சனையை தீர்த்து வைக்கலாம்னு உள்ள போய் பிரச்சனைக்குள்ள மாட்டிகிட்டு அவமானப்பட்ட கதையெல்லாம் இருக்கு. அதையெல்லாம் எழுத முடியாது.

 

சரி, அடுத்து உங்களுக்கு ஒரு சுவாரஸ்யமான விஷயம் சொல்லவா? ஒரு நாள் நான் திருவாரூர்ல என் தம்பி கூட இருக்கும்போது அவன் வாட்ஸ்அப்ல ஒரு ஆடியோ பிளே பண்ணி காட்டினான். சென்னையைப் பற்றி மூச்சு விடாம சென்னையோட பெருமைகளை சொல்ற மாதிரி இருந்தது அந்த ஆடியோ. "இது மாதிரி நீயும் உன் ஊரை பத்தி பேசுண்ணு" சொல்ல, நான் விளையாட்டா அது மாதிரி பேச ட்ரை பண்ணுனேன். எந்த இடத்துல மூச்சு எடுக்குறேன்னு தெரியாத மாதிரி நான் ஸ்டாப்பாக அந்த ஆடியோ இருக்கும். அதைக் கேட்ட எல்லோரும் "எப்படி பேசின, எப்படி பேசிநேண்ணு" ஆச்சரியப்பட்டாங்க.

 

அதுக்குப் பிறகு நான் ஒவ்வொரு டாபிக்ல அதே போல பேச ஆரம்பிச்சேன். வெளிநாட்டு வாழ்க்கையை பற்றி நான் ஒரு அஞ்சு நிமிஷம் பேசின ஒரு ஆடியோ பயங்கர வைரல். என்கிட்ட வாட்ஸ்அப் இல்ல, ஆனாலும் நான் ரெக்கார்ட் பண்ணி பசங்களுக்கு ப்ளூடூத் வழியாக அனுப்புவேன். அவங்க அதை வாட்ஸ்அப்ல ஷேர் பண்ணுவாங்க. அப்படி வெளிநாட்டு வாழ்க்கையை பத்தி நான் பேசின ஆடியோ சிங்கப்பூர், மலேசியா, துபாய், புருனை, குவைத், பகரைன், லண்டன், சவுதி... இப்படி பல நாட்டுல அது வைரல் ஆனது. இது எப்படிடா உனக்கு தெரியும்னு கேக்குறீங்களா? நான் சொன்ன எல்லா நாட்டிலும் என் தம்பிகள், சொந்தக்காரங்க இருக்காங்க.

 

அந்த ஆடியோ கேட்ட எல்லாருமே அழுதாங்களாம். குவைத்தில் இருந்த என் அத்தை பையன் மதன் எல்லோரிடமும்" என் மாமா பையன் தான் அதை பேசினது, அவனுக்கு கண்ணு தெரியாதுன்னு" சொன்னபோது, யாருமே நம்பலையாம். "அது எப்படி வெளிநாட்டை பத்தி தெரியாத ஒருத்தரால இப்படி பேச முடியும், வாய்ப்பே இல்லைன்னு" சொன்னாங்களாம்.

 

அதுல நான் பேசுனது முழுக்க முழுக்க கடன் வாங்கி ஒருத்தன் வெளிநாடு போய் எப்படி எல்லாம் கஷ்டப்படுறாங்க, கடைசியா திரும்பி வரும்போது அவனோட நிலையை பத்தி பேசி இருந்தேன். அதுக்கு காரணம் வெளிநாடுகளில் வேலை பார்த்த என் பசங்க சொன்னதுதான். அது மட்டும் இல்ல, அந்த ஆடியோவை என் பேரை மட்டும் கட் பண்ணிட்டு யாரோ யூடியூப்ல அப்லோட் பண்ணி இருந்தாங்க. அது ஒன்றரை லட்சம் வியூஸ் தாண்டி போயிருந்தது. உண்மை சொல்லணும்னா அதுக்குப் பிறகுதான் சில பேராவது அசோக்குக்கு கொஞ்சோண்டு அறிவு இருக்குன்னு நம்புனாங்க. நீங்களும் நம்புங்க, உங்க அளவுக்கு நான் அறிவாளி இல்ல, ஆனா கொஞ்சம் அறிவு உள்ளவன் தான்.

 அந்த வீடியோவைக் கேட்க இந்த இணைப்பைச் சொடுக்குங்கள்.

இப்போ உங்களுக்கு ஒரு கலகலப்பான விஷயத்தை சொல்லவா? என் வீட்ல எனக்கு பொண்ணு பார்த்தாங்க. எங்களுக்கு தெரிஞ்சவங்க ஒரு ஃபிராடு கல்யாண புரோக்கரை கூட்டிட்டு வீட்டுக்கு வந்தாங்க. என் வீட்ல ஒரு பெரிய காமெடியே நடந்துச்சு. என்னை யாரும் எதுவும் கேட்கல. "பொண்ணு பிளஸ் டூ படிச்சிருக்கு, நான் கல்யாணம் பண்ணி வச்சிடறேன்" அப்படின்னு சொல்லி அந்தப் பொண்ணோட ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை என் வீட்டுல காட்ட... அப்புறம் என்ன, என் அக்காவை எல்லாம் வர வச்சு அந்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை பார்த்து என் தேவதையை பத்தின என் கனவை விட பெரிய கனவா கண்டாங்க.

 

அந்த பொண்ணு பிளஸ் டூ படிச்சு பல வருஷம் ஆயிருக்கும்னு தானே நீங்க நினைச்சீங்க? அதுதான் இல்ல, அந்த பொண்ணு அப்பதான் பிளஸ் டூ முடிச்சதாம். உண்மைய சொல்லணும்னா அது பொண்ணு இல்ல,சிறுமி! கடைசியா அந்த புரோக்கர் என்கிட்ட வந்து, "யாராவது வந்து கேட்டா எனக்கு லேசாத்தான் கண்ணு தெரியாதுன்னு மட்டும் சொல்லுங்க, மத்ததை நான் பாத்துக்குறேன்னு" சொல்ல, நான் முறைச்சு பார்த்தேன். அவ்வளவுதான், அந்த புரோக்கர் வெளியில போய், "தம்பி எதுவுமே பேச மாட்டேங்குதுண்ணு" சொல்லிட்டு, ஆயிரம் ரூபாயை ஆட்டைய போட்டுக்கிட்டு போனவன் போனவன்தான்.

 

என் அம்மாவோட வேலையே, "யாரை பார்த்தாலும் என் பிள்ளைக்கு ஒரு பொண்ணு இருந்தா சொல்லுங்க, அவனை பார்த்துக்கிற மாதிரி இருக்கணும், அவனை பைக்ல உட்கார வச்சு கூட்டிட்டு போகுற மாதிரி ஒரு பொண்ணு" கேட்பாங்க. பின்குறிப்பு: நம்ம ஜாதியா இருக்கணும். இப்படித்தான் எல்லார்கிட்டயும் சொல்லிக்கிட்டு இருப்பாங்க. இப்படித்தான் எனக்கு என்ன தேவையின்னு என் வீட்டுக்கு தெரியாது.

 

"ஏண்டா அப்படினா உனக்கு கல்யாணம் பத்தின ஆசை இல்லையான்னு? கேட்டா... நீங்க ராமன் தேடிய சீதை படம் பார்த்து இருக்கீங்களா? நான் கண்ணு தெரிஞ்சு ரசிச்சு பார்த்த படம் அது. அதுல வர நெடுமாறனுக்கு தமிழிசை போல, எனக்கு என் தேவதை வந்தா நல்லா இருக்குன்னு நினைச்சிருக்கேன்.

 

"நீ திருந்தவே இல்லையாடான்னு" நீங்க திட்டறது கேக்குது. ஹலோ... வந்தா நல்லா இருக்குன்னு நினைச்சேன். உண்மை சொல்லணுமா? கல்யாணத்தை பத்தின ஆசையெல்லாம் குறைஞ்சிடுச்சு.

 

நான் எப்படி வாழ்ந்தேன் தெரியுமா? பார்வை இல்லாம போய் பல வருடங்கள் ஆகியும் என் எதிர்காலத்தை மட்டும் நான் தேடிக்கிட்டே இருந்தேன். பார்வை இருக்கும் போதே தெரியாத என் எதிர்காலம், பார்வை இல்லாம போன பிறகா தெரியப்போகுது என்கிற எண்ணமும் வந்து வந்து போனது. பசிக்குதுன்னு சொல்றதுக்கு முன்னாடியே என் வீட்ல எனக்கு சாப்பாடு ரெடியா இருக்கும். நான் ஒரு வேலைக்கு போய் மாதம் ஐம்பதாயிரம், ஒரு லட்சம் சம்பளம் வாங்குனா என் வீட்டுல உறவுகளிடம், நண்பர்களிடம் என்ன மரியாதையும் அக்கறையும் அன்பும் இருக்குமோ, அதுல ஒரு சதவீதம் கூட குறையாம எனக்கு இருந்தது.

 

ஆனாலும் என்ன, பல நேரங்களில் எல்லோரும் முட்டாளா, பாவமா பார்க்கிற பார்வையும் இருந்தது. நான் முட்டாள் இல்ல, நான் எதுக்கும் லாயக்கில்லாதவன் இல்லன்னு கத்தனும் போல இருக்கும். நான் ஒரு மீன் தொட்டியில் வளர்க்கப்பட்ட மீன் போலதான். மீன் தொட்டிக்குள் இருக்கிற மீன் எத்தனை வருஷம் ஆனாலும் அந்த தொட்டிக்குள்ளேயே சுத்தி சுத்தி வரும். உணவு போடும்போது அதை சாப்பிட்டுிட்டு மீண்டும் சுத்திகிட்டே இருக்கும். அதை பார்க்கிற எல்லோரும் ரசிப்பாங்க, அந்த மீன் எவ்வளவு சந்தோஷமா நீந்திட்டு இருக்குன்னு சொல்லுவாங்க.

 

உண்மையிலேயே அதை வெளியில் இருந்து பார்க்கிறவங்களுக்கு அழகாத்தான் இருக்கும். ஆனா அந்த மீனுக்குத்தான் தெரியும், இந்த கண்ணாடி தொட்டி உடைஞ்சிடாதா, நாம சுதந்திரமா ஒரு நாளாவது நதியில நீந்திட மாட்டோமாங்கிற அதோட ஏக்கமும் வலியும் யாருக்கும் தெரியாது. அந்த மீன் போலதான் நானும் வாழ்ந்தேன். எனக்கான நதியை, எனக்கான வானத்தை, எனக்கான உலகத்தை யாராவது காட்டிட மாட்டாங்களா, என்னை மீட்டிட மாட்டாங்களான்னு எனக்குள்ளேயே ஏங்கி தவிச்சு, துடிச்சு, யாருக்கும் தெரியாம மறைச்சு, எல்லார்கிட்டயும் சிரிச்சு வாழ்ந்துட்டு இருந்தவன் தான் நான்.

 

சாகணும்னு நினைச்சு என் சாவை நானே தள்ளிப்போட்டு, தள்ளிப்போட்டு... கிட்டத்தட்ட ஏழு வருஷம் எதுக்காக வாழ்றேன்னே தெரியாம வாழ்ந்தேன். எல்லாருக்கும் ஆறுதலா, ஆதரவா, ஒரு டைம் பாஸா இருந்தவன் நான்.

 

"ஏண்டா திரும்பவும் சோகத்தை புலியிறன்னு" கேட்காதீங்க. இப்பதான் நீங்க எதிர்பார்த்த மெயின் பிக்சர் வரப்போகுது. கடவுள் இல்லைன்னு யாருங்க சொன்னா? ஐயையோ... நான்தான் சொல்லி இருக்கேன்! இப்ப மாத்திக்கிறேன்... கடவுள் இருக்கு, நிறைய கடவுள் இருக்கு. ஆனா நான் இப்பவும் உங்களிடம் இருந்து மாறுபடுறேன். நீங்க நம்புற, நினைக்கிற கடவுளை நான் இப்பவும் ஏத்துக்கல, ஒத்துக்கல.

 

"ஏண்டா குழப்புறன்னு" கேக்குறீங்களா? இனி நான் வணங்கும் கடவுள்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துவேன், ஒவ்வொன்னா. சரி, இப்போ விஷயத்துக்கு வரேன்.

 

ஒரு நாள் என் சின்ன மாமா, அவங்க பேரு ரமேஷ். எனக்கு அசோக்னு பேர் வச்ச என் சின்ன மாமா எனக்கு போன் பண்ணாங்க. "தம்பி, உனக்கு ஒருத்தர் போன் பண்ணுவாரு, பேசுண்ணு" சொல்லிட்டு வச்சிட்டாங்க. வேற எதுவும் சொல்லல. என் மாமா சொல்லி ரெண்டு மூணு நாள் வரைக்கும் எனக்கு யாரும் போன் பண்ணல. 2018 பிப்ரவரி 17... இந்த நாளை எப்படி என்னால மறக்க முடியும்? என் பிறந்தநாள், நான் இறந்த நாள், என் வாழ்க்கையில நான் மறக்க முடியாத நாள் எப்படியோ, அதே போலதான் நான் மீண்டும் உயிர்த்தெழுந்த நாள்!

 

இந்த பிப்ரவரி 17 அன்னைக்குத்தான் எனக்கு ஒரு போன் வந்தது. "அசோக்கா?"ன்னு கேட்டாங்க. நான் "ஆமாம் சொல்லுங்க"ன்னு சொன்னேன். அந்தக் குரல், "நீங்க parshshaliyaa டோட்டலியான்னு? கேட்டது. சத்தியமா அந்த நிமிஷம் வரைக்கும் அந்த ரெண்டு வார்த்தையையும் நான் கேட்டதே கிடையாது. "அப்படின்னா என்ன?"ன்னு கேட்டேன். "உங்களுக்கு பார்வை கொஞ்சம் தெரியுமா இல்ல முழுசா தெரியாதான்னு? கேட்க, நான் எனக்கு முழுசா தெரியாதுன்னு சொன்னேன்.

 

என்னை பத்தி எல்லாத்தையும் கேட்டுட்டு, "நீங்க திரும்ப படிக்கலாமே, படிக்கிறீங்களா?"ன்னு அந்தக் குரல் கேட்டது. நான் சிரிச்சேன், "இத்தனை வயசுக்கு மேல என்னால எப்படி படிக்க முடியும்னு? கேட்டேன். "அதெல்லாம் முடியும், சென்னையில ஒரு அண்ணா இருக்காங்க, அவங்ககிட்ட உங்க நம்பரை கொடுக்கிறேன், அவங்க உங்களோட பேசுவாங்க. நீங்க திரும்ப படிங்க, அது மட்டும் இல்ல, சென்னையில N.I.V.H. சென்டர் ஒன்னு இருக்கு, அங்க போய் நீங்க மூணு மாசம் தங்கி I.L.S. கோர்ஸ் பண்ணுங்க" அப்படின்னு சொன்ன அந்த குரலை, அந்த குரலுக்கு உரியவரை நான் உங்களிடம் "என் கடவுள்"ன்னு சொன்னா அது சரிதானே?

 

எனக்கு முதல் வழியை காட்டிய கடவுள் அவர். ஒரு பார்வையற்றவர்! இன்னைக்கு அவர் என் சிறந்த நண்பர். ஆனாலும் என்னை மீட்டெடுத்த கடவுள் அவர். அவரோட பேரை சொல்லுடான்னு நீங்க கேட்கிறது கேக்குது... அவரோட பேர் அருள் மாதவன். என்னை விட வயசுல சின்னவர் தான். என்னை சுத்தி எத்தனை பேர் இருந்தும் ஒரு பார்வையற்றவரால்தான் நான் வெளிச்சத்துக்கு வந்தேன்.

 

சரி, அருளை எப்படி என் மாமா சந்திச்சாருன்றதையும் சொல்லிடறேன். ஆரம்ப சுகாதார நிலையத்தில் அருள் வேலை பார்க்கிறதை பார்த்துட்டு, என் மாமா, "போய் அருள் கிட்ட என் அக்கா பையன் வீட்டிலேயே இருக்கான், அவனுக்கு என்ன பண்றதுன்னு தெரியல" அப்படின்னு சொல்ல... அதை கேட்டுட்டு கடந்து போகாம, "அவர் நம்பர் கொடுங்க, நான் பேசுறேன்னு" சொல்லி என் நம்பரை வாங்கி இருக்காரு.

 

சரி, அருள் சொன்ன அந்த அண்ணன் எனக்கு எப்ப போன் பண்ணுவாருன்னு காத்துகிட்டு இருந்தேன். இனி என் வாழ்க்கையில் கிடைக்கப் போற எந்த வாய்ப்பையும் தவறவிடக்கூடாதுங்கிறதுல தெளிவாகவும் இருந்தேன். அன்னைக்கு முழுவதும் எனக்கு எந்த போனும் வரல. அடுத்த நாள் நைட் எனக்கு போன் வந்தது.

 

நீ நீந்த வேண்டிய நதி, நீ பறக்க வேண்டிய வானம், நீ வாழ வேண்டிய உலகம் இதுதான்ன்னு காட்ட வந்த கடவுள் எனக்கு போன் பண்ணி, என்னை பத்தின எல்லா விவரத்தையும் கேட்டாங்க. நான் தயக்கத்தோடையே, "இந்த வயசுக்கு மேல் படிக்க முடியுமான்னு? கேட்டேன். அப்போ அந்த போன் கால்லயே கான்பரன்ஸ்ல இருந்த சிலரை எனக்கு அறிமுகப்படுத்தினாங்க. ஒவ்வொருத்தவங்களும் தங்களுடைய வயசு என்ன, என்ன படிக்கிறோம் என்பதையும் சொன்னாங்க. நான் "சார்"ன்னு சொன்னதுக்கு, "சார்ன்னு சொல்லாத, அண்ணன்னு சொல்லு"ன்னு சொன்னாங்க.

 

அந்த அண்ணன்... நான் வணங்குற, வாழ்க்கை முழுக்க வணங்கப்போற என் கடவுள்... திரு மேனுவல் ராஜ் அண்ணா!

graphic: மேனுவல்ராஜ்
 அண்ணா என்கிட்ட சில கேள்விகளையும் கேட்டாரு. "யாராவது காசு கொடுத்தா வாங்குவியானு? கேட்டாரு. ஒருபோதும் நான் வாங்க மாட்டேன்னு சொன்னேன். அது மட்டும் இல்ல, "நான் ஒரு நல்ல நிலைமைக்கு வந்தா உங்களைப் போல மத்தவங்களுக்கு நான் ஹெல்ப் பண்ணனும்னு" சொன்னேன். "அதையெல்லாம் நான் பாத்துக்குறேன், நீ உன்னை பாரு போதும்" அப்படின்னு சொன்னாரு.

 

அடுத்த நாள் அண்ணனோட கான்ஃபரன்ஸ் கால்ல நான் போய் பார்த்தேன். அங்கே அஞ்சாறு பேரு படிச்சிட்டு இருந்தாங்க. அந்த கான்பரன்ஸ் காலிலேயே எனக்கான உலகத்தை அண்ணன் காட்டிகிட்டே இருந்தாரு. நான் என் அம்மா கிட்ட எல்லாம் போன்ல அவங்க படிக்கிறதை கேட்க வச்சேன். என் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையை அண்ணன் கொடுத்தார். திரும்பவும் இறந்து போன என் கனவுகளுக்கு உயிர் வந்தது.

 

அடுத்த ஒரு வாரம் அண்ணன் கிட்ட இருந்து போனே வரல, நானும் பண்ணல. மார்ச் 1... இந்த நாளை உடன்பிறப்புகள் மறக்க மாட்டாங்க, அதேபோலதான் என்னாலையும் மறக்க முடியாத நாள். ஏன் தெரியுமா? இந்த உலகத்தோட மிகச் சிறந்த ஒருவரோட பிறந்தநாள் அது! யாருன்னு சொல்லுங்க? வேற யாரு, நான்தான்!

 

சரி சரி, டென்ஷன் ஆகாதீங்க. என் பிறந்தநாள் அன்னைக்கு அண்ணனுக்கு போன் பண்ணினேன். "ஏ மகனே, நீ தொடர்ந்து வரணும், நீ ஏன் வராம போன?"ன்னு கேட்டாரு. "இனிமே நான் தொடர்ந்து வருவேன் அண்ணா"ன்னு சொல்லிட்டு, "இன்னைக்கு என் பிறந்தநாள், ஆசீர்வாதம் பண்ணுங்க அண்ணானு" சொன்னேன். அண்ணா, "உனக்காக ஜெபம் பண்றேன்னு" சொல்லிட்டு ஜெபம் பண்ணினார். என்னை பொறுத்த அளவு என்னோட கர்த்தர், கடவுள் அவர்தான்.

 

அதற்குப் பிறகு தொடர்ந்து அண்ணன் கிட்ட கான்பரன்ஸ் கால்ல கிளாசுக்கு போக ஆரம்பிச்சேன். அங்கேதான் எனக்கு நிறைய பார்வையற்ற நண்பர்கள் அறிமுகமானாங்க. அடுத்து N.I.V.H. போறதுக்கு அப்ளிகேஷன் போட்டேன். என் வீட்ல வழக்கம் போல "எப்படி தனியா அனுப்புறதுன்னு?" பயந்தாங்க. நான் தெளிவா இருந்தேன்... "நான் போறேன், நான் எதா இருந்தாலும் பாத்துக்குறேன்னு" சொன்னேன்.

 

சென்னையில சின்ன பாலு வேலை பார்த்துக்கிட்டு இருந்தான். அவனை N.I.V.H.-க்கு நேரிலேயே போய் பார்க்க சொல்ல... அவனும் நேரில் போய் பார்த்துட்டு வந்து எங்க அப்பாகிட்ட, "அண்ணனை அனுப்புங்க, அண்ணனை மாதிரி அங்க நிறைய பேர் இருக்காங்க, அது நல்ல இடம் தான்னு" சொன்னான்.

 

N.I.V.H.-யில் இருந்து என்னை வரச் சொல்லி அழைப்பு வந்தது. இனிமே கதையில என்ன சுவாரசியம் இருக்குன்னு கேட்கிறீங்களா? இனிமேதான் இருக்கு பல சுவாரசியமே! சொல்கிறேன் அடுத்த பகுதியில்.

***தொடர்புக்கு: ashokbala1387@gmail.com

பேச: 9626261773

www.thodugai.in

கருத்துகள் (0):

Post a Comment

தளத்தின் மேலே செல்ல