நேரடியாக முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

சட்டம்: உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னும் நீதிபதி பணியமர்த்தலில் ஒன்றரை ஆண்டு தாமதம்: குறைப்பார்வையுடைய பெண்ணுக்கு நீதி வழங்கிய உச்ச நீதிமன்றம்

                                                                        graphic நீதிமன்றம் சித்தரிப்புப் படம்
ராஜஸ்தான் நீதித்துறை சேவையில் சிவில் நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், குறைந்த பார்வையுடைய ரேகா ஷர்மா அந்தப் பதவியைப் பெறுவதற்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவரது மாற்றுத்திறன் சதவீதம் தொடர்பாக மருத்துவக் குழு மேற்கொண்ட புதிய மதிப்பீடே இந்தத் தாமதத்துக்குக் காரணமாக அமைந்தது.

 

என்ன நடந்தது?

 

ராஜஸ்தான் உயர்நீதிமன்றம், 2024 ஏப்ரல் 9 அன்று சிவில் நீதிபதி பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. மொத்தம் 222 காலிப் பணியிடங்களில், ஒன்பது பணியிடங்கள் வரையறுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்காக (Benchmark Disabilities) ஒதுக்கப்பட்டிருந்தன.

 

, குறைப்பார்வையுடைய பெண் ரேகா ஷர்மா, முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்று நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றார். இருப்பினும், ஆரம்பத்தில் அவர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படவில்லை. இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்துக்குச் சென்றது.

 

குறைந்தபட்சத் தகுதி மதிப்பெண்களைப் பெற்றிருந்த ரேகா ஷர்மா உள்ளிட்ட மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கும்படி உச்சநீதிமன்றம் 2024 மே 21 அன்று உத்தரவிட்டது. அந்த உத்தரவு பின்பற்றப்படாததால், 2025 ஏப்ரல் 15 அன்று, ரேகா ஷர்மாவை ராஜஸ்தான் நீதித்துறை சேவையில் சிவில் நீதிபதி, இளநிலைப் பிரிவில் நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

 

மருத்துவப் பரிசோதனையால் எழுந்த சிக்கல்:

 

இந்த நிலையில், நீதிபதி பதவிக்கான நியமன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ரேகா ஷர்மாவின் மருத்துவத் தகுதி பரிசோதிக்கப்பட்டபோது, ஜெய்ப்பூரிலுள்ள சவாய் மான் சிங் மருத்துவமனையின் மருத்துவக் குழு அவரது மாற்றுத்திறனை 30 சதவீதம் எனப் பதிவு செய்தது. ரேகா ஷர்மாவுக்கு, ராஜஸ்தான் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை 2020 நவம்பர் 2 அன்று வழங்கிய மாற்றுத்திறன் சான்றிதழில், அவரது பார்வைக் குறைபாடு 40 சதவீதம் எனப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

 

தற்போது அவருடைய மாற்றுத்திறன் பாதிப்பு 30 விழுக்காடு எனக் குறைந்துள்ளதால், அவர் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தகுதியற்றவர் என்றும் மருத்துவக் குழு குறிப்பிட்டது. இதனால், வரையறுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான (Benchmark Disabilities) இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அவரது நியமனத்துக்குத் தடை ஏற்பட்டது.

 

மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகிய ரேகா ஷர்மா

 

மருத்துவ மறுமதிப்பீடு காரணமாக நியமனம் நடைபெறாத நிலையில், ரேகா ஷர்மா 2026 செப்டம்பர் 19 அன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகினார். இடையில், தனது வேட்புமனுவை மீண்டும் பரிசீலிக்கவும், அல்லது புதிய மருத்துவப் பரிசோதனை நடத்துமாறு கோரி அவர் 2026 ஆகஸ்ட் 5 அன்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றப் பதிவாளர் ஜெனரலிடமும் மனு அளித்திருந்தார். ஆனால், அவருக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை.

 

உயர்நீதிமன்றத்தின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம்

 

இந்த விவகாரத்தில் 2026 அக்டோபர் 27 அன்று உச்சநீதிமன்றம் கடுமையான நிலைப்பாட்டை எடுத்தது. ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றுவதைத் தவிர்க்கும் நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய உச்சநீதிமன்றம், அந்த மனுவை “மிகவும் ஆதாரமற்றது” எனக் குறிப்பிட்டு நிராகரித்தது. மேலும், ரேகா ஷர்மாவின் நியமன நடவடிக்கைகளை நிறைவு செய்யுமாறு ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது

 

ரேகா ஷர்மாவின் வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதம் என்ன?

 

ரேகா ஷர்மா சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள் ராகுல் பஜாஜ், அமர் ஜெயின், அமர்த்தேஸ் மிஷ்ரா ஆகியோர், அந்த மருத்துவக் குழுவுக்கு அவரது மாற்றுத்திறன் சதவீதத்தை மீண்டும் கணக்கிடவோ அல்லது குறைக்கவோ அதிகாரம் இல்லை என்று தெரிவித்தனர். அந்தக் குழுவின் பணி, அவர் நீதிபதி பதவியின் கடமைகளைச் செய்ய மருத்துவ ரீதியாகத் தகுதியானவரா என்பதை மதிப்பிடுவதுதான்; ஏற்கெனவே சட்டப்படி வழங்கப்பட்ட மாற்றுத்திறன் சான்றிதழில் உள்ள சதவீதத்தை மறுமதிப்பீடு செய்வது அல்ல என்பது அவர்களது வாதம். மேலும், 2020-ல் வழங்கப்பட்ட மாற்றுத்திறன் சான்றிதழை, மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மேல்முறையீட்டு நடைமுறையின் மூலம் யாரும் எதிர்த்து ரத்து செய்யவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். எனவே, அந்தச் சான்றிதழ் செல்லுபடியாகவே இருப்பதாக ரேகா ஷர்மா தரப்பு வாதிட்டது.

 

***பதிப்புரிமை: இந்தியன் எக்ஸ்ப்ரஸ்

 

மூலத்தைப் படிக்க இங்கே க்லிக் செய்யவும்

www.thodugai.in

கருத்துகள் (0):

Post a Comment

தளத்தின் மேலே செல்ல